தமிழர்கள் உட்பட தென்னிந்தியர்கள் வரதாபாய்க்காக கண்ணை மூடிக்கொண்டு வேலை செய்தனர். கள்ளச்சாராயத் தொழிலில் மட்டும் ஆண்டுக்கு 12 கோடி வருமானம் வரதாபாய்க்கு கிடைத்தாக செய்திகள் கூறுகின்றன. கள்ளச்சாராயம் முக்கிய தொழிலாக இருந்தாலும் வரதாபாய் வேறு வேலைகளிலும் ஈடுபட்டார். அவரை எதிர்த்த எவரையும் வரதாபாய் விட்டு வைத்ததில்லை. மும்பையின் முக்கியமாக சக்தியாக மெல்ல மெல்ல வரதாபாய் வளர்ந்து வந்தார்.
கள்ளச்சாராய வியாபாரத்துக்கு தனி இலக்கணம்
கள்ளச்சாராய வியாபாரத்துக்கென புது இலக்கணங்களை வகுத்தார் வரதாபாய். கள்ளச்சாராய வியாபாரத்தை அரசு நிர்வாகம் போல் நடத்தி வந்தார். கடத்தல் வேலைக்கு அதிக அளவில் ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தினார். ஒவ்வொரு பகுதியும் கள்ளச்சாராய விற்பனைக்கென ஒவ்வொருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஒரு போலீஸ் நிலைய எல்லைக்குள் 75 முதல் 130 சட்டவிரோத சாராயக் கடைகள் இருக்கும். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு கடை சார்பாக போலீசாருக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இதற்காகவே தனி பதிவேடு பராமரிக்கப்பட்டது. தண்ணீர் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் சாராயம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கடைக்கான குறிப்பிட்ட எல்லைக்குள் வேறு யாரும் கடை வைக்கக்கூடாது. எனவே ஒருவர் தொழிலில் மற்றவர் தலையீடு இல்லாமல் தொழில் நடந்தது.
வியாபாரத்துக்கான இலக்கணத்தை உருவாக்கினாலும் அதை நிர்வகிப்பதற்கு நம்பிக்கையானவர்கள் வேண்டும். கள்ளச்சாராய வியாபாரத்தின் நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள தனது உதவியாளர்கள் தாமஸ் குரியன் மற்றும் படாசோமா ஆகிய இரண்டு பேரை நியமித்தார் வரதாபாய். வியாபாரத்தில் போட்டியென எவரும் நுழைய முடியவில்லை. எல்லா போட்டியாளர்களையும் வரதாபாய் அடியோடு ஒழித்தார். ஊரில் இருந்து அதிகமாக ஆட்களை அழைத்து வந்து அரசு நிலத்தை அபகரித்து தனியாருக்கு விற்பனை செய்யவும் வரதாபாய் தயங்கவில்லை. தமிழர்களிடையே ஏதாவது பிரச்சினை என்றால் நேரடியாக சம்பவ இடத்திற்கே சென்று பேசி பிரச்சினையை தீர்த்து வைப்பதில் வரதாபாய் முதல் ஆளாக இருந்தார். எனவேதான் தமிழர்கள் மத்தியில் முடிசூடா மன்னனாக அவரால் திகழ முடிந்தது.
வரதாபாய் ஆட்கள் பாலியல் தொழிலும் ஈடுபட ஆரம்பித்தனர். இதில் வரதாபாய் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கவில்லை எனினும் அவரது ஆட்கள் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பது அவருக்கு தெரிந்தே இருந்தது என சொல்கிறார்கள்.
