ஐதராபாத் காவல்துறையினருக்கு, கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் புகார் ஒன்று வந்திருக்கிறது. அந்தப் புகாரை அளித்தது வாகனங்களை வாடகைக்குவிடும் `ஜூம் நிறுவனம்.’ சதீஷ் என்ற நபர் தங்களிடம் வோல்க்ஸ்வாகன் வகை கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு திருடிச் சென்றுவிட்டார் என்று அந்த நிறுவனம் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தது. வாடகைக்கு எடுத்தவர் நிறுவனத்திடம் அளித்த டாக்குமென்ட்டுகளில் குறிப்பிடப்பட்டிருந்த நபரைத் தேடி விசாரித்ததில் போலீஸாருக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியிருக்கிறது. காரணம், ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சதீஷ் என்பவர் அப்பாவி. புகாரை விசாரிக்கச் சென்ற போலீஸாரிடம் பதிலுக்கு சதீஷ் தனது ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை
மகேஷ் என்பவர் திருடிச் சென்றுவிட்டதாகப் புகார் அளித்திருக்கிறார்.சைபராபாத் போலீஸ்
அதைத் தொடர்ந்து கார் திருட்டு விவகாரத்தில் தீவிர விசாரணையை முடுக்கிவிட்ட சைபராபாத் போலீஸ், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாடகைக்குவிடும் பிரபல நிறுவனங்கள் தெலங்கானாவில் மற்ற காவல் நிலையங்களில் ஏதாவது புகார்கள் பதிவு செய்திருக்கின்றனவா என்று ஆராய்ந்திருக்கின்றனர். விசாரித்ததில் , ஜூம் கார், டிரைவ்ஸி, ரெவ், ராயல் பிரதர்ஸ் என ஹைதராபாத்தில் மட்டுமன்றி ஆந்திராவிலும் ஏராளமான வழக்குகள் பதிவாகி நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல், ஆந்திராவில் 2016-லிருந்து தற்போது வரை பதிவாகியுள்ள அடையாள அட்டைகள் திருட்டு வழக்குகளின் கோப்புகளை ஆய்வு செய்ததில் சில வழக்குகளில் ஒற்றுமை காணப்பட்டிருக்கிறது. அதாவது, ஷேரிங் ரூமில் தங்கியிருந்த நபர் ஒருவர் அடையாள அட்டைகள் மற்றும் பணத்தைத் திருடிவிட்டதாகப் பல இடங்களில் புகார்கள் பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து, இந்தப் புள்ளிகளை இணைத்த சைபராபாத் போலீஸார் பேச்சிலர் ஆசாமி ஒருவர்தான் திட்டமிட்டு வாலிபர்களுடன் ஒன்றாக ரூமில் தங்கி, பழகி அவர்களுடைய அடையாள அட்டைகள் மற்றும் பணத்தைத் திருடி, அதைவைத்து வாகனங்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு திருடுவதை உறுதி செய்தனர்.
கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சைதராபாத் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டபோதிலும், மர்ம ஆசாமி போலீஸாரின் ஸ்கெட்ச்சுக்குச் சிக்காமல் சைபராபாத் போலீஸ் மற்றுமன்றி ஒட்டுமொத்த ஆந்திர போலீஸுக்கும் தண்ணிகாட்டி வந்திருக்கிறான். இந்தநிலையில், கடந்த மாதம் மீண்டும் ஜூம் நிறுவனத்தில் வாடகைக்கு ஸ்விப்ஃட் வகை கார் எடுத்துச் செல்லப்பட்டு வாடிக்கையாளர் ஒருவரால் திருடப்பட்டுவிட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது. அதையடுத்து, வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் கருவியை போலீஸார் டிராக் செய்து பார்த்ததில் வாகனத்தில் ஜி.பி.எஸ் கருவி அகற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. ஜூம் கார்ஸ்
தொடர்ந்து, நிறுவனத்தின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, அதனடிப்படையில் குற்றவாளியை முழுவீச்சில் தேடினர். நகரம் முழுவதும் வாகன சோதனையைத் தீவிரப்படுத்தியதில் ஹைதராபாத்தில் வாகன சோதனையின்போது பிடிபட்ட டிப் டாப் ஆசாமி ஒருவர் தக்க ஆவணங்கள் இன்றி முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருக்கிறார். அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் பிடிபட்ட நபர்தான் இத்தனை மாதங்களாக போலீஸார் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு வேடிக்கை காட்டிவந்த 'பலே ஐ.டி புரூஃப் திருடன்' என்பது உறுதியானது.
அதையடுத்து, பிடிபட்ட ஆசாமியை சைதராபாத் போலீஸார் தங்கள் ஸ்டைலில் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிடிபட்ட நபர் விசாரணையில் கூறியவற்றைக் கேட்டு சைபராபாத் போலீஸுக்கே தலைசுற்றிப் போயிருக்கிறது.
