வைரமுத்துவுக்கு ஓ.என்.வி விருது வழங்க சின்மயி, பார்வதி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு விருது அறிவிக்கப்பட்டது மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஓஎன்வி கலாச்சார மையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது விருது பெற்ற கேரளாவின் பிரபல இயலக்கியவாதியும் தேசிய விருது பெற்ற பாடலாசிரியருமான ஓ.என்.வி குறுப் பெயரில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இலக்கியத்திற்காக சிறந்த பங்களிப்பை செய்து வருபவர்களுக்கு ஓ.என்.வி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு கவிஞர் வைரமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டதாக கடந்த 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டார். பாலியல் குற்றச்சாட்டு உள்ள நபருக்கு கேரளாவின் உயரிய ஓஎன்வி விருது வழங்கப்படுவதா? என்று பாடகி சின்மயி, நடிகை பார்வதி, பெண்ணியவாதிகள் பலரும் கண்டனக் குரல் எழுப்பினர். குறிப்பாக நடிகை பார்வதி “ஓ.என்.வி சார் நமது பெருமை. ஒரு கவிஞராகவும் பாடலாசிரியராகவும் அவரது பங்களிப்பு ஈடு செய்ய முடியாதது. நம் கலாச்சாரத்தையும் வளர்த்தது. அவரது இலக்கிய பணியால் நம் இதயங்கள் பயனடைந்துள்ளன. பாலியல் புகார்கள் பல சுமத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கு அவர் பெயரில் விருது வழங்குவது பெரும் அவமரியாதை” என்று பாடலாசிரியர் வைரமுத்து ஓ.என்.வி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு ஓ.என்.வி கலாச்சார மையத்தின் தலைவர் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இன்று அடூர் கோபால கிருஷ்ணன், ”வைரமுத்துவின் சிறந்த எழுத்துக்காக மட்டும்தான் நடுவர்கள் விருதுக்காக தேர்வு செய்தார்கள். அவரின் தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காக அல்ல. இதுதொடர்பாக விரைவில் கூட்டம் நடத்தி மறுபரிசீலனை செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார். அதோடு, அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
http://dlvr.it/S0d2mK
Saturday, 29 May 2021
Home »
» வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டது மறுபரிசீலனை செய்யப்படும் - ஓஎன்வி மையம் அறிவிப்பு