மும்பையில் கடந்த 9ம் தேதியிலிருந்து தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் நகர் முழுவதும் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புறநகர் ரயில் சேவை, பஸ் சேவையும் துண்டிக்கப்பட்டது. சாக்கடைகள் முழுமையாக தூர்வாரப்பட்டுவிட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்த நிலையில் முதல் மழைக்கே மும்பை வெள்ளத்தில் சிக்கித்தவித்தது. மும்பை புறநகர் பகுதியான சாந்திவலியில் இது போன்று மழை வெள்ளத்தால் மக்கள் மிகவும் சிரமப்பட்டதால் சிவசேனா எம்.எல்.ஏ. திலிப் லாண்டேயின் தொண்டர்கள் களத்தில் இறங்கி சாக்கடையை தூர்வாரி மழை வெள்ளம் வடிய வகை செய்தனர். திலிப் லாண்டே
இப்பணிகளுக்காக நியமிக்கப்பட்டு இருந்த ஒப்பந்ததாரர் பணியை சரியாக செய்யவில்லை என்று திலிப் லாண்டே தெரிவித்தார். அதோடு ஒப்பந்ததாரரை வரவழைத்த திலிப் லாண்டே ஒப்பந்ததாரரை மழை வெள்ளத்தில் உட்கார வைத்ததோடு அவர் மீது தனது கட்சியினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்களிடம் குப்பையை போடும்படி கேட்டுக்கொண்டார். இதனை சிவசேனாவினர் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
இது குறித்து திலிப் லாண்டே கூறுகையில், "ஒப்பந்ததாரரை கடந்த 15 நாட்களாக சாக்கடையை தூர்வாரும் படி கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் கேட்கவில்லை. எனவே சிவசேனாவினரே களத்தில் இறங்கி சாக்கடையை சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். இது குறித்து கேள்விப்பட்டதும் ஒப்பந்ததாரர் விரைந்து வந்தார். அவரிடம் மழை நீர் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததற்கு நீ தான் காரணம் என்று சொல்லி மழை நீரில் இருக்கும்படி செய்தேன். வேலையை சரியாக செய்யாததால் அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை சரிதான்" என்று தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதால் பல்வேறு தரப்பினரும் சிவசேனா எம்.எல்.ஏ.வின் செயலை விமர்சனம் செய்துள்ளனர். மும்பை மாநகராட்சியை சிவசேனா கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளம் வடிவதற்காக சாக்கடைகள் பல கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்படுகிறது. ஆனால் ஒரு வருடம்கூட மழை நீர் சரியாக சென்றதில்லை. ஒவ்வொரு ஆண்டும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
http://dlvr.it/S1df4T
Sunday, 13 June 2021
Home »
» மும்பை: சாக்கடையை சரியாக தூர்வாராத ஒப்பந்ததாரர் மீது குப்பையைக் கொட்டிய சிவசேனா எம்.எல்.ஏ!