பெண்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதில் கேரளம் எப்போதும் ஒருபடி முன்னே எனக்கூறும் அளவுக்கு அம்மாநிலத்தில் பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. துணிக்கடை, நகைக்கடைகளில் வேலைசெய்யும் பெண் ஊழியர்கள் உட்கார்ந்து பணி செய்வதற்காக இருக்கைகள் போடப்பட வேண்டும் எனச் சில வருடங்களுக்கு முன்பு கேரள அரசு உத்தரவிட்டிருந்தது. இப்போது, இரவு நேர வேலை என்பதை காரணம் காட்டி பெண்களுக்குப் பணிவாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கான உரிமைகளில் மற்றொரு மைல் கல் என்று சொல்லும் அளவுக்கு இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனப் பெண்ணிய ஆர்வலர்கள் கூறுகின்றனர்.கேரள ஹைகோர்ட்
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 25 வயதுப் பெண்ணான திரேசா ஜோஸ்பின், பொதுத்துறை நிறுவனமான கேரள மினரல்ஸ் அண்ட் மெட்டல்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் ஃபயர் அண்ட் சேஃப்டி பிரிவில் தற்காலிகப் பணி செய்து வந்தார். அந்தப் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என ஃபயர் அண்ட் சேஃப்டி தலைமை இன்ஜினீயருக்கு மனு அளித்திருக்கிறார். அதற்கான அனைத்துத் தகுதிகளும் திரேசாவுக்கு உள்ளது.
ஆனால், இரவு நேரப் பணி இருக்கும் என்று கூறி, பெண் என்பதால் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, அவருக்கு அந்தப் பணியை வழங்க நிறுவனம் மறுத்துள்ளது. பெண் எனக் கூறி வேலை வழங்காமல் இருப்பது தனக்கான வாய்ப்பை மறுக்கும் செயல் எனத் திரேசா கேரளா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் பெண் என்பதால் இரவு நேரத்தில் பாதுகாப்பு அளிக்க முடியாது என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தாகவும் அந்த மனுவில் திரேசா தெரிவித்திருந்தார்.Law (Representational Image)
அந்த மனு மீதான விசாரணையின்போது, கேரளா தொழிற்சாலை சட்டத்தின்படி, இரவு 7 மணிக்கு மேல் பெண்களை பணிக்கு அமர்த்தக்கூடாது என்பதால் அவருக்குப் பணி மறுக்கப்பட்டது எனக் கேரள மினரல்ஸ் அண்ட் மெட்டல்ஸ் லிமிட்டெட் நிறுவனம் கோர்ட்டில் விளக்கம் அளித்தது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில், `இரவு நேரப் பணி எனக்கூறி பெண்களுக்கு வாய்ப்பை மறுக்கக் கூடாது. இரவுப் பணி செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. பெண் என்பதால் பாகுபாடு பார்ப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது.
தகுதி இருந்தால் இரவு நேரங்களில் பணி செய்வதற்கு பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது. சமூகம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை உணர வேண்டும். பெண்களின் சமூகப் பங்களிப்பை எல்லோரும் உணர வேண்டும். மனுதாரரான பெண்ணின் விண்ணப்பத்தை நிறுவனம் பரிசீலிக்க வேண்டும். இந்த வழக்கில் ஃபேக்டரி ஆக்ட்டை கருத்தில் எடுக்க வேண்டாம்' என நீதிமன்றம் கூறியுள்ளது.பிந்து கிருஷ்ணா
இதுபற்றி கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் ஒரே பெண் மாவட்டத் தலைவரான கொல்லம் மாவட்ட காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணாவிடம் பேசினோம்.
``பெண்களுக்காக கோர்ட் வழங்கிய மிகவும் முக்கியமான உத்தரவாக இதைக் கருதுகிறேன். இமயமலை ஏறுவது, ராணுவத்தில் பணியாற்றுவது எனப் பெண்கள் அனைத்து துறைகளிலும் மிளிர்கின்றனர். பாலினப் பின்னடைவே இல்லாத அளவுக்குப் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதிக்கிறார்கள். இந்த நிலையில் பெண் என்ற காரணத்தால், இரவில் பணி வழங்காமல் இருப்பது நியாயம் இல்லை. அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களிலும் இந்தத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்" என்றார்.
http://dlvr.it/Ry1DKk
Tuesday, 20 April 2021
Home »
» `இரவுப் பணியைக் காரணம் காட்டி பெண்களின் வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது!' - கேரள வழக்கும் தீர்ப்பும்