கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை நான்கு லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றால் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறி தென்படாதவர்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அப்படித் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளைத் தன்னார்வத் தொண்டர்கள் செய்து வருகின்றனர்.
ஆலப்புழா மாவட்டம் புன்னப்புரா பஞ்சாயத்தில் உள்ள டி.சி.டி சென்டரில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவுகளை ஆலப்புழா பகவதிகால் யூனிட் டி.ஒய்.எஃப்.ஐ உறுப்பினர்களான அஸ்வின் குஞ்சுமோன் மற்றும் ரேகா பி.மோள் ஆகியோர் வழங்கி வந்தனர்.மூச்சுத்திணறல் ஏற்பட்ட நோயாளியை பைக்கில் அழைத்துச் செல்லும் காட்சி
நேற்று டி.சி.சி சென்டருக்கு உணவு வழங்க அஸ்வின், ரேகா ஆகியோர் சென்றனர். அப்போது மூன்றாவது மாடியில் கொரோனா நோயாளி ஒருவர் மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார். இதைப் பார்த்த அஸ்வின், ரேகா ஆகியோர் அவரை உடனடியாகத் தரைத்தளத்துக்கு அழைத்து வந்தனர். அதைப் பார்த்த சென்டர் நிர்வாகிகள் உடனடியாக ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வர 10 நிமிடங்கள் வரை ஆகும் எனக் கூறப்பட்டது.
அதுவரை காத்திருந்தால் அந்த நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்ததால் அஸ்வினும் ரேகாவும் பைக்கில் அவரை அமரவைத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இது சமூக வலைதளங்களில் பரவியதால் அஸ்வின், ரேகா ஆகியோருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்து ரேகா பி.மோள் கூறுகையில், ``அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள ஆலப்புழா மகளிர் இன்ஜினீயரிங் கல்லூரிக்கு காலை 9 மணிக்கு உணவு வழங்கச் சென்றோம்.டி.ஒய்.எஃப்.ஐ நிர்வாகிகள் அஸ்வின் மற்றும் ரேகா
அப்போது மூன்றாம் தளத்தில் ஒருவர் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார். நாங்கள் அவரை கொரோனா தொற்று பாதித்த பிற நோயாளிகள் உதவியுடன் தரைத்தளத்துக்கு அழைத்து வந்தோம். டி.சி.சி சென்டர் நிர்வாகிகள் ஆம்புலன்ஸுக்கு தகவல் கூறினர். ஆம்புலன்ஸ் வர 10 நிமிடங்கள் வரை ஆகும் என்றனர். அதுவரை அவர் உயிரை காப்பது கஷ்டம் எனத் தெரிந்தது. உடனே அவரை பைக்கில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தோம்.
அஸ்வின் பைக் ஓட்டினார். நோயாளியை நடுவில் உட்கார வைத்து நான் பின்னால் அமர்ந்துகொண்டேன். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு முதலில் அட்மிட் செய்ய மறுத்தனர். பின்னர், நோயாளியின் நிலையைப் பார்த்து அவர்கள் அட்மிட் செய்து சிகிச்சை அளித்தனர். பின்னர், அவரை கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றினர்" என்றார்.அஸ்வின் குஞ்சுமோன்
மூச்சுத்திணறல் ஏற்பட்ட கொரோனா நோயாளியைக் காப்பாற்றிய அஸ்வினும் ரேகாவும் பாதுகாப்பாக முழுக்க பி.பி.இ கிட் அணிந்திருந்தனர். அதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அஸ்வின் கூறுகையில், ``நாங்கள் பி.பி.இ கிட் அணிந்து பாதுகாப்பாக கொரோனா கேர் சென்டருக்குள் சென்று உணவு வழங்கி வந்தோம். அந்த சமயத்தில்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்தோம். ஒருவேளை நாங்கள் பி.பி.இ கிட் அணியாமல் இருந்திருந்தாலும் அவரை பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்போம். அதனால் எங்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படலாம். ஆனால், ஓர் உயிரைக் காப்பாற்றுவது முக்கியம் அல்லவா?" என்றார்.
http://dlvr.it/RzLrR1
Sunday, 9 May 2021
Home »
» கேரளா: மூச்சுத்திணறிய கொரோனா நோயாளி... பைக்கிலேயே மருத்துவமனை கொண்டுசென்ற தன்னார்வலர்கள்!