கேரளத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதையடுத்து கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டன. அதில் 3,00,971 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. முன்களப் பணியாளர்கள், மக்களிடம் அதிக தொடர்பில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டன. நேற்று 87,275 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் கொரோனா பாசிட்டிவ் 15.63 சதவிகிதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,644 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கேரளத்தில் 2,48,541 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 12,281 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 4,305 பேர் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனர்.திருச்சூர் பூரம்
கொரோனா இரண்டாவது அலை தடுப்பு நடவடிக்கையாக கேரளத்தில் இன்று (ஏப்ரல் 20-ம் தேதி) முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்குவருகின்றன. இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இரண்டு வாரங்களுக்கு இந்த ஊரங்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்துக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அதேசமயம் திரையரங்குகள் மற்றும் மால்கள் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சாத்தியமுள்ள துறைகள் வீட்டிலிருந்தே பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் கேரளத்தில் நடந்துவரும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் ப்ளஸ் டூ தேர்வுகள் தொடர்ந்து நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லாக்டெளன் காரணமாக தேர்வை மாற்றிவைக்கும் திட்டம் இல்லை எனக் கேரள கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடித்து மீதமுள்ள தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 21, 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் நடக்கவிருக்கின்றன. தேர்வு சமயத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் ட்ரிபிள் லேயர் (மூன்றடுக்கு) மாஸ்க் அணிந்து வர வேண்டும் எனவும், வெப்ப சோதனைக்குப் பிறகே மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கல்வித்துறை அறிவித்துள்ளது.கொரோனா பரவல்
இந்தநிலையில், பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட யானைகளும், லட்சக்கணக்கான மக்களும் கலந்துகொள்ளும் திருச்சூர் பூரம் விழாவுக்கு அரசு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பூரம் விழாவுக்கு ஏற்கெனவே கொடியேற்றப்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதி பூரம் நட்சத்திரத்தில் யானைகளில் சுவாமி எழுந்தருளுதல் நடக்கிறது. 24-ம் தேதி பகலில் நடக்க வேண்டிய பூரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.பினராயி விஜயன்
விழாவில் நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். பிரதான வாண வேடிக்கை மட்டுமே நடத்தப்படும். பூரத்தில் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் எடுக்க வேண்டும் அல்லது இரண்டு கோவிட் வேக்ஸின்களும் எடுத்தவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல யானைப் பாகன்களும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் எடுக்க வேண்டும் என அரசு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அரசின் இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க சம்மதம் என பாறமேக்காவு தேவசம் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அதேசமயம் நிர்வாகிகளைக் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாக திருவம்பாடி தேவஸ்தானம் கூறியுள்ளது.
http://dlvr.it/Ry2vld
Tuesday, 20 April 2021
Home »
» கேரளாவில் ஊரடங்கு: பள்ளி பொதுத்தேர்வுகள் நடக்கும்... திருச்சூர் பூரம் விழாவுக்குக் கட்டுப்பாடு!