திருமண வரன்களை தேடிக்கொடுப்பதற்காக ஏராளமான இணையதளங்கள் வந்துவிட்டது. அவற்றின் மூலம் எந்தவித தொடர்பும் இல்லாமல் தனியாக வசிப்பவர்கள்கூட தங்களது பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. ஆனால் இதுபோன்ற இணையதளங்களை சிலர் தவறான வழிகளுக்கும் பயன்படுத்துகின்றனர். இதில் அதிகமாக பெண்கள்தான் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மும்பையில் வாலிபர் ஒருவர் திருமண தகவல் இணையதளங்களில் மணமகன் தேவை என்று விளம்பரம் கொடுத்திருப்பவர்களின் போன் நம்பரை எடுத்து பேசி அவர்களது வாழ்க்கையை சீரழித்துள்ளார். மகேஷ் என்ற கரண் குப்தா (32) ஒரு மெக்கானிக்கல் இன்ஜினீயர். பிரபலமான கல்லூரியில் படித்த இவர் பிரபல கம்பெனிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சித்தரிப்பு படம்
மகேஷ் திருமண தகவல் இணையதளங்களில் பல்வேறு போலி பெயர்களில் தகவல்களை பதிவேற்றம் செய்வார். இணையதளத்தில் பதிவுக்கட்டணம் செலுத்திவிட்டால் திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுவிடும். அது போன்று மகேஷ் பெண்களின் போன் நம்பர்களை எடுத்து அதில் நன்றாக படித்த வேலையில் இருக்கும் பெண்களை மட்டும் குறிவைத்து காய்நகர்த்தியுள்ளார். அப்பெண்களுடன் போனில் தொடர்புகொண்டு தான் பெரிய கம்பெனியில் மெக்கானிக்கல் இன்ஜினீயராக இருப்பதாகக்கூறி திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறுவார். அவரின் ஆசை வார்த்தையில் விழும் பெண்களை நேரில் சந்திக்கவேண்டும் என்று மகேஷ் கூறுவார். அப்பெண்ணின் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு பப், ஓட்டல்களுக்கு அழைத்துச் செல்வதுண்டு. அப்படி செல்லும்போது சரியான சந்தர்ப்பத்தில் அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு தலைமறைவாகிவிடுவார். அதன் பிறகு அவரைத் தொடர்புகொள்ள முடியாது. தனது மொபைல் நம்பரை மாற்றிவிடுவார். அவர் பயன்படுத்தும் மொபைல் நம்பர்களும் அவரது பெயரில் இருக்காது. இதனால் பாதிக்கப்படும் பெண்களால் அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
சில பெண்கள் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தனர். ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மகேஷ் மீது புகார் செய்ததால் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். மகேஷை தொடர்ந்து போலீஸார் கண்காணித்து வந்தனர். மகேஷ் கம்ப்யூட்டரில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவர். அதோடு சில காலம் ஹேக்கராகவும் பணியாற்றியவர். எனவே போலீஸார் எப்படி தன்னை கண்டுபிடிப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தக்கபடியெல்லாம் நடந்துகொண்டார். குறிப்பாக தடயங்கள் எங்கும் சிக்காமல் பார்த்துக்கொண்டார். ஓலா, உபேர் டாக்சிகளை புக் செய்யும்போதுகூட தனது பெயரில் இருக்கும் சிம்கார்டுகளை பயன்படுத்துவது கிடையாது. ஒரு பெண்ணிற்கு ஒரு சிம்கார்டு என்ற கோணத்தில் மகேஷ் தனது லீலைகளை நடத்திக்கொண்டிருந்தார். போலீஸார் நீண்ட தேடுதல் மற்றும் கண்காணிப்புக்குப் பிறகு மேற்கு மும்பையில் உள்ள மலாடில் அவரைக் கைது செய்தனர். அவர் மீது முறைப்படி 12 பெண்கள் புகார் கொடுத்திருப்பதாக டிசிபி சுரேஷ் மங்காடே தெரிவித்துள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பெண்களிடம் இருக்கும் நகை மற்றும் பணத்திற்குத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் மகேஷ் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார்.
http://dlvr.it/S1J2tV
Tuesday, 8 June 2021
Home »
» மும்பை: மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் வலை.. 12 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்! சிக்கிய இன்ஜினீயர்!