தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலை கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. சிறார்கள், இளம் வயதினர், பெரியவர்கள், இணைநோய் இல்லாதவர்கள் என அனைத்து தரப்பினரையும் தாக்கும் இந்த கொரோனா, கர்ப்பிணிகளை மட்டும் விட்டு வைத்ததா என்ன, தினந்தோறும் மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகளில் கர்ப்பிணிகளும் அடங்குவர். இதுவரை கொரோனா தொற்றுக்கு மதுரையை சேர்ந்த மருத்துவர் சண்முகப் பிரியா உட்பட 2க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிக கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகிறார்கள். முதல் அலையின் போது 21 கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்தால், அதில் 1 அல்லது 2 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. அதுவே இரண்டாவது அலையில், 6 பேருக்கு தொற்று உறுதியாவதாக, மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுவும் சிலர் மூச்சுத்திணறலுடன் மருத்துவமனைக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. இதில், வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று இருந்தால், அது குழந்தைகளையும் பாதிக்கிறது என்பது தான். கர்ப்பிணிகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அரசு அறிவுறுத்தி இருந்தாலும், அதற்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால், தடுப்பூசி போடுவதிலும் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில், தொற்று பாதிப்பு ஏற்படும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் பெரும்பாலும் வீட்டு தனிமையையே பரிந்துரைக்கிறார்கள். பாதிப்பு அதிகம் ஏற்படும் பட்சத்தில், மருத்துவமனையில் அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வார்டுகளில் வைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது. பொதுவாக கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியெ செல்லாமல் இருப்பது, வீட்டில் இருப்பவர்களுடன் கூட தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, சத்தான மற்றும் சூடான ஆகாரங்களை உட்கொள்வது, வீட்டில் யாருக்கேனும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கர்ப்பிணிகள் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்வது உள்ளிட்டவை தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
http://dlvr.it/RzkhNh
Sunday, 16 May 2021
Home »
» கொரோனா 2வது அலையில் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்! - மருத்துவர்கள் சொல்வதென்ன?