லட்சத்தீவு குறித்து தினமும் புதுப்புது தகவல்கள் வெளியே வந்தவண்ணம் உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்ற புதிய ஆட்சியாளர்/ நிர்வாகி பிரஃபுல் கோடா பட்டேல் பல புதிய விதிகளை லட்சத்தீவில் அரங்கேற்றியுள்ளார். பிரஃபுல் கோடா பட்டேல்லட்சத்தீவில் தங்கியிருந்தது சிலநாட்கள்தான் என்றும், அதன்பிறகு அவர் டாமன் தீவுக்கு சென்றுவிட்டார் என்று கூறுகின்றனர் தீவுவாசிகள். டாமன் தீவில் இருந்தபடிதான் புதிய சட்ட விதிகளை பிறப்பித்துக் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.
பிரஃபுல் பட்டேல் கொண்டுவந்த சட்ட விதிகளில் ஒன்றுதான் மாவட்ட பஞ்சாயத்தின் அதிகார குறைப்பு. மாவட்ட பஞ்சாயத்தின் அதிகாரங்கள் அட்மினிஸ்டேட்டரின்(பிரஃபுல் கோடா பட்டேல்) வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. லட்சத்தீவில் இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல சட்டசபை இல்லை. எனவே அங்குள்ள உயர்ந்த அதிகாரம் மாவட்ட பஞ்சாயத்து மட்டுமே. பஞ்சாயத்து ரெகுலேஷன் ஆக்ட் என்ற சட்டத்தை கொண்டுவந்து மாவட்ட பஞ்சாயத்தின் அதிகாரத்தில் கைவைத்துள்ளார் பிரஃபுல் பட்டேல்.தென்னை மரங்களில் காவி பெயிண்ட்
லட்சத்திவு கல்வித்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, விவசாயம், சுகாதாரத்துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகள் எல்லாம் முன்பு மாவட்ட பஞ்சாயத்தின் அதிகாரத்தின் கீழ் இருந்தன. மீன்பிடி படகுகள் வாங்குவதற்கான மானியம் வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்கள் மாவட்ட பஞ்சாயத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டே இருந்தது. இவை அனைத்தையும் அட்மினிஸ்டேட்டரின் அதிகார வரம்பிற்குள் மாற்றியுள்ளார் பிரஃபுல் கோடா பட்டேல்.
அதுமட்டுமல்லாது லட்சத்தீவில் சாலை ஓரங்களில் உள்ள அனைத்து தென்னை மரங்களிலும் காவி வண்ணம் பூச வேண்டும் என வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக கிரிமினல் குற்ற வழக்குகளில் பெரிய அளவில் யாரும் சிறைக்குச் சென்றதில்லை. சைக்கிளில் லைட் இல்லாமல் சென்றது, பைக்கில் மூன்றுபேர் பயணித்தது போன்ற வழக்குகள்தான் அங்குள்ள கோர்ட்டில் பதிவாகியுள்ளதாக கூறுகின்றனர் தீவு வாசிகள். ஆனால், அட்மினிஸ்டேட்டரை எதிர்ப்பவர்களை கைது செய்வதற்காக குண்டாஸ் ஆக்ட் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீவுவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.பிரபுல் கோடா பட்டேல்
இதற்கிடையில் கேரள மாநிலத்தில் பா.ஜ.க தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் லட்சத்தீவை காப்பாற்றுவோம் என்ற தலைப்பில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் எம்.பி-க்கள் அனைவரும் லட்சத்தீவில் சென்று ஆய்வுசெய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கேரள எதிர்கட்சி தலைவர் வீ.டி.சதீசன் தெரிவித்திருக்கிறார். லட்சத்தீவு பிரச்னை தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
http://dlvr.it/S0gxqP
Sunday, 30 May 2021
Home »
» லட்சத்தீவு: `பஞ்சாயத்து ஒழுங்குமுறை சட்டம்’ மூலம் கைமாறிய அதிகாரங்கள்! - தொடரும் சர்ச்சை