பிளாக் டீயும், வரதாபாயும்
வரதாபாய்க்கு அனைத்து போலீஸ் அதிகாரிகள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது. வரதாபாய் போலீஸ் நிலையம் வருகிறார் என்றால் போலீஸ் நிலையமே பரபரப்பாகி விடும். வரதாபாய் போலீஸ் நிலையத்திற்கு வருவதன் அடையாளமாக, அருகிலுள்ள டீக்கடையிலிருந்து ஒருவர் பிளாக் டீ கொண்டு வந்து உயரதிகாரியின் டேபிளில் வைத்துவிட்டு சென்றுவிடுவார். பணம் வாங்க கூட நிற்க மாட்டார். பிளாக் டீ வந்துவிட்டால் உயரதிகாரி தனது அறையிலுள்ள அடுத்தக்கட்ட அதிகாரிகளை வெளியில் போகச்சொல்லிவிடுவார். செய்து கொண்டிருக்கும் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு வரதாபாய் வரவுக்காக போலீஸ் அதிகாரிகள் காத்திருப்பர். ‘உன்னை சந்திக்க வருகிறேன். தேவையான ஏற்பாட்டை செய்’ என அறிவுறுத்தும் விதமாகவே பிளாக் டீ நடைமுறை கொண்டு வரப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வரதாபாய் எத்தனையோ குற்றச்செயல்களில் ஈடுபட்ட போதிலும் ஒரு வழக்கில் கூட அவரை சிக்க வைக்க முடியவில்லை. 1974-77 வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக ஒருவர் கூட சாட்சி சொல்ல முன்வரவில்லை. வேறு வழியில்லாமல் வரதாபாயை விடுதலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. போலீஸிலும் வரதாபாய்க்கு உளவாளிகள் இருந்தனர். வரதாபாய்க்கு அடிக்கடி தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். இதனால் வரதாபாயால் எளிதில் தப்பிக்க முடிந்தது.
வழக்குகள் இல்லைவரதாபாய்
1984ம் ஆண்டு ஒரு திருப்பம் நேர்ந்தது. ரத்னகிரி மாவட்டத்தில் கடலில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கப்பலிலிருந்து இறக்கி ஆம்புலன்சில் கடத்தி கொண்டு வந்த போது தாமஸ் குரியன் மற்றும் சோனா ஆகியோர் டிரைவருடன் பிடிபட்டனர். இருவரும் வரதாபாய் வீட்டிற்கு ரத்னகிரியில் இருந்து அடிக்கடி போன் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வரதாபாயை காஃபிபோசா (COFEPOSA) சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் மாநில உள்துறை அமைச்சகம் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி காஃபிபோசா கமிட்டியின் பரிந்துரையினை ஏற்க மறுத்தது. அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம் என்பதன் ஆங்கிலச் சுருக்கமே காஃபிபோசா.
1983ம் ஆண்டிலும் ஒரு சம்பவம். வரதாபாய் ஆட்கள் நடுக்கடலில் போலந்து நாட்டு கப்பலிலிருந்து மீன்பிடி படகில் கடத்தல் பொருட்களை இறக்கிய போது சுங்க வரி அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். இரண்டு படகுகளையும் வரதாபாய்தான் வாடகைக்கு வாங்கினார் என்று விசாரணையில் தெரிய வந்தது. ஆனாலும் வரதாபாயை கைது செய்ய முடியவில்லை. 10 லட்சம் ரூபாய் அபராதமாக கட்டவேண்டிய நிலை மட்டும்தான் ஏற்பட்டது. மீண்டும் ஒரு முறை கடத்தல் வழக்கில் சிக்கிய போது சாட்சிகள் வரதாபாய்க்கு சாதகமாக இருந்ததால் போலீஸாரால் அவரை கைது செய்ய முடியவில்லை.மும்பை மாநகராட்சி
கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து போன்ற காரியங்களை செய்த போதிலும் மக்களுக்கு நன்மைகளை செய்ய வரதாபாய் தயங்கியதில்லை. மிகப்பெரிய முருக பக்தரான வரதாபாய், வி.டி.ரயில் நிலையம் அருகே உள்ள 230 ஆண்டுகள் பழமையான தர்காவிற்கு செல்லும் பழக்கத்தை கொண்டிருந்தார். மும்பைக்கு வந்ததிலிருந்து அடிக்கடி அங்கு சென்று அங்குள்ள ஏழைகளுக்கு தன்னால் இயன்ற அளவு சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். இப்போதும் அவரது குடும்பத்தினர் ஆண்டுக்கு ஒரு முறை இந்த தர்காவில் அன்னதானம் செய்கின்றனர்.
