கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டுப் பகுதியில், சட்டவிரோதமாக அணைக்கட்டும் முயற்சியை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. இதனை தடுத்து நிறுத்த, தமிழக அரசு உடனடியாக, மேக்கேத்தாட்டு பகுதிக்கு வல்லுநர் குழுவை அனுப்ப வேண்டும் எனவும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை உயிர்ப்பிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவருமான பெ.மணியரசன் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.பெ.மணியரசன்
இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய பெ.மணியரசன், ‘’மத்திய அரசின் சூழலியல் துறை, வனத்துறை ஆகியவற்றின் அனுமதியைப் பெறாமல், சட்ட விரோதமாக மேக்கேத்தாட்டில் காவிரியின் குறுக்கே அணைகட்டும் பணிகளைக் கர்நாடக அரசு தொடங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, தேசியப் பசுமைத் தீர்ப்பாயத் தென் மண்டலப் பிரிவு, தானே முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக் குழு அமைத்துள்ளது.
தமிழக அரசின் உளவுத்துறை மற்றும் நீர்வளத்துறை, சட்டத்துறை ஆகிய எதுவும் கர்நாடக அரசின் சட்டவிரோத அணைகட்டும் பணிகளைக் முன்கூட்டியே கண்டறியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. வெள்ளக் காலத்தில் கர்நாடக அணைகளில் தேக்க முடியாத காவிரி நீரையும் கூட மேக்கேத்தாட்டுவில் தேக்கி வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூடப் போகாமல் தடுக்க வேண்டும் என்ற சதி நோக்குடன்தான் கர்நாடகம் அந்த அணையைக் கட்ட முயல்கிறது..
மேக்கேத்தாட்டு அணைத் திட்டம், உச்ச நீதிமன்றத்தின் காவிரித் தீர்ப்புக்கு எதிரானது என காவிரி உரிமை மீட்புக் குழு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. மேக்கேதாட்டு கட்டுமானப் பணிகளைத் தடுப்பதற்காக 07.03.2015 அன்று கர்நாடகம்-தமிழகம் எல்லையான தேன்கனிக்கோட்டையிலிருந்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் 5,000 பேர் நடைபயணம் புறப்பட்டுக் கைதானோம். மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் சட்டவிரோத முயற்சிக்குத் தடை கோரித் தமிழ்நாடு அரசு கடந்த 2018 நவம்பரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளது. அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கிடப்பில் போட்டுவிட்டது. தமிழ்நாடு அரசும் அவ்வழக்கை உயிர்ப்பித்து, விரைந்து நடத்த உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இப்பொழுது, ஏதோ ஓர் செய்தி ஊடகத்தில் மேக்கேதாட்டு அணைகட்டும் பணிகள் நடப்பதாக செய்தி வர, அது நம்பகமான செய்தியாகத் தெரிவதால், வனப்பாதுகாப்பு, சூழல் பாதுகாப்பு கருதி, தானே முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தீர்ப்பாய நீதிபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு, வல்லுநர் குழு அமைத்து, மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கான அடிப்படைப் பணிகள் நடந்துள்ளனவா என்று கண்டறிந்து அறிக்கை தரக் கர்நாடகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அத்துடன், உச்ச நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள மேக்கேதாட்டு அணை தடுப்புக்கான வழக்கை உயிர்ப்பித்து, உடனடியாக விசாரணை நடக்கத் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை கட்ட திட்ட மதிப்பீட்டு அறிக்கை அனுப்புமாறு கர்நாடக அரசைக் கோரி இந்திய அரசின் நீர்வளத்துறை கொடுத்த மறைமுக அனுமதியை திரும்பப் பெறுமாறு நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்து வலியுறுத்த வேண்டும். மேற்கண்ட மூன்று கோரிக்கைகள் மீதும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கவனம் செலுத்தி, போர்க்கால அவசரத்துடன் நடவடிக்கை எடுக்குமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்’’ என தெரிவித்தார்.
http://dlvr.it/S0YCPS
Friday, 28 May 2021
Home »
» `மேக்கேதாட்டுக்கு உடனே வல்லுநர் குழுவை அனுப்ப வேண்டும்!’ - முதல்வருக்கு பெ.மணியரசன் கோரிக்கை