கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் சி.பி.எம் கூட்டணியான எல்.டி.எஃப் 99 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி 41 இடங்களிலும் வெற்றிபெற்றன. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஆனாலும் கடந்த 20-ம் தேதிதான் எல்.டி.எஃப் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இரண்டாவது முறையாக முதல்வராக பினராயி விஜயன் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த பினராயி விஜயன் ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவராக ரமேஷ் சென்னிதலா செயல்பட்டார். இந்தமுறையும் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காகக் காய்நகர்த்தினார். வழக்கம்போல காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பிரச்னைகள் தலைதூக்கியதால் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்தது. இதனால் டெல்லி ஹைகமாண்ட் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தது.ரமேஷ் சென்னிதலா
இதையடுத்து இன்று எதிர்க்கட்சித் தலைவராக வீ.டி.சதீசன் நியமிக்கப்பட்டிருப்பதாக டெல்லி தலைமை அறிவித்தது. எதிர்க்கட்சித் தலைவராக வீ.டி.சதீசன் நியமிக்கப்பட்டிருக்கும் தகவலை ஹைகமாண்ட் பிரதிநிதியான மல்லிகார்ஜுன கார்கே கேரள மாநில கமிட்டிக்கு அறிவித்தார். இடது முன்னணி ஆட்சியில் முதல்வர் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களாகவும் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோல, காங்கிரஸிலும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சதீசன் எர்ணாகுளம் மாவட்டம், பறவூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.
இது குறித்து வீ.டி.சதீசன் கூறுகையில்,"கே.கருணாகரன், ஏ.கே.ஆன்றணி, உம்மன்சாண்டி, ரமேஷ் சென்னிதலா ஆகிய முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் பொறுப்பு வகித்த எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட வாய்ப்பு அளித்த நிர்வாகிகளுக்கு நன்றி. எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் மிகப்பெரிய சவால்கள் உண்டு என்பது எனக்குத் தெரியும். கேரளத்தில் காங்கிரஸின் பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் வகையில் செயல்படுவேன். இது மலர் கிரீடம் அல்ல என்பது எனக்குத் தெரியும்.வீ.டி.சதீசன்
எல்லா தளத்திலும் உள்ள தலைவர்களுடனும் ஆலோசித்து ஒருங்கிணைந்து செயல்படுவேன். இந்தப் பதவியின் மகத்துவத்தை நிலைநிறுத்திக்கொண்டு, யு.டி.எஃப் நிர்வாகிகளும், மக்களும் விரும்பும் வகையில் கேரளத்தில் யு.டி.எஃப் மற்றும் காங்கிரஸை மீண்டும் கொண்டுவர முடியும் என ஆத்மார்த்தமாக நம்புகிறேன்" என்றார். காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவராக வீ.டி.சதீசன் நியமிக்கப்பட்டிப்பதற்கு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/S0C9rV
Saturday, 22 May 2021
Home »
» கேரளா: எதிர்க்கட்சித் தலைவரானார் வீ.டி.சதீசன்; காங்கிரஸ் ஹைகமாண்டுக்கு ராகுல் கொடுத்த யோசனை!