நாட்டில் தற்போது வலுவான எதிர்க்கட்சின் இல்லாமல் இருக்கிறது. இதனால் வரும் 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தல் மீண்டும் பா.ஜ.க-வுக்கு சாதகமாக அமையும் சூழல் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி பெரும்பாலான மாநிலங்களில் மிகவும் பலவீனமாக இருக்கிறது. அதோடு அக்கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்களை பா.ஜ.க ஆசை வார்த்தைகளை கூறி இழுத்துக்கொண்டது. எனவே அக்கட்சியால் 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் மிகவும் பலத்துடன் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையடுத்து எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் இப்போதே இறங்க ஆரபித்துவிட்டன. இதற்கான பணியில் தேர்தல் ஆலோசனைகளை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கி வரும் பிரசாந்த் கிஷோர் முன்னின்று ஈடுபட ஆரம்பித்துள்ளார். பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கத்திற்கு தேர்தல்களில் ஆலோசகராக செயல்பட்டுள்ளார். அவர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார். தென்மும்பையில் உள்ள சரத்பவார் இல்லத்திற்கு காலை 11 மணிக்கு வந்த பிரசாந்த் கிஷோர் பிற்பகல் 2 மணிக்குத்தான் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு புறப்பட்டு சென்றார். இருவரும் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜெயந்த் பாட்டீலும் கலந்து கொண்டார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து 3-வது அணி அமைப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சகன் புஜ்பால் கூறுகையில், `பிரசாந்த் கிஷோர் தேர்தலில் பல கட்சிகள் வெற்றி பெற தேவையான யுக்திகளை வகுத்து கொடுத்து இருக்கிறார். எனவே அவரின் கருத்துக்களை சரத்பவார் பரிசீலிப்பார். இருவரும் என்ன காரணத்திற்காக சந்தித்து பேசினர் என்று தெரியாது. ஆனால் பிரசாந்த் கிஷோர் எதாவது திட்டத்துடன் தான் வந்திருப்பார். அதனை சரத்பவார் நிச்சயம் பரிசீலிப்பார்” என்று தெரிவித்தார்.
இருவரது சந்திப்பு நடப்பதாக செய்தியை கேள்விப்பட்டு சரத்பவார் வீட்டு முன்பாக ஏராளமான பத்திரிக்கையாளர்கள் கூடியிருந்தனர். ஆனால் சந்திப்புக்கு பிறகு இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை. சரத்பவார் பிரசாந்த் கிஷோருக்கு மதிய உணவு கொடுத்து உபசரித்தார். இருவருக்கும் இடையேயான ஆலோசனை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்ததாக தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு பிறகு அரசியல் நடவடிக்கையிலிருந்து ஒதுங்கி இருப்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த அறிவிப்புக்கு பிறகு முதல் முறையாக சரத்பவாரை சந்தித்து பேசியிருக்கிறார். பிரஷாந்த் கிஷோர்
இந்த சந்திப்பு குறித்து சிவசேனாவின் சஞ்சய் ராவத்திடம் கேட்டதற்கு, ``பிரசாந்த் கிஷோரிடம் ஏராளமான அரசியல் தலைவர்கள் தொடர்பில் இருக்கின்றனர்” என்று மட்டும் தெரிவித்தார். ஆனால் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவாரிடம் இது குறித்து கேட்டதற்கு, ``இந்த சந்திப்பில் எந்த வித அரசியல் முக்கியத்துவமும் இல்லை” என்றும் ``ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் அரசியல் நடவடிக்கையில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக தெரிவித்திருப்பதையும்” சுட்டிக்காட்டினார். ஆனால் பிரசாந்த் கிஷோர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் ஆகியோரிடம் நல்ல தொடர்பு இருக்கிறது. அவர்களை ஒன்றிணைத்து விடுவது எளிது என்பதால் முதலில் அவர்களை சந்தித்து பேசிவிட்டு அடுத்து உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், ஆந்திராவில் ஜெகன் மோகன் ஆகியோரையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேச திட்டமிட்டு இருக்கிறார் என்ற தகவலும் தேசிய அளவில் பரபரக்கிறது.
http://dlvr.it/S1Y1dN
Saturday, 12 June 2021
Home »
» 2024 மக்களவைத் தேர்தல்: சரத்பவாரை சந்தித்த பி.கே! - மூன்றாவது அணி குறித்து ஆலோசனை?