பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஆண்டு ஜுன் 14-ம் தேதி மும்பையில் உள்ள பாந்த்ரா இல்லத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியானது. இந்த தற்கொலை சம்பவம் பாலிவுட் சினிமா உலகம் மட்டுமல்லாது, பீகார் அரசியலிலும் புயலை கிளப்பியது நினைவிருக்கலாம். மும்பையில் நடந்த மரணத்துக்கு, பீகார் போலீஸார் தங்களது மாநிலத்தில் வழக்குப் பதிவு செய்தனர். சுஷாந்த் சிங் ராஜபுத்தின் தோழி ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுஷாந்த் சிங் தந்தை பீகார் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் பீகார் போலீஸார் இவ்வழக்கை கையில் எடுத்தனர்.
ஏற்கனவே இவ்வழக்கை மும்பை போலீஸார் விசாரித்துக் கொண்டிருந்தனர். பிரேத பரிசோதனையின் அடிப்படையில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீஸார் முடிவுக்கு வந்தனர். அதோடு அவர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை பீகார் போலீஸாரிடம் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்தனர். ரியா சக்ரபோர்த்தி
பீகார் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு பீகார் போலீஸார் இவ்வழக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர் என்ற குற்றச்சாடும் இருக்கிறது. இப்பிரச்னை சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. சுப்ரீம் கோர்ட் இதனை விசாரித்து வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. சி.பி.ஐ. இவ்வழக்கை கையில் எடுத்தவுடன் அமலாக்கப்பிரிவும் இதில் சேர்ந்துக்கொண்டது. சுஷாந்த் சிங்கின் பல கோடி பணத்தை அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி பரித்துவிட்டதாக சுஷாந்த் சிங் தந்தை கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில் பணம் மோசடி தொடர்பாக விசாரிப்பதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்தது. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக இது குறித்து விசாரித்தும், இதுவரை எந்த வித உண்மையும் வெளியில் வரவில்லை என்கிறார்கள் சுஷாந்த் சிங் உறவினர்கள்.
ரியா சக்ரபோர்த்தி சுஷாந்த் சிங்கிடமிருந்து பணத்தை அபகரித்தாரா என்பதற்கும் இதுவரை விடை கிடைக்கவில்லை. சி.பி.ஐ.யும் இவ்வழக்கை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விசாரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அவர்களாலும் இது தற்கொலையா அல்லது கொலையா என்று முடிவுக்கு வரமுடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். இன்னும் விசாரித்து விசாரித்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்று மட்டும் சி.பி.ஐ.அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுஷாந்த் சிங் மன அழுத்ததிற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாரா என்பது குறித்து கூட சி.பி.ஐ.எதுவும் தெரிவிக்கவில்லை. அதே சமயம், சுஷாந்த் சிங் மரண வழக்கை பதிவு செய்த பாந்த்ரா போலீஸார் தொடர்ந்து இதனை விசாரித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். போலீஸார் சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் இது தற்கொலை என்று முடிவுக்கு வந்துவிட்டனர். தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் மும்பை போலீஸார் இவ்வழக்கை விசாரித்து பார்த்தனர். இதற்காக தயாரிப்பாளர்கள் ஆதித்ய சோப்ரா, மகேஷ் பட், சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரிடமும் வாக்குமூலம் வாங்கினர். இதிலும் எந்த வித துப்பும் கிடைக்கவில்லை. சுஷாந்த் சிங்
இது குறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் இவ்வழக்கை முடிக்க முடியாத அளவுக்கு வழக்கு தொடர்பான ஆவணங்கள் சி.பி.ஐ.வசம் இருக்கிறது. சி.பி.ஐ.யிடமிருந்து ஆவணங்கள் கிடைத்தவுடன் இவ்வழக்கை முடித்துவிடுவோம்” என்று தெரிவித்தார்.
அமலாக்கப்பிரிவு நடத்திய விசாரணையில் ரியா சக்ரவர்த்தியும், அவரது சகோதரரும் போதைப்பொருள் வாங்குவது தொடர்பாக சாட்டிங் செய்திருப்பதை கண்டுபிடித்தனர். இந்த விபரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ரியா சக்ரவர்த்தியையும் அவரது சகோதரர் சோவிக்கையும் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள் தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர் உட்பட பலரிடம் விசாரித்தனர். ரியா சக்ரபோர்த்தி
ஆனால் இதிலும் எந்த வித முன்னேற்றமும் இல்லை. போதைப்பொருள் வியாபாரி ஒருவரை கைது செய்து, அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ரியா சக்ரவர்த்தியும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டனர். இப்போது அவரும் வெளியில் வந்துவிட்டார். ஆனால் சுஷாந்த் சிங் தற்கொலை செய்தாரா கொலை செய்யப்பட்டாரா என்பது மட்டும் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. சி.பி.ஐ.இந்த வழக்கையும் ஓரங்கட்டி வைத்துவிட்டது என்ற குற்றச்சாடும் எழுந்திருக்கிறது.
Also Read: சுஷாந்த் சிங்... ஒரு பெருங்கனவை நோக்கிய பயணம் பாதியில் முடிந்தது ஏன்?! #SushanthDay
இவ்வழக்கில் சி.பி.ஐ.இன்னும் மவுனம் காப்பது ஏன் என்று மும்பை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளவற்றில், ``சி.பி.ஐ., சுஷாந்த் சிங் வழக்கை கையில் எடுத்து 310 நாட்களாகிவிட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை சுஷாந்த் சிங் தற்கொலை தான் செய்துள்ளார் என்று தெரிவித்து 250 நாட்களாகிவிட்டது. சி.பி.ஐ. எப்போது விசாரணை விபரங்களை தெரிக்கப்போகிறது. ஏன் அமைதியாக இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். சுஷாந்த் சிங் முதலாம் ஆண்டு ஆண்டு நினைவுநாளை ஒட்டி சமூக வலைத்தளத்தில் பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் சுஷாந்த் சிங்கை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
http://dlvr.it/S1ggwL
Monday, 14 June 2021
Home »
» நடிகர் சுஷாந்த் சிங் மரணம்: ஓராண்டு ஆகியும் விலகாத மர்மம்!