கொரோனா பொதுமுடக்கத்தால் நாட்டில் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்புக்களை இழந்து வருமானத்திற்கு வழியில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். வேலை இருப்பவர்களும் குறைவான சம்பளத்தில் வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மும்பை அருகில் ஆட்டோ டிரைவர் ஒருவர் போதிய வருமானம் இல்லாமல் தனது குழந்தையை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். மும்பை அருகில் உள்ள 'கல்யாண் சாஹாட்' என்ற இடத்தில் வசிப்பவர் சாய்நாத் போயர். இவரது மனைவி பல்லவி. சாய்நாத் ஆட்டோ ஓட்டுகிறார். இத்தம்பதிக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருக்கின்றன.பச்சிளம் குழந்தை
சமீபத்தில் அதாவது 5 மாதங்களுக்கு முன்பு மேலும் ஒரு குழந்தை பிறந்தது. ஆறு குழந்தைகளுக்கு இத்தம்பதியால் சாப்பாடு போட முடியவில்லை. சாய்நாத்திற்கு ஆட்டோ மூலம் போதிய வருமானம் கிடைக்கவில்லை. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு இருப்பதால் ஆட்டோவை பெரிய அளவில் இயக்க முடியவில்லை. ஒரு முறை சாய்நாத் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்ற போது மான்சி ஜாதவ் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அவர் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றியவர்.
அவரிடம் சாய்நாத் தனது கதையை கூறியுள்ளார். உடனே வேண்டுமானால் ஒரு குழந்தையை யாருக்காவது தத்து கொடுத்துவிடுங்கள் என்று மான்சி தெரிவித்தார். அதோடு அப்படி தத்து கொடுப்பதால் பணமும் கிடைக்கும் என்று ஆசைவார்த்தைகள் கூறினார். இதை சாய்நாத் ஏற்றுக்கொண்டார். தனது மனைவியிடம் கலந்து ஆலோசித்துவிட்டு சொல்வதாக தெரிவித்தார். அதன் படி சாய்நாத் தனது மனைவியிடம் பேசி குழந்தையை விற்றுவிட முடிவு செய்தார். சாய்நாத்திற்கு மான்சி ரூ.90 ஆயிரம் கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் மான்சி அக்குழந்தையை வேறு ஒரு தம்பதியிடம் விற்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இது குறித்து போலீஸாருக்கு தெரிய வந்தது. எனவே போலீஸாரே போலி வாடிக்கையாளர் ஒருவரை அனுப்பி மான்சியிடம் குழந்தையை விலைக்கு வாங்க பேரம் பேசும்படி கேட்டுக்கொண்டனர். போலி வாடிக்கையாளரும் மான்சியிடம் பேசி 1.70 லட்சத்திற்கு குழந்தையை வாங்கிக்கொள்வதாக தெரிவித்தார். குழந்தையை கல்யான் கோர்ட்டில் பெற்றுக்கொள்வதாக போலி வாடிக்கையாளர் தெரிவித்தார். மான்சி தான் குழந்தையுடன் அங்கு வந்துவிடுவதாக தெரிவித்திருந்தார். உடனே போலீஸார் அங்கு சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். Representation pic
போலி வாடிக்கையாளர் சாட்சிக்கு ஒரு ஆளை அழைத்து வந்திருந்தார். அவர்கள் கோர்ட்டில் சந்தித்துக்கொண்டு அங்குள்ள ஓட்டலுக்கு சென்றனர். அங்கு மான்சி தன்னிடம் இருந்த குழந்தையை போலி வாடிக்கையாளருடன் வந்திருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார். அதை தொடர்ந்து போலி வாடிக்கையாளர் மான்சியிடம் பணத்தை கொடுத்தார். உடனே மறைந்திருந்த போலீஸார் உள்ளே வந்து குழந்தையையும் பணத்தையும் பறிமுதல் செய்தனர். குழந்தையின் பெற்றோர் அருகில் ஆட்டோவில் இருந்தனர். அவர்களையும் கைது செய்தனர். மான்சி இதற்கு முன்பு இது போன்று சட்டவிரோதமாக குழந்தைகளை வாங்கி யாருக்காவது கொடுத்திருக்கிறாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
http://dlvr.it/S0MZD2
Tuesday, 25 May 2021
Home »
» மும்பை: பொதுமுடக்கத்தால் வருமானம் இல்லை.. 5 மாத குழந்தையை விற்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர்!