மகாராஷ்டிரா அரசு கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு எஸ்.எஸ்.சி.எனப்படும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாமல் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்தது. 12-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் இல்லாமல் இருக்கிறது. இதனால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்தில் மாணவர்கள் இருக்கின்றனர். அரசு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!
இந்த மனு நீதிபதி ஷாருக் காதாவாலா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ``10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து ஒட்டுமொத்த கல்வி சிஸ்டத்தையும் கேலிக் கூத்தாக்க வேண்டாம். கொரோனா பரவலைக் காரணம் காட்டி மாணவர்களின் வாழ்க்கையை அழிக்க வேண்டாம்” என்று தெரிவித்தனர். மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரியா பூஷண், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கலாம் என்பது குறித்து மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் பரிந்துரைக்காகக் காத்திருப்பதாகக் கூறினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ``10-ம் வகுப்பு மாணவர்களை தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தால், நாட்டில் கல்வி முறையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். 10-ம் வகுப்பு தேர்வு பள்ளி வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தேர்வு. தேர்வு எழுதாமல் தேர்ச்சிபெற்றதாக அறிவித்து, நமது கல்வி முறையை கேலிக்குரியதாக ஆக்குகிறீர்களா? 12-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும்போது கொரோனா பரவலைக் காரணம் காட்டாதீர்கள். கொரோனா பரவல் இப்போது குறைந்துவருகிறது. எனவே கொரோனா பரவலைக் காரணம் காட்டி நமது மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்க வேண்டாம். மும்பை உயர் நீதிமன்றம்
12-ம் வகுப்பு தேர்வை மட்டும் ஏன் நடத்துகிறீர்கள்... ஏன் இந்தப் பாரபட்சம்... இது போன்ற முடிவுகளை யார் எடுத்தது?” என்று சரமாரியாகக் கேட்டனர். மேலும் ``நீங்கள் கல்வி முறையை அழிக்கிறீர்கள். வேறு ஏதாவது மாநிலம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்திருக்கிறதா?” என்று நீதிபதிகள் கேட்டனர். உடனே தமிழ்நாட்டில்,10-ம் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாக அரசு வழக்கறிஞர் பிரியா தெரிவித்தார். உடனே, ``நீங்கள் மற்ற மாநிலங்களைப் பின்பற்றுவேண்டுமா அல்லது உங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றவேண்டுமா? 12-ம் வகுப்புக்கு ஏன் இது போன்ற ஒரு முடிவை எடுக்கவில்லை என்று எங்களுக்குப் புரியவில்லை” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதில் இறுதி முடிவெடுக்க உயர் நீதிமன்றம் கால அவகாசம் கொடுக்க வேண்டுமென்று அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அரசு புதிய அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கெனவே சி.பி.எஸ்.சிபோர்டு 10-ம் பொதுத்தேர்வை ரத்து செய்திருக்கிறது. மேலும் 12-ம் வகுப்பு தேர்வையும் ரத்து செய்யலாமா என்பது குறித்துப் பரிசீலித்துவருகிறது.
http://dlvr.it/S086tb
Friday, 21 May 2021
Home »
» மகாராஷ்டிரா:`10ம் வகுப்பு தேர்வு ரத்து; கல்விமுறையைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’-உயர் நீதிமன்றம்