’’தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்’’ என ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருவள்ளூரில் நேமம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தபிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ’’தளர்வில்லா ஊரடங்கால் கடந்த 2 நாட்களாக நல்ல பலன் கிடைத்து வருகிறது. முழு ஊரடங்கின் பலன் அடுத்த 2,3 நாட்களில் தெரியத் தொடங்கும். கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முழு ஊரடங்கை கடைபிடித்து வீட்டிலேயே இருக்கவேண்டும். கொரோனா தொற்றை தடுக்கும் பணியில் தமிழக அரசு முழு மூச்சாக செயல்படுகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை அரசு உருவாக்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரேநாளில் 2,24,544 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தில் தடுப்பூசி போடும் சராசரி விகிதம் உயர்ந்திருக்கிறது. தடுப்பூசிதான் நமது காவல்காரனாக விளங்குகிறது என்பதால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தினசரி பரிசோதனை சராசரியாக 1.64 லட்சமாக உள்ளது. அதேபோல் கோவையிலும் கொரோனா பரவலைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது’’ என்று கூறினார். மேலும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு ‘தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்’ என்று முதல்வர் சூசகமாக பதிலளித்துள்ளார்.
http://dlvr.it/S0RSPV
Wednesday, 26 May 2021
Home »
» ’’தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்’’ - ஊரடங்கு குறித்து முதல்வர் பேட்டி