மும்பையைச் சேர்ந்த 41 வயதாகும் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வயிற்றில் 3 கருக்கள் உருவாகியிருந்தன. அதில் ஒரு குழந்தை அசாதாரண வளர்ச்சியுடையதாக இருந்தது. அதாவது, அக்குழந்தைக்கு மூளை மற்றும் மண்டை ஓடு போன்ற பகுதிகள் இல்லாமல் இருந்தன. பிறந்தாலும் சில மணி நேரம்கூட உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், அக்கருவை கலைக்க தேவியும் அவரின் கணவரும் முடிவு செய்தனர். Abortion
ஆனால் அதற்குள் வயிற்றில் இருந்த கருக்களின் வளர்ச்சி 20 வாரங்களைக் கடந்துவிட்டது. 20 வாரங்களைக் கடந்த கருவைக் கலைக்க சட்டம் அனுமதிக்காது. என்றாலும், `அசாதாரண நிலையில் இருக்கும் கருவை கலைக்கலாம்' என்று கடந்த மார்ச் 25-ம் தேதி பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் அமலுக்கு வந்த பிறகு மும்பையில் இதுவரை 20 வாரங்களைக் கடந்த கரு அதிகாரபூர்வமாக கலைக்கப்படவில்லை.
தேவியின் வயிற்றில் மூன்று கருக்களும் வளர்ந்து கொண்டிருந்த நிலையில், ஏழ்மை நிலையில் இருந்த தேவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதற்குள் கருக்களின் வளர்ச்சி 23 வாரங்களைத் தாண்டிவிட்டது. `வயிற்றில் இருக்கும் அசாதாரணக் கருவைக் கலைக்க அனுமதிக்கவேண்டும்' என்று கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் தேவி.
மனுவை விசாரித்த நீதிமன்றம், அசாதாரண வளர்ச்சியுடன் இருக்கும் ஒரு கருவை மட்டும் கலைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கடந்த 12-ம் தேதி டாக்டர்களிடம் கேட்டு இருந்தது.
ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து புதிய மருத்துவ நிபுணர் குழுவைக் கொண்டு, மூன்று கருக்களையும் கலைக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் ஜேஜே மருத்துவமனை டாக்டர் டீன் தலைமையிலான குழு அப்பெண்ணின் வயிற்றில் உள்ள கருக்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அதன்படி, ஒரு குழந்தை மூளை மற்றும் மண்டை ஓடு இல்லாமல் பிறக்க வாய்ப்பு இருப்பதாகவும், இன்னோரு குழந்தைக்கு மரபணு பிரச்னை இருப்பதாகவும், இரு குழந்தைகளும் பிறந்தாலும் நிரந்த ஊனத்துடன் இருக்கும், அப்படியும் அவை உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தனர். மூன்றாவது குழந்தை மட்டும் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்தனர். mumbai high court
கரு வயிற்றில் இருந்தால் தாயின் மனநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என்றும், எனவே மூன்று கருக்களையும் கலைப்பதே சரியாக இருக்கும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். அதனை கோர்ட் ஏற்றுக்கொண்டது. தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `ஏற்கெனவே தேவிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கருத்தடை சாதனங்களில் ஏற்பட்ட தவற்றால் இந்தக் கருக்கள் உருவாகி இருக்கின்றன' என்று தெரிவித்தார். இதையடுத்து 24 வாரங்களான தேவியின் கருவைக் கலைக்க கோர்ட் உத்தரவிட்டது.
மும்பையில் உள்ள வாடியா மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யப்படுகிறது. 24 வாரக் கருவை கலைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்த பிறகு மும்பையில் முதன்முறையாக கருக்கலைப்பு தேவிக்கு நடப்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/S09ybC
Saturday, 22 May 2021
Home »
» 24 வாரங்களைக் கடந்த 3 கருக்கள்; வளர்ச்சி குறைபாடு பிரச்னை; கலைக்க மும்பை நீதிமன்றம் அனுமதி!