குஜராத்தில் கரையைக் கடந்த டவ்தே புயல் மும்பையில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கிறது. புயலால் ஏற்பட்ட சூறாவளிக் காற்றில் ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. மகாராஷ்டிராவில் மழைக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த புயல் காரணமாக மும்பையிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ஓ.என்.ஜி.சி-க்குச் சொந்தமான ஹீரா எண்ணெய்க் கிணறு அருகே ஊழியர்கள் தங்குவதற்காக குடியிருப்புப் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன.கப்பலைத் தாக்கும் ராட்சத அலைகள்
அதில் பி 305 என்ற படகில் 273 பேர் தங்கியிருந்தனர். புயல் காரணமாக வீசிய காற்றில் அந்தப் படகு நங்கூரத்தை இழுத்துக்கொண்டு சென்றது. இதையடுத்து அதில் இருப்பவர்களைக் காப்பாற்ற கடற்படைக் கப்பல்கள் விரைந்தன. படகு, எண்ணெய்க் கிணறு மீது மோதி தண்ணீர் உள்ளே புகுந்து மூழ்கிவிட்டது. படகு மூழ்கும் முன்பாக அதிலிருந்தவர்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்துகொண்டு கடலில் குதித்துவிட்டனர். அவர்களைக் காப்பாற்ற கடற்படைக் கப்பல்களும், கடலோர பாதுகாப்புப் படையின் ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாள்களாகப் போராடி 184 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 89 பேரை இன்னும் காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் ஐந்து கடற்படைக் கப்பல்களும் ஹெலிகாப்டர்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இது தவிர கால் கன்ஸ்ட்ரக்டர் என்ற மற்றொரு படகும் 137 பேருடன் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டது. அந்தப் படகு பால்கர் அருகே நிற்பது கண்டுபிடிக்கப்பட்டு அதிலிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஹீரா எண்ணெய்க் கிணறு அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு படகில் 200 பேர் இருந்தனர். அந்தப் படகும் காற்றால் இழுத்துச் செல்லப்பட்டது. அதில் இருந்தவர்களையும் கடலோர பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். கடற்படையினரும், கடலோர பாதுகாப்புப் படையினரும் சேர்ந்து 24 மணி நேரமும் போராடி படகுகளில் இருந்த ஓ.என்.ஜி.சி ஊழியர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். கடலில் புயல் கரையைக் கடந்த பிறகும் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காணாமல் போன 89 பேரும் கடலில் எங்காவது மிதந்துகொண்டிருக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. படகு கவிழும் முன்பாக அனைவரும் பாதுகாப்பு கவச உடை அணிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்ததால் 89 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கடற்படை அதிகாரி எம்.எஸ்.பவார் கூறுகையில், "இது மிகவும் சவாலான மீட்புப்பணி. 40 ஆண்டுகளில் இது போன்ற ஒரு மீட்புப் பணியை நான் பார்த்ததில்லை" என்று தெரிவித்தார்.
ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் தங்கியிருந்த பார்ஜி எனப்படும் மிகப் பிரமாண்ட படகு ஒரு சிறிய குடியிருப்புப் பகுதியை போன்றதாகும். இதில் 3 முதல் 4 மாடிகள் இருக்கும். இதை நினைத்த நேரத்தில் உடனே சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்திவிட முடியாது. படகை சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்த குறைந்தது ஒரு வாரம் பிடிக்கும். ஒவ்வொரு படகிலும் 8 நங்கூரம் இருக்கும். அவற்றையெல்லாம் எடுத்து அப்புறப்படுத்துவதற்கு ஒரு வாரம் பிடிக்கும். ஆனால் அப்படிப்பட்ட படகையே புயல் காற்று நகர்த்திவிட்டது.
http://dlvr.it/S000vD
Wednesday, 19 May 2021
Home »
» மும்பை: 'டவ்தே' புயலில் சிக்கிய 89 ஓ.என்.ஜி.சி ஊழியர்கள்! - தேடுதல் பணியில் 5 கடற்படைக் கப்பல்கள்!