மும்பை அருகில் உள்ள தானேயில் வசிப்பவர் சேதன். இவரின் மனைவி மீனல். மீனல் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். நாக்பூரில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்குப் பிரசவத்துக்காகச் சென்றிருந்தார் மீனலுக்கு, 32 வார கர்ப்பமாக இருந்தபோது கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். மீனலைக் காப்பாற்ற முடியாது என்ற ஒரு சூழ்நிலை வந்தபோது, சிசேரியன் மூலம் குழந்தை குறை பிரசவத்தில் வெளியில் எடுக்கப்பட்டது.
குழந்தைக்குத் தாய்ப்பால் தேவைப்பட்டது. உடனே அங்குள்ள நல்லுள்ளம் கொண்ட தாய்மார்கள், தாய்ப்பால் கொடுத்து குழந்தையைக் காப்பாற்றி வந்தனர். இந்நிலையில் குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. குழந்தை தன் தந்தையுடன் தானே வர, அக்குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் தேவைப்பட்டது. யாராவது தாய்ப்பால் தானம் கொடுப்பார்களா என்று சேதன் தேட ஆரம்பித்தார். இது தொடர்பாக சேதனுக்கு தெரிந்த ஒருவர், ட்விட்டரில் பதிவிட்டார். தாய்ப்பால் - Representational Image
உடனே, தாய்ப்பாலுக்கு உதவுவதாக ஏராளமானோர் சேதனுக்கு போன் செய்தனர். காப்பீட்டு நிறுவன ஊழியர் நயா பேடி என்பவர், `சேதனின் குறைப்பிரசவ குழந்தைக்கு தாய்ப்பால் தேவை' என்று கூறி ட்விட்டரில் பதிவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் 100 பேர் தாய்ப்பால் கிடைக்க உதவுவதாகக் கூறிப் பதிவிட்டனர்.
இது குறித்து நயா பேடி கூறுகையில், ``டெல்லியைச் சேர்ந்த ஒருவர்தான் எனக்கு போன் செய்து, குறைப்பிரசவத்தில் பிறந்து, தாயை இழந்த குழந்தைக்குத் தாய்ப்பால் தேவைப்படுவதாகத் தெரிவித்தார். உடனே இது தொடர்பாக நான் ட்விட்டரில் பதிவிட்டேன். உடனடியாக 100-க்கும் மேற்பட்டவர்கள் தாய்ப்பால் கிடைக்க உதவுவதாகப் பதிவிட்டு இருந்தனர்" என்றார்.
``குழந்தை நாக்பூரில் இருந்தபோது, சுனித் நாராயண் என்பவர்தான் ஒரு மாதமாகத் தாய்ப்பால் தானம் செய்த தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை வாங்கி வந்து குழந்தைக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். வழக்கறிஞர் பூமிகா, ஆசி குப்தா, ஐஸ்வரி, நிதி ஆகியோர் கொரோனா காலத்திலும் தங்களது பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்து உதவினர். இதை ஒருபோதும் மறக்க மாட்டோம்" என்று சேதனின் சகோதரி ஷானு பிரசாத் தெரிவித்தார். தாய்ப்பால் - Representational Image
பிறக்கும்போதே தாயைக் கொரோனாவுக்குப் பறிகொடுத்த தன் குழந்தைக்கு, சேதன் மும்பை, தானே பகுதியில் உள்ள நல்லுள்ளம் கொண்ட தாய்மார்களிடமிருந்து தொடர்ந்து தாய்ப்பால் வாங்கிக் கொடுத்து வருகிறார். மும்பையில் உள்ள மாகிம், போரிவலி, ஜோகேஸ்வரி போன்ற பகுதியைச் சேர்ந்த தாய்மார்கள் சேதனின் குழந்தைக்குத் தாய்ப்பாலை அனுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, மும்பையில் 500-க்கும் அதிகமான தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/S0d2Kh
Saturday, 29 May 2021
Home »
» மும்பை: கொரோனாவால் உயிரிழந்த தாய்; இணையம் மூலம் பச்சிளங்குழந்தைக்குக் கிடைத்த தாய்ப்பால் உதவி!