கைதுசெய்யப்பட்ட 27 வயது இளைஞர் மகேஷ் மீது 2016-ல் தொடங்கி தற்போது வரையில் மொத்தம் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்பது வழக்குகள் இந்த ஆண்டில் பதியப்பட்டவை. ஆந்திராவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான மகேஷின் கேஸ் ஹிஸ்ட்ரி, செல்போன் திருட்டு வழக்கிலிருந்து தொடங்குகிறது. 2016-ல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்த மகேஷ் அங்கிருந்து செல்போனை திருடிக்கொண்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார். அந்த வழக்கில் மலக்பேட்டை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சில மாதங்கள் சிறையிலிருந்திருக்கிறார்.பிடிபட்ட மகேஷ்
அதன் பிறகு, வெளியில் வந்த மகேஷ் மீண்டும் 2018-ல் ஆந்திராவில் கேமரா திருடிய குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு மூன்று திருட்டு வழக்குகளில் கைதாகியிருக்கிறார். அதுவரையில், சிறு சிறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த மகேஷ், 2020-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து திருடுவதில் தனது பாணியை மாற்றியிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மகேஷ் பஞ்சகுட்டா பகுதியில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியிருந்த நாகேந்திர பிரசாத் என்ற இளைஞரிடம் பழகி, அவருடன் `ரூம் ஷேரிங்' முறையில் தங்கியிருந்திருக்கிறார். மகேஷ் குறித்த உண்மை அறியாத பிரசாத் அவரிடம் நன்கு பழகியிருக்கிறார். அதைப் பயன்படுத்திக்கொண்ட மகேஷ் நேரம் பார்த்து பிரசாத்தின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் 1,60,000 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றிருக்கிறார்.
அங்கிருந்து சென்ற மகேஷ், தான் திருடிய பிரசாத்தின் அடையாள அட்டைகளில் தன்னுடைய புகைப்படத்தை ஒட்டி தன் பெயரை மாற்றி அதைவைத்து ஜூன் மாதம் பெங்களூரிலுள்ள பிரபல ராயல் பிரதர்ஸ் நிறுவனத்திடமிருந்து ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுத்திருக்கிறார். அங்கிருந்து பைக்கை திருடிக்கொண்டு விசாகப்பட்டினம் சென்ற மகேஷ் அங்கு சைதன்யா மற்றும் அஜய் என மீண்டும் இரு இளைஞர்களுடன் சில மாதங்கள் ரூம் ஷேரிங்கில் தங்கி இருந்திருக்கிறார். மகேஷ் தன்னுடன் தங்கியிருந்த சைதன்யா என்ற இளைஞரிடமிருந்து அவரது ஆதார் அட்டை மற்றும் 30,000 ரூபாய் பணத்தைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார். பெங்களூரில் திருடிய இருசக்கர வாகனத்துடன் புனேவுக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
அங்கு சதீஷ் என்ற இளைஞரின் அறையில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்த மகேஷ், அவரிடமிருந்து 1,80,000 ரூபாய் மற்றும் அவரது அடையாள அட்டைகளைத் திருடிவிட்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். பின்னர் புனேவில் ஜூம் கார் நிறுவனத்தில் வோக்ஸ்வாகன் போலோ கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கேரளாவுக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.ரூம் ஷேரிங் முறை
கேரளாவில் திருடிய பணத்தை வைத்து சில மாதங்கள் சுகபோகமாக இருந்துவிட்டு, மீண்டும் ஆந்திரா திருப்பியிருக்கிறார். இந்த முறை மகேஷ் ரூம் ஷேரிங் மூலமாகக் கைவரிசையைக் காட்டாமல் நூதன முறையில் திருடினார். ஆந்திரா திரும்பியதும், தான் திருடிய கார்களுக்கு ஓட்டுநர்கள் தேவை என்று ஓ.எல்.எக்ஸ் வலைதளத்தில் விளம்பரம் பதிவிட்டிருக்கிறார். அதைப் பார்த்துவிட்டு ஏராளமானோர் தங்கள் ஓட்டுநர் உரிமம் மற்றும் அடையாளச் சான்றுகளை மகேஷுக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். அவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்ட மகேஷ், ஜூம் கார், டிரைவ்ஸி, ரெவ் என ஏராளமான நிறுவனங்களில் வழக்கம்போல் மற்றவர்கள் சான்றுகளைவைத்து வாகனங்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கம்பி நீட்டியிருக்கிறார்.
மகேஷ் கடைசியாக ஐதராபாத்தில் கடந்த மாதம் ஜூம் கார் நிறுவனத்தில் ஸ்விஃப்ட் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து, திருடிச் சென்றிருக்கிறார். அப்போது அந்த நிறுவனம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில்தான் தற்போது `சீரியல் திருடன்' மகேஷ் வசமாகச் சிக்கியிருக்கிறார்.
மகேஷிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்
கைதுசெய்யப்பட்ட மகேஷிடமிருந்து சைதராபாத் போலீஸார், 6 கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தைக் கைப்பற்றியுள்ளனர். மேலும், மகேஷ் வாடைக்கு எடுத்து ஏமாற்றி இதுவரையில் விற்பனை செய்த வாகனங்களின் மதிப்பு 70 லட்சம் ரூபாய் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மகேஷின் கைவரிசையால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வாடகைக்கு வாகனங்கள் அளிக்கும் பிரபல கார் நிறுவனங்களை போலீஸார் உஷார்படுத்தியிருக்கின்றனர்.
http://dlvr.it/RxTq8p
Monday, 12 April 2021
Home »
» ஆந்திராவை அலறவிட்ட `ஐ.டி புரூஃப்’ திருடன்; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சைபராபாத் போலீஸ்! -நடந்தது என்ன?