மும்பையில் உள்ள தாராவியில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். ஆசியாவிலேயே அதிக குடிசைகளைக் கொண்ட தாராவியில் கொரோனா முதல் அலையில் பொது மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். அதிகப்படியான குடிசைகள் இருப்பதால் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மாநகராட்சி அதிகாரிகளுக்கு மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது. தற்போது கொரோனா இரண்டாவது அலையிலும் தாராவி கொரோனாவில் இருந்து தப்பவில்லை. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கொரோனா தொற்று இல்லாத நிலை இருந்தது. அதன் பிறகு இப்போதுதான் தாராவியில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. தாராவியில் கொரோனாவைக் கட்டுப்படுத்தியது எப்படி என்பது குறித்து தாராவியை உள்ளடக்கிய ஜி வடக்கு வார்டு மாநகராட்சி அதிகாரி கிரண் திகாவ்கர் கூறுகையில், "கொரோனா தொற்றின் தொடக்கத்தில் தாராவியில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக இருந்தது. கிரண்
குடிசையில் அதிகப்படியான மக்கள் வசிக்கின்றனர். அதோடு ஆயிரக்கணக்கான சிறு தொழில்களும் இருக்கிறது. குடிசை மக்கள் பொது கழிவறையைத்தான் பயன்படுத்துகின்றனர். கொரோனா இரண்டாவது அலையின் போது தாராவியில் தனிமைப்படுத்துதல் முகாம்களை அமைத்தோம். ஒவ்வொரு வீடாக சென்று சோதனைகளை செய்து கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடிக் கண்டுபிடித்தோம்" என்று தெரிவித்தார்.
தாராவியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது குறித்து தாராவியில் சிறிய அளவில் பிரிண்டிங் பிரஸ் வைத்து நடத்தி வரும் மகேந்திரன் கூறுகையில், "கொரோனாவைக் கட்டுப்படுத்திய மாநகராட்சி மற்றும் உள்ளூர் கவுன்சிலருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். வீட்டிற்கே வந்து சோதனை செய்தனர். கொரோனா பொதுமுடக்கத்தின்போது எங்களுக்கு இலவச சாப்பாடு விநியோகித்ததோடு, ரேஷன் பொருட்களையும் வழங்கினர். இப்போது கொரோனா தாராவியில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார். மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் விஜய் வடேதிவார் தாராவியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது குறித்து கூறுகையில், "ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் 24 மணி நேரத்தில் எந்தவித கொரோனா தொற்றும் இல்லாமல் இருப்பதன் மூலம் மும்பை கொரோனாவில் இருந்து மீண்டு வருவது தெளிவாகத் தெரிகிறது. இதற்கான பெருமை அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்தையும், தாராவி மக்களையுமே சேரும். கொரோனாவை எதிர்த்து மும்பை கடுமையாக போராடுகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்தார்.
மும்பை மேயர் கிஷோரிடம் இது குறித்து கேட்டதற்கு, "இந்த வெற்றி மும்பை மாநகராட்சி மட்டுமல்லாது தாராவி மக்களுக்குமானதாகும். கடந்த இரண்டு ஆண்டில் 7-வது முறையாக தாராவியில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் மக்கள் நெருக்கடி மிகுந்த தாராவியில், கொரோனாவைக் கட்டுப்படுத்திய மாநகராட்சி அதிகாரி கிரணை பாராட்டவேண்டும். இது தொடர வேண்டும். அதற்கு அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
http://dlvr.it/S1mTjp
Tuesday, 15 June 2021
Home »
» மும்பை: குட்டித் தமிழ்நாடான தாராவி கொரோனாவில் இருந்து மீண்டது எப்படி?