மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளரான ஐ.பி.எஸ் அதிகாரியை, தனது சொந்த காரில் ஏற்றி தானே ஓட்டி சென்று மருத்துவமனையில் சேர்த்த மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக வெளி மாநிலங்களை சேர்ந்த பல ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்களை கண்காணிக்க பார்வையாளராக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தரம் வீர் யாதவ் என்கிற ஐ.பி.எஸ் அதிகாரி கடந்த 10 நாள்களாக பணியாற்றி வருகிறார். மதுரை மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள காவல்துறை விடுதியில் தங்கியிருந்த அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. உடனே தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு, அவருடைய வாகன ஒட்டுநரிடம் கேட்டுள்ளார். மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த அந்த ஓட்டுநர், கொரோனா அச்சம் காரணமாக தன்னால் மருத்துவமனைக்கு வர இயலாது என தெரிவித்ததாக தெரிகிறது. இந்த தகவலை கேள்விப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், உடனே கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு தன்னுடைய சொந்த காரில் தரம்வீர் யாதவை அழைத்து சென்று அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இது குறித்து தகவலறிந்த அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்தார். இதனை தொடர்ந்து , அவர் தங்கியிருந்த அறையில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு, உடன் பணியாற்றிய நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியரின் இந்த பொறுப்பான செயல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள அதேநேரம், கொரோனா அச்சம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
http://dlvr.it/Rwy0nF
Sunday, 4 April 2021
Home »
» தேர்தல் பார்வையாளருக்கு கொரோனா: முன்னுதாரண செயலால் மக்களை ஈர்த்த மதுரை ஆட்சியர்!