மும்பை புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் 65 வயது நபர், அக்கட்டடத்தின் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். அதே கட்டடத்தில் வசிக்கும் 5 வயதுச் சிறுமி, அந்த 65 வயது முதியவரின் பேத்தியுடன் சேர்ந்து விளையாடுவது வழக்கம். அப்படித்தான், 2014-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி சிறுமி முதியவர் வீட்டுக்கு வந்தாள். அரை மணி நேரம் கழித்து, தன் குழந்தையை அழைத்துச் செல்வதற்காக அச்சிறுமியின் அப்பா வந்தார். ஆனால் சிறுமி, 'நான் வர மாட்டேன், இப்போதுதான் என் தோழி உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கிறாள்' என்று கூறினாள்.
அப்படி என்றால், இவ்வளவு நேரமும் என்ன செய்தாய் என்று அச்சிறுமியிடம் அவரின் அப்பா கேட்டதற்கு, அவ்வீட்டிலிருந்த அந்த 65 வயது முதியவர், தன்னை 'பேட் டச்' செய்ததாகச் சிறுமி தெரிவித்தாள். அவளை உடனடியாக அவள் அப்பா அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட்டார். Child Abuse (Representational Image)
மறுநாள், 65 வயது முதியவரின் செயல்பாடு குறித்து சிறுமியின் அம்மா போலீஸில் புகார் செய்தார். போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முதியவரை கைது செய்தனர். இச்சம்பவம் நடந்த சில நாள்களில் சிறுமியின் பெற்றோர் வீட்டையே காலி செய்துவிட்டனர். மூன்று மாதங்கள் சிறையில் இருந்த முதியவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிறுமியை அவளின் அம்மா வாக்குமூலம் கொடுக்க அனுமதிக்க மறுத்துவிட்டார். மேலும், முதியவர் குடும்பத்துக்கும், சிறுமியின் குடும்பத்துக்கும் காரை நிறுத்துவது தொடர்பாகத் தகராறு இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
அதோடு கோர்ட்டில் சிறுமியின் அம்மா, தன் வீட்டு உண்மையான முகவரியைக் கொடுக்காமல் போலி முகவரியைக் கொடுத்திருந்ததும் தெரியவந்தது. கோர்ட் விசாரணையின்போது சாட்சியாக ஆஜரான முதியவரின் மகன், 'சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்ட அந்த நாளில், மாலை 5.30 முதல் 6.30 வரை வீட்டின் முன் அறையில் அனைவரும் அமர்ந்து பலகாரம் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அந்நேரம் சிறுமியின் அப்பா வந்து, மேலிருந்து தனது காரில் குப்பையைக் கொட்டிவிட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்' என்று தெரிவித்தார்.
இதையடுத்து இவ்வழக்கிலிருந்து முதியவரை விடுவித்த கோர்ட், பாதிக்கப்பட்ட சிறுமியை வாக்குமூலம் கொடுக்க அனுமதிக்காததற்கு அவள் குடும்பத்துக்குத் தனது கண்டனத்தை தெரிவித்தது. 'பாதிக்கப்பட்ட சிறுமி நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க அனுமதிப்பது அம்மாவின் கடமையாகும்.Child crime
குற்றவாளிக்கு எதிராக நேரடி சாட்சியம் எதுவும் இல்லை. குற்றச்சாட்டில் உண்மை இருக்கும்பட்சத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் கொடுப்பதிலிருந்து பெற்றோர் தடுத்திருக்கக் கூடாது' என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இச்சம்பவத்தைத் தங்கள் மகள் மறந்துவிட்டதாகச் சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர். ஆனால், 'இச்சம்பவம் குறித்து சிறுமி மறந்திருக்க மாட்டாள். சிறார் வதை செய்யும் செயல்களை சிறுமியால் மறந்திருக்க முடியாது. சட்டத்தின் மீதும் உண்மையின் மீதும் நம்பிக்கை வைத்த படித்த குடும்பத்தினர், இதுபோன்ற சம்பவங்களில் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சிறுமி வாக்குமூலம் கொடுப்பதைத் தடுத்திருக்கக் கூடாது. அப்போதுதான் தவறு செய்தவர் தண்டிக்கப்பட வாய்ப்பு உண்டாகும்' என்று தெரிவித்தார் நீதிபதி. தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட முதியவரை இவ்வழக்கில் இருந்து கோர்ட் விடுவித்தது.
http://dlvr.it/Rwy0hg
Sunday, 4 April 2021
Home »
» மும்பை: பாலியல் துன்புறுத்தலுக் குள்ளான சிறுமி, வாக்குமூலத்தைத் தடுத்த தாய்... கண்டித்த நீதிமன்றம்!