கேரள மாநிலம் கொச்சி மரைன் டிரைவ் பகுதியில் 2017-ம் ஆண்டு மகளிர் தினத்தில் ஆண்களும் பெண்களும் ஒன்றாகக் கூடி நின்றதை கண்டித்து சிவசேனா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து `கிஸ் ஆஃப் லவ்' என்ற அமைப்பினர் முத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். திருவனந்தபுரம், கோழிக்கோடு எனப் பல இடங்களில் இந்த முத்தப் போராட்டம் நடந்தது. இந்த விவகாரம் கேரள சட்டசபையிலும் எதிரொலித்தது.
இப்போது, திருச்சூர் மெடிக்கல் காலேஜில் இந்து மாணவியும், இஸ்லாமிய மாணவரும் நடனமாடிய வீடியோவை சிலர் `லவ் ஜிகாத்' என அவதூறு பேசியதால், அதற்கான கண்டனம் மற்றும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அதைப் போன்ற நடன வீடியோக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.ஜானகி
கேரள மாநிலம் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மாணவர் நவீன் கே.ரசாக் மற்றும் மாணவி ஜானகி ஓம் பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து, கல்லூரி வளாகத்தில் ஜெர்மன் பாப் பாடலான ரஸ்புடின் (Rasputin)-க்கு ஆடிய 30 விநாடி வீடியோ, சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அடர் ஊதா நிற சீருடையில் நவீனும், வெளிர் ஊதா நிற சீருடையில் ஜானகியும் புத்துணர்வுடன் அதில் ஆடுகிறார்கள். திருச்சூர் மருத்துவக் கல்லூரி கேம்பஸுக்குள் அவர்கள் ஆடிய அந்த நடனத்தை அவர்களின் நண்பர் மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இன்டர்நெட் சென்சேஷன் ஆக, பலரும் அதை விரும்பிப் பார்த்தனர், பகிர்ந்தனர். இன்னொரு பக்கம், சர்ச்சைகளும் கிளப்பப்பட்டன.
அழுத்தங்கள் நிறைந்த மருத்துவப்படிப்புக்கு இடையில் ரிலாக்ஸ்டு ஆக இந்த மாணவர்கள் ஆடும் நடனத்தை பலரும் வரவேற்று வாழ்த்த, ஒரு தரப்பு இந்த மாணவர்களின் மதங்களைக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்ய ஆரம்பித்தனர். அது இந்த வீடியோவை இன்னும் வைரலாக்கியது. இஸ்லாமியரான நவீன் கே.ரசாக் மற்றும் இந்துவான ஜானகி ஓம் பிரகாஷ்ஷின் பெயர்களை முன்வைத்து, `லவ் ஜிகாத்' என்று அவதூறு கிளப்பி, வைரல் வீடியோவை சிலர் விவாதத்துக்கு உள்ளாக்கினர்.ரசாக்
நவீன் மற்றும் ஜானகிக்கு ஆதரவளித்தும், இந்த நடனத்தை மதத்துடன் தொடர்புபடுத்திப் பேசியவர்களுக்குத் தங்களின் கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவிக்கும் விதமாகவும், திருச்சூர் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் அதே `ரஸ்புடின்' நடனம் ஆடி அதை சமூக வலைதளங்களில் #resisthate என்ற ஹேஷ்டேக்குடன் பதிவேற்றம் செய்து வருகின்றனர். `வெறுப்பது உங்கள் திட்டம் எனில், அதை எதிர்ப்பது எங்கள் முடிவு' என்ற வாசகத்துடன் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது நடன வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவருவது, அதிக கவனம் பெற்று வருகிறது.
நடனத்தில் மதத்தை திணித்து விமர்சனம் செய்பவர்களுக்கு எதிராக சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ எதிர்வினை ஆற்றும் பணியில் இறங்கியுள்ளது. அந்த வகையில், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக எஸ்.எஃப்.ஐ அமைப்பு `STEP UP WITH RASPUTIN, AGAINST RACISM' என்ற கேப்ஷனில் நடனப் போட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மாணவர்கள் `ரஸ்புடின்' நடனம் ஆடி அந்த வீடியோவை அவர்களது வாட்ஸ்அப் எண் அல்லது எஸ்.எஃப்.ஐ மெயில் ஐடிக்கு அனுப்ப, அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். வரும் புதன்கிழமைக்குள் வீடியோக்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும், சிறந்த நடனத்துக்கு 1,500 ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் எஸ்.எஃப்.ஐ அறிவித்துள்ளது.
நடனம் வைரலானது குறித்து ஜானகி கூறுகையில், ``எனக்கு திருவனந்தபுரம்தான் சொந்த ஊர். அம்மா மாயா டாக்டர். அப்பா ஓம் பிரகாஷ் மருத்துவ ஆராய்ச்சியாளர். இந்த வீடியோ இவ்வளவு வேகமாகப் பரவும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சில சினிமா செலிபிரிட்டிகள் கமென்ட் செய்யத் தொடங்கியபோதுதான், இதன் வீச்சு எனக்குப் புரிந்தது. இந்தப் பாடல் எங்கள் இருவருக்கும் பிடித்தமான பாடல் என்பதால் நடனமாடினோம். நவீனின் நண்பர் முஸ்தாக்தான் மொபைலில் இந்த வீடியோவை எடுத்தார்" என்றார்.ஜானகி
இதுபற்றி நவீன் கூறுகையில், ``வயநாடு மாவட்டம் மானந்தவாடி எனது சொந்த ஊர். அப்பா ரசாக் பிசினஸ் செய்துவருகிறார். அம்மா தில்சாத். நானும் ஜானகியும் கிளாஸ் முடிந்த பிறகு ஹாஸ்பிட்டலின் மாடியில், நோயாளிகள் இல்லாத பகுதியில் நடனம் ஆடினோம். கிளாஸுக்கு போய்விட்டு வந்ததால் அதே யூனிஃபார்மில் இருந்தோம். எங்கள் காம்பினேஷன் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. எங்கள் மருத்துவக் கல்லூரியில் `வைக்கிங்ஸ்' என்ற நடனக்குழுவை சீனியர்கள் தொடங்கி வைத்தார்கள். நானும் ஜானகியும் முதலாம் ஆண்டில் இருந்தே இந்த டீமில் இருக்கிறோம்" என்றார்.
``நடனத்தில் அதிக ஈடுபாடு இருந்தாலும், மருத்துவப்படிப்பை சிறப்பாக நிறைவு செய்வதுதான் எங்களுக்கு முக்கியம்" என்கிறார்கள் ஜானகியும் நவீனும்.
http://dlvr.it/RxPdfH
Sunday, 11 April 2021
Home »
» கேரளா: வைரலான மாணவர்களின் நடன வீடியோ... சர்ச்சையை அடுத்து குவியும் ஆதரவு!