பாலிவுட் பிரபலங்களும், கணபதி சிலையும்
மாட்டுங்காவில் ஒவ்வொரு ஆண்டும் கணபதி விழாவின் போது வரதாபாய் சார்பாக வைக்கப்படும் கணபதி சிலை மும்பையில் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த கணபதியை தரிசிக்க பாலிவுட் பிரபலங்கள் அதிக அளவில் வருவதுண்டு. கூலி என்ற படத்தில் அமிதாப்பச்சன் நடித்த போது படப்பிடிப்பில் காயம் அடைந்தார். அவர் குணமடைவதற்காக ஜெயாபச்சன் வரதாபாயின் கணபதி பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டார். அதோடு கிருபானந்த வாரியாரும் இந்த கணபதியை தரிசிக்க வந்திருக்கிறார்.
அரசியல்வாதிகளிடமும் வரதாபாய்க்கு நல்ல தொடர்பு. ஒரு முறை சயான் கோலிவாடாவில் வரதாபாய் கட்டிய கோயிலை அப்போதைய முதல்வரின் மனைவி திறந்து வைத்தார். 1983ம் ஆண்டில் சென்னையில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார் வரதாபாய். இத்திருமணத்தில் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கலந்து கொண்டார். பின்னர் மும்பை வந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மும்பையில் பிரம்மாண்ட பேரணியை நடத்தினார். மும்பையின் அரசோ காவல்துறையோ வரதாபாயிடமிருந்து அப்படியொரு அரசியல் நடவடிக்கையை எதிர்பார்த்திருக்கவில்லை.
அப்பேரணிக்காக மும்பைக்குள் சிறப்பு ரயிலை இயக்கியவர் என்ற பெயரை வரதாபாய் பெற்றார். பேரணியில் கலந்து கொண்டவர்கள் மும்பையிலுள்ள இலங்கை தூதரத்தை முற்றுகையிட்டனர். மும்பையே ஸ்தம்பித்தது. கூட்டம் அதிகமாகிக் கொண்டே சென்றதால் ரயிலில் தமிழர்கள் யாரையும் ஏறவிடாமல் போலீஸார் தடுத்தனர். அப்படியிருந்தும் தமிழர்களுக்காக மாபெரும் பேரணியை நடத்தி தனது செல்வாக்கை காட்டினார் வரதாபாய். தமிழர் பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் முலம் அப்பேரணியை நடத்தி ஈழத்தமிழர்களுக்காக நிதியும் வசூலித்து கொடுத்தார்.
கள்ளச்சாராயம் மூலம் கோடிக்கணக்கில் பணம் வந்தாலும், ஒரு முறை அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது தனக்கு மாதம் 18 ஆயிரம் மட்டுமே வருமானம் கிடைப்பதாக தெரிவித்தார். அது தனது செலவுக்கு போதுமானதாக இருக்கிறது என்றும் சேமிப்பில் இருக்கும் பணத்தை தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்து உதவுவதாகவும் தெரிவித்தார். அவர் மீதான சாராயக் கடத்தல் புகார்கள் குறித்து கேட்டதற்கு, அடியோடு அந்த குற்றச்சாட்டை மறுத்த வரதாபாய் பத்திரிகைகள் விற்பதற்காக தன்னைப்பற்றி அப்படி எழுதுவதாகக் கூறினார்.ஹாஜி மஸ்தான், வரதா பாய்
கூலியாக வாழ்க்கையை தொடங்கி பணக்காரராகி அதிகாரத்துடனும் நெருங்கி அரசியலை தொட்டுப் பார்க்கும் நிலையை அடைந்தார் வரதாபாய். அதே நேரத்தில் அதே வகை உயரத்தை இன்னொரு தமிழரும் மும்பையில் பெற்றிருந்தார். ஹாஜி மஸ்தான்!
ஹாஜி மஸ்தானும் வரதாபாயும் இரு வேறு பகுதிகளில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் நட்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்தனர். அதற்கான சந்தர்ப்பம் கிட்டாமலே இருந்தது. இறுதியில் அந்த சந்தர்ப்பமும் வாய்த்தது. வரதாபாய் கைது மூலம் அது சாத்தியமானது.
தொடரும்..
முந்தைய பகுதிக்கு...
Also Read: நிழலுலக ராஜாக்கள்: தூத்துக்குடி டூ மும்பை ‘நாயகன்’ - வரதராஜ முதலியாரின் கதை | பகுதி-4
http://dlvr.it/RyK7GT
Saturday, 24 April 2021
Home »
» நிழலுலக ராஜாக்கள்: `நாயகன்’ வரதாபாய்க்காக உயிரையும் விட துணிந்த மும்பை தமிழர்கள் | பகுதி 5