ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல் நலக்குறைவால் காலமானார். அவரை 'கலப்படமில்லாத காங்கிரஸ்காரர்' என்று கட்சியினர் புகழஞ்சலி செலுத்துகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர் மாதவராவ். அவருக்கு வயது 63. இவர் வேட்பு மனுத்தாக்கல் செய்ததிலிருந்தே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு பதிலாக பரப்புரையில் கூட அவரது மகள்தான் பணியாற்றினார். நுரையீரல் தொற்று காரணமாக மதுரை கேகேநகர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று இவரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமானது. ஐசியுவில் வெண்டிலேட்டரில் இருந்து சிகிச்சை பெற்று வந்த மாதவராவ் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 8 மணியளவில் உயிரிழந்தார். மாதவராவ் மறைவு குறித்து காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், “35 ஆண்டுகால நண்பர். கலப்படமில்லாத காங்கிரஸ்காரர். பல தேர்தல்களில் அவர் வாய்ப்பு கேட்டபோதெல்லாம் அவருக்கு பல்வேறு சூழ்நிலை காரணமாக கிடைக்கவில்லை. இந்த முறை பல முயற்சிகளுக்கு பிறகு அந்த வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. தற்போது வெற்றிக்கனியை பறிக்க போகும் வேளையில் அவர் உயிரிழந்தார் என்பது பேரிடியாக உள்ளது. மரணத்திற்கு வார்த்தை இல்லை. எதிர்ப்பும் இல்லை. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்கிறோம். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என வேண்டுவதை தவிர வேறு வழியில்லை” என்றார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி கூறுகையில், “காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெறும். தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்” எனத் தெரிவித்தார்.
http://dlvr.it/RxQptt
Sunday, 11 April 2021
Home »
» "கலப்படமில்லாத காங்கிரஸ்காரர்!" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி