2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்கான காயத்தை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி சரி செய்யும் என்று நியூசிலாந்து அணியின் மூத்த வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிப்பெற்று கோப்பையை கைப்பற்றியது. 5 நாள் ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக 6ஆவது நாளான நேற்று ரிசர்வ் நாளில் முடிவுக்கு வந்தது. இதில் இந்திய அணியை மிகவும் எளிதாக தோற்கடித்தது நியூசிலாந்து அணி. இதில் நியூசிலாந்து அணியின் அனுபவ வீரரான ராஸ் டெய்லர் 47 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றி குறித்து பேசிய ராஸ் டெய்லர் "2019 எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அதனை மறக்க இந்த வெற்றி எங்களுக்கு பெரிதும் உதவும். இந்த இரண்டு ஆண்டு காலத்தில் எங்களுக்கு குடும்பத்தினர், நண்பர்கள் என பெரிதும் உற்சாகப்படுத்தினர். இந்த வெற்றி அவர்களுடன் இன்னும் நல்ல உறவுகளை தொடர கைகொடுக்கும். நியூசிலாந்து அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்ற முதல் நாளில் இருந்தே வில்லியம்சனுடன் இருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக கடினமாக உழைத்துள்ளோம். அதற்கான பரிசுதான் இப்போது உலக சாம்பியன்களாக மாறியிருக்கிறோம்" என்றார். மேலும் பேசிய அவர் "நான் ஆரம்ப காலத்தில் விளையாட தொடங்கிய நாட்களில் எங்களிடம் தரம் இருக்கவில்லை. ஆனால் ஓர் அணியாக ஒன்றாக இருந்தோம். அது வெற்றிக்கு கைக்கொடுத்தது. இப்போது தரமும் ஒற்றுமையும் ஒன்றாக இருப்பதால் வெற்றி வசமாகிறது. இதற்கு ரசிகர்களும் ஓர் காரணம். அவர்கள் எப்போதும் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இப்போது நிச்சயம் இந்த வெற்றியின் மூலம் அவர்கள் பெருமை அடைந்திருப்பார்கள்" என்றார் ராஸ் டெய்லர்.
http://dlvr.it/S2M27L
Thursday, 24 June 2021
Home »
» "2019 தோல்வியின் காயத்தை இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஆற்றும்" - ராஸ் டெய்லர்