நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து கேரளாவை நோக்கி பிக்கப் வாகனம் ஒன்று நாடுகாணி - வழிக் கடவு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் சாலையோர தடுப்பு சுவரின் மோதி கவிழ்ந்துள்ளது. இதில் வாகன ஓட்டுநர் தூக்கி எறியப்பட்டு உடலில் காயங்களுடன் சுய நினைவை இழந்து பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அசைவின்றி கிடந்த ஓடுநரைப் பார்த்த மக்கள், அவர் இறந்துவிட்டதாக எண்ணி அருகில் செல்லாமல் வேடிக்கை பார்த்தபடி நின்றுள்ளனர். விபத்தில் உயிர் பிழைத்த ஓட்டுநர்
வழக்கமான ரோந்து பணிக்காக அந்த வழியாகச் சென்ற நீலகிரி மாவட்ட க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் மரக்கார் ஆகிய இருவரும் மக்கள் கூடியருப்பதைக் கண்டு வாகனத்தை நிறுத்தி கள நிலவரத்தைக் கேட்டறிந்துள்ளனர்.
பேச்சு மூச்சின்றி கிடந்த ஓட்டுனரின் உடலை தொட்டுப்பார்த்து உடல் சூடு இருப்பதைக் உணர்ந்து, துரிதமாகச் செயல்பட்டு ஓட்டுநரின் மார்பில் கைகளால் அழுத்தம் கொடுத்துக் கொடுத்து, சி.பி.ஆர் (CardioPulmonary Resucsitation(CPR) உயிர்காப்பு முறையில் அவரது உயிரைக் காப்பாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அவரது கை மற்றும் கால்களை தேய்த்து, மார்பில் அழுத்தம் கொடுத்துள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவரும் உதவி செய்துள்ளார். இந்த முதலுதவிகளால் ஓட்டுநரின் சுவாசம் மெல்ல சீராகி கண்களை திறந்து பார்த்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்த ஓட்டுநர் நல்லமுறையில் உள்ளார். விபத்தில் உயிரிழந்தாக மக்கள் நம்பிய நபரை, சமயோசிதமாகச் செயல்பட்டு உயிர்காத்த காவலர்களுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. விபத்தில் உயிர் பிழைத்த ஓட்டுநர்
இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய காவலர் ஒருவர், ``இந்த வாகனத்தை ஓட்டி வந்தது கேரளா கொழிஞ்ஞம்பாறை பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்ற ஓட்டுநர். விபத்தில் ஏற்பட்ட காயத்தால் சுயநினைவின்றி கிடந்தார். நம் காவலர்களின் சாதுர்யத்தால் உயிர் பிழைத்துள்ளார். கேரளாவில் உள்ள பூக்கோட்டும் பாடம் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளோம்" என்றார்.
துரிதமாகச் செயல்பட்டு ஓட்டுநரின் உயிரைக் காத்த இந்த நெகிழ்ச்சி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக காவல்துறையினரை கேரள நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
http://dlvr.it/S0gxt8
Sunday, 30 May 2021
Home »
» நீலகிரி: விபத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்த ஓட்டுநர்; சமயோசிதமாக உயிரைக் காப்பாற்றிய போலீஸார்!