வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்கும் விவகாரத்தில் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக மத்திய அரசை மும்பை உயர் நீதிமன்றம் விமர்சித்திருந்த நிலையில், மத்திய அரசின் கைகளிலேயே அனைத்தும் உள்ளது என்று மும்பை மாநகராட்சியும் கைவிரித்துள்ளது. சில தினங்களுக்கு முன், '75 வயதைக் கடந்தவர்கள், நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் படுக்கையில் இருப்பவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கேச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்' எனக் கோரி துருதி கபாடியா, குனால் திவாரி என்ற இரண்டு வழக்கறிஞர்கள், மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர். தற்போதைய சூழ்நிலையில், மும்பையில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்துவிட்டாலும், அங்கு கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசி போட பதிவு செய்துள்ளவர்கள் அதற்காக பல நாள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. 18 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமல்ல; வயதானவர்களுக்கும் இதே நிலைதான் என்பதால் இந்த இரண்டு வழக்கறிஞர்களும் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திபன்கர் தத்தா, "வயதானவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் தடுப்பூசி பெற உரிமை இல்லை என்று மத்திய அரசு சொல்கிறதா? உங்கள் பதில் மூலம் மத்திய அரசு வீட்டில் சென்று தடுப்பூசி போட தயாராக இல்லை என்பது தெரிகிறது. மும்பை மாநகராட்சி, முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் வீட்டுக்கேச் சென்று தடுப்பூசி போடத் தயாராக இருக்கும் பட்சத்தில் மத்திய அரசின் அனுமதி வேண்டி காத்திருக்க வேண்டாம். நாங்களே அனுமதி தருகிறோம். மும்பை மாநகராட்சி இதை செய்ய முடியுமா என்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் இக்பால் பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி, மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் இந்த விவகாரத்தில் தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், "ஊனமுற்றோர், முதியோர் போன்றோர்களுக்கு வீட்டில் சென்று தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு நடைமுறைகளை வகுக்க வேண்டும். நடைமுறைகளை வகுத்தால் தான் அவர்களின் வீடுகளுக்கே சென்று, தடுப்பூசி செலுத்த முடியும்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. இதுதொடர்பாக உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த மும்பைவாசி ஒருவர், "இந்தப் பதிலால் முதியவர்களால் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். ஏனென்றால், தடுப்பூசிக்காக மும்பை முதியவர்கள் அவதியடைந்து வருகின்றனர். தடுப்பூசிக்காக மருத்துவமனைகளில் முதியவர்கள், ஊனமுற்றோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. அப்படி காத்திருக்கும்போது மயக்கம் போன்ற பல்வேறு பிரச்னைகளால் அவர்கள் அவதியுற்று வருகிறார்கள். அவர்களின் நிலையை எண்ணி இந்த விவகாரத்தில் மத்திய அரசு சீக்கிரமாக முடிவெடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
http://dlvr.it/S0CBHs
Saturday, 22 May 2021
Home »
» "மத்திய அரசின் கைகளில்தான் எல்லாம்!" - முதியோருக்கு தடுப்பூசி... கைவிரிக்கும் மும்பை!