பாஜகவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான அயோத்தி ராமர் கோயிலுக்குக் கடந்த 2019-ல் உச்ச நீதிமன்றம் கிரீன் சிக்னல் காட்டியதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி தலைமையிலான அரசு வரும் 2023-க்குள் முழுமையாகக் கட்டுமான பணிகளை முடிக்கத் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக முன்வைத்த மிகமுக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் அயோத்தி ராமர் கோயிலும் ஒன்றாகும். கோயில் கட்டுமான பணிகள் தொய்வின்றி நடைபெறுவதற்காக மாநில அரசு தனி கமிட்டி ஒன்றினையும் அமைத்தது. அதன் முழு பொறுப்பையும் 15 பேர் கொண்ட ராம ஜென்ம பூமி அறக்கட்டளையிடம் ஒப்படைத்தது. அந்த அறக்கட்டளையின் மேற்பார்வையின் கீழ் தான் கட்டுமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ராமர் கோயில் கட்டுமான பணிக்காக நிலம் வாங்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள்
இது தொடர்பாக, உ.பி சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பவன் பாண்டே கூறுகையில், “உள்ளூர் பாஜக தலைவர்கள் மற்றும் சில அறக்கட்டளை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்த நில மோசடி ஒப்பந்தம் நடந்துள்ளது. மார்ச் 18-ம் தேதி அந்த நிலம் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அதேநிலம் 10 நிமிட இடைவெளியில் 18.5 கோடிக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையால் வாங்கப்பட்டதற்கான ஆவணங்களையும் நான் வைத்திருக்கிறேன். 10 நிமிடத்தில் 16.5 கோடி விலை உயரும் அளவுக்கு அந்த நிலத்தில் என்ன தங்கம் விளைந்துவிட்டதா என்று தெரியவில்லை.
ஒப்பந்தம், பத்திரப்பதிவு ஆகிய இரண்டிற்குமே அறங்காவலர் அனில் மிஷ்ரா மற்றும் மேயர் ரிஷிகேஷ் ஆகியோர் சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது முறைகேடு நடக்கவில்லை என்று மறுக்க முடியாது. 10 நிமிடத்தில் 16.5 கோடி ஊழல் செய்துள்ளனர். ராமர் கோயிலுக்கு நிலம் என்ற பெயரில் ராமரின் பக்தர்கள் ஏமாற்றப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் முறையான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் ராமர் கோவிலுக்காக நன்கொடை வழங்கி வருகின்றனர். தங்களுடைய சேமிப்புகளிலிருந்து நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்த மக்களின் பணத்தில் நீங்கள் இவ்வாறு செய்வது அவர்களை அவமதிப்பதாகும்" என்று கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தைச் சாடினார்.
அதே போல், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "பகவான் ராமரின் பெயரில் ஊழல் செய்வார்கள் என யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் ஆவணங்கள் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதைக் காட்டுகின்றன. நிலத்தின் விலை, விநாடிக்கு சுமார் 5.5 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்த நிலமும் ஒரு நொடியில் இவ்வளவு விலை உயர்ந்திருக்க வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்” என்றார்.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் பக்தியால் கடவுளின் காலடியில் தங்கள் காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ஆனால் அந்த நன்கொடையைத் தவறாகப் பயன்படுத்துவது அநீதியானது. இது ஒரு பாவம் மற்றும் பக்தர்களின் நம்பிக்கையை அவமதிக்கும் செயலாகும்" என்று பதிவிட்டுள்ளார்.பிரியங்கா காந்தி
எதிர்க்கட்சிகள் விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து கேள்வி எழுப்பி அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை நிர்வாகம் குற்றச்சாட்டினை மறுத்திருக்கிறது. இது தொடர்பாக விளக்க அறிக்கை வெளியிட்டுள்ள அறக்கட்டளை பொதுச்செயலாளரும், விசுவ இந்து பரிஷத்தை சேர்ந்தவருமான சம்பத் ராய், "அயோத்தியில் ஏற்கனவே உள்ள குழந்தை ராமர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளை விரிவுபடுத்துவதற்காக அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கி வருகிறோம். போக்குவரத்து எளிதாக இருப்பதற்காக, கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள நிலம் தேவைப்பட்டது. அதற்காக வீடுகளும், சிறு கோவில்களுமாக இருந்த அந்த நிலத்தை வாங்கினோம். அங்கு வசித்தவர்களை வேறு இடத்தில் குடியமர்த்துவதற்காக, அயோத்தியில் பாக் பிஜைசி என்ற இடத்தில் உள்ள 12 ஆயிரத்து 80 சதுர மீட்டர் நிலத்தை அறக்கட்டளை வாங்கியது. அந்த நிலத்துக்கு ரூ.2 கோடியே 16 லட்சம் விலை என்ற அடிப்படையில், 2017-ம் ஆண்டு முதல்கட்ட ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. முன்பணமாக ரூ.92 லட்சம் கொடுக்கப்பட்டு இருந்தது. அது, 2017-ம் ஆண்டின் சந்தை விலை அடிப்படையில் மதிப்பிடப்பட்ட விலை என்பதால் குறைவாக இருந்தது. அப்போது, ராமர் கோயில் கட்ட அனுமதிப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவில்லை. அந்த தீர்ப்பு, 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி வெளியானது. அதன்பிறகு நிலத்தின் மதிப்பு ஏறக்குறைய 10 மடங்கு கூடிவிட்டது. அதனால்தான், கடந்த மார்ச் மாதம் அந்த நிலத்தை ராமர் கோயில் அறக்கட்டளை வாங்கியபோது, விலை 9 மடங்கு அதிகரித்து விட்டது.
நிலத்தின் உரிமையாளர்கள் 2017-ம் ஆண்டே அதை வாங்கியவர்களுக்குக் கடந்த மார்ச் மாதம் தான் பத்திரப்பதிவு செய்து கொடுத்தனர். அடுத்த சிறிது நேரத்தில், ராமர் கோவில் அறக்கட்டளைக்கு நிலம் பதிவு செய்யப்பட்டது.ஆனால், சந்தை விலையை விடக் குறைவான விலையில் தான் அதை வாங்கி இருக்கிறோம். எனவே, நிலம் வாங்கியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அதற்காக ஆதாயம் தேடவே எதிர்க்கட்சியினர் இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர்" என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
http://dlvr.it/S1lPyD
Tuesday, 15 June 2021
Home »
» அயோத்தி: 2 கோடி மதிப்புள்ள நிலம் 10 நிமிடத்தில் 18.5 கோடிக்கு வாங்கப்பட்டதா?! - பின்னணி என்ன?