ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பொதுகுண்டு தின்னே கிராமத்தில் ஆந்திரா மாநில முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ரகுவீர ரெட்டிக்குச் சொந்தமாகப் பல ஏக்கர் விவசாய நிலங்கள் இருக்கின்றன. அரசியலிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் ரகுவீர ரெட்டி, பொதுகுண்டு தின்னேவில் உள்ள தன் விளை நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று அமைச்சரின் வேலையாட்கள் நிலத்தைச் சீரமைப்பதற்காகத் தோண்டியிருக்கின்றனர். அப்போது சுடுமண்ணால் செய்யப்பட்ட பொருள் ஒன்று அவர்களின் கண்களுக்குத் தட்டுப் பட்டுள்ளது. அந்தப் பொருளை வெளியில் எடுத்துப் பார்த்தபோது விநாயகர் உருவம் தெரிந்ததால் வேலையாட்கள் உடனடியாக அமைச்சருக்குத் தெரிவித்தனர்.ஆந்திர முன்னாள் அமைச்சர் ரகுவீர ரெட்டி
அதனை அடுத்து அங்கு விரைந்த ரகுவீர ரெட்டி, சுடுமண்ணால் ஆன வித்தியாசமான பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, தொல்லியல்துறையினுக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த தொல்லியல் துறையினர் விநாயகர் உருவம் பொருந்திய அந்த வித்தியாசமான பொருளை ஆய்வுக்கு உட்புகுத்தினர். ஆய்வகத்தில் வைத்து தொல்லியல் துறையினர் நடத்திய பல மணி நேரச் சோதனையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிலை 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும், சதவாகன காலப் பேரரசர்களால் சுடுமண் மூலமாகச் செய்யப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், தென்னிந்தியாவில் கிடைக்கப்பெற்றுள்ள விநாயகர் சிலைகளிலேயே தற்போது பொதுகுண்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்தச் சிலைதான் மிகவும் பழைமையான சிலை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு விஜயவாடா கலாச்சார மையத்தின் தலைமை செயல் அதிகாரி சிவநாகி பேட்டி அளித்தார். அப்போது அவர், "யானை உருவத்தைக் கொண்டு இந்தப் பழைமையான சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலையானது, 2-ம் நூற்றாண்டில் சதவாகன அரசர்களால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தொல்லியல் துறையினர் உறுதி செய்திருக்கின்றனர். பொதுவாக சதவாகன சிற்பங்கள் பெரும்பாலும் களிமண்ணாலேயே உருவாக்கப்பட்டிருக்கும். அது அவர்களின் தனிச் சிறப்பு.
அந்த வகையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்தத் தொன்மையான விநாயகர் சிலையும் களிமண்ணால் உருவாக்கப்பட்டு பின் வேகவைத்து நெருப்பில் வாட்டித் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதால் சிலையின் காது, கை மற்றும் கால் பகுதிகள் சேதமடைந்துள்ளன" என்றார்.சிவாநாகி ஆந்திராவில் முன்னதாக கர்னூல் மாவட்டத்தில் கடந்த 1980-ம் ஆண்டு தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளதைப் போன்றே உருவ அம்சம் கொண்ட களிமண்ணால் ஆன விநாயகர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RxX4CJ
Tuesday, 13 April 2021
Home »
» ஆந்திரா: விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட தென்னிந்தியாவின் மிக பழைமையான விநாயகர் சிலை!