ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்த ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்று நேற்றுடன் 2 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். நேற்றைய தினம் இரண்டாண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஜெகன்மோகன் ரெட்டி தான் தேர்தல் நேரத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் 94.5 சதவிகிதத்தை ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் நிறைவேற்றி இருப்பதாக மிகப்பெரிய பட்டியலை வெளியிட்டு பெருமிதம் அடைந்தார்.
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிமுகம் செய்து ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி இருக்கிறார் என்று அனைவரும் மனம் நெகிழ்ந்து போயிருந்த வேளையில், நேற்றைய தினம் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்ட திடீர் அறிவிப்பு ஒன்று சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டி
2019-ம் ஆண்டு ஆந்திர சட்டசபைத் தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்த போதிலும், அனைவரையும் உற்று நோக்க வைத்தது 'மதுவிலக்கு' அறிவிப்பு தான். தேர்தல் அறிக்கையின் நவரத்ன அம்சங்களில் மதுவிலக்கும் ஒன்றாக இருந்தது. ஆந்திரத்தில் பூரண மதுவிலக்கு விரைவில் அமல்படுத்தப்படும் என்று ஆட்சிக்கு வந்ததிலிருந்து உறுதியாகக் கூறி வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு தற்போது தனது முடிவை மாற்றியிருக்கிறது.
2019-ல் ஆட்சி அமைத்த நேரத்தில் கூடிய விரைவில் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் மதுக்கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு மதுவிலக்கு அமலுக்கு வரும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மதுவிலக்கு நிச்சயம் நீடிக்கும் என்றும் ஆளும் ஒய்.எஸ்.ஆர் அரசாங்கம் திடமாகத் தெரிவித்தது. அதற்கான செயல்திட்டத்தைத் தயாரிக்கும் பணியினை ஜனசைத்தன்ய வேதிகா என்ற தொண்டு நிறுவனத்திடம் அப்போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒப்படைத்திருந்தார். அவர்களும் கூடிய விரைவில் நடைமுறைப்படுத்தி விடுவோம் என்று நம்பிக்கையூட்டினார்கள்.மது விற்பனை
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரையிலும், மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வராகப் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே தனியார் நடத்தி வந்த மது விற்பனையை அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தார். தமிழகத்தில் 'டாஸ்மாக்' என்ற பெயரில் மது விற்பனை நடைபெறுவதைப் போல் ஆந்திராவில் 'ஆந்திரப்பிரதேச டிரிங்க்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்' என்பதன் மூலமாக மதுவிற்பனை நடைபெறுவதற்கு வழிவகுத்தார். ஆட்சிக்கு வந்து ஓராண்டுக் காலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் அறிவிப்பு காற்றில் எழுதப்பட்ட வாக்கியமானது.
Also Read: ஆந்திரா: `2 வருடத்தில் 94.5% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன்!' - ஜெகன்மோகன் ரெட்டி
மேலும், மதுவிலக்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக மாநில அரசு ஆந்திராவில் மதுக்கடைகள் திறக்கும் நேரத்தையும், கடைகளின் எண்ணிக்கையை 4,380-லிருந்து 2,934 ஆகக் குறைத்து நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், இன்று வரையிலும் ஆந்திராவில் மதுவிலக்கு அமல்படுத்தப் படவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். நேற்று நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து அறிக்கை வெளியிட்ட கையோடு ஆந்திராவில் மதுவிலக்கு அமலுக்கு வரப்போவதில்லை என்ற அறிவிப்பினையும் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டிருக்கிறார்.
16 பக்க கையேடு ஒன்றினை வெளியிட்டுள்ள முதல்வர் ஜெகன்மோகன் மதுக்கொள்கையில் மாநில அரசு மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். மதுக்கொள்கை மாற்றம் குறித்து அவர் கூறுகையில், "ஆந்திர மாநில மதுக்கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த மாற்றங்களின் படி அரசு 'பூரண மதுவிலக்கு' என்பதிலிருந்து 'கட்டுப்பாடுகளுடன் விற்பனை' என்ற முடிவிற்கு அரசு வந்திருக்கிறது. மது என்னும் அரக்கனிடம் இருந்து குடும்பங்களைக் காப்பாற்றக் குறிப்பிட்ட கால அளவில் மிக அதிக கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும்" என்றார்.மது விலக்கு
இத்தனை ஆண்டுகாலமாகப் பூரண மதுவிலக்கு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வந்த மாநில அரசு, வருவாய் காரணமாகவே தன்னுடைய முடிவினை மாற்றி இருப்பதாகவும், கடந்த நிதியாண்டில் மட்டும் ஆந்திர அரசுக்கு மதுவிற்பனையின் மூலம் 17,600 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தில் மதுபானங்களின் விலை 125 சதவிகிதம் வரை அரசு உயர்த்தி இருப்பதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குஜராத், பீகார், திரிபுரா, நாகாலாந்து, மிஸோரம் வரிசையில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் என்று எதிர்பார்த்துக் கிடந்த ஆந்திரப் பிரதேசத்துக்கு மதுவிலக்கிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது அம்மாநில அரசு.
http://dlvr.it/S0pxTW
Tuesday, 1 June 2021
Home »
» ஆந்திரா: `மதுக்கொள்கையில் மாற்றம்’ - பூரண மதுவிலக்கிலிருந்து பின்வாங்கிய ஜெகன்மோகன் ரெட்டி