ஆதிகாலத்தில் வாழ்ந்த மூத்த குடிமக்கள் உணவுக்காக ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு நாடோடியாக நடை பயணம் மேற்கொண்டார்கள் என சொல்வதுண்டு. மனித நாகரிகம் மெல்ல வளர்ந்த பிறகு அந்த நடைப்பயணம் வாழ்வாதாரத்திற்காகவும், பொருளுக்காகவும் மாறியுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் வாழ்ந்து வரும் மக்கள் ஒரு கோளிலிருந்து மற்றொரு கோளுக்கு எதிராக பயணிக்கின்றனர். இப்படி மனிதர்களின் பயணத்தை துரிதப்படுத்த பல வாகனங்கள் வந்திருந்தாலும் சைக்கிள்களுக்கு இருக்கும் மவுசு என்றும் குறையவில்லை. அதிலும் சைக்கிள் மீது உலக மக்கள் கொண்டுள்ள மோகம் கொரோனா முதல் அலைக்கு பிறகு அதிகரித்த வண்ணம் உள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது. சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழலை காக்கும் நோக்கிலும், சிலர் நிதி சிக்கலை சமாளிப்பதற்காகவும் மிதிவண்டியை மிதித்தபடி நம் ஊர்களின் சாலைகளில் பயணிக்கின்றனர். இன்று உலக சைக்கிள் தினம். இந்த இனிய நாளில் இந்தியாவிற்குள் சைக்கிள் எப்படி பயணித்து வந்தது என்ற கதையை பார்ப்போம். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் சைக்கிள் உலகிற்கு அறிமுகமாகியுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த ‘கார்ல் வான் டிராய்ஸ்’ என்பவர்தான் முதல் இரு சக்கர வாகனத்தை வடிவமைத்தது. முழுவதும் மரத்தினாலான அதனை Dandy horse என சொல்லியுள்ளனர். அதற்கு காப்புரிமையும் அவர் பெற்றதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் வடிவமைப்பில் மாற்றம் பெற்ற சைக்கிளில் இறுதியாக ‘பெடல்’ பொருத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெருமளவில் வணிக நோக்கத்துடன் சைக்கிள் உருவாக்கப்பட்டு, சந்தைபடுத்தப்பட்டுள்ளது. சைக்கிள் இந்தியாவிற்குள் என்ட்ரியானது எப்படி? காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் 1890களில் சைக்கிள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகி உள்ளது. 1910 துவங்கி 1946 வரை சுமார் 2.5 பில்லியன் சைக்கிள்கள் இந்தியாவில் இறக்குமதியாகி உள்ளன. ராலி, பி.எஸ்.ஏ, ரட்ஜ், ஹம்பர் என பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகமாக இருந்தது. 1940களில் இறக்குமதி பொருட்களின் மீதான வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவிலிருந்த தொழில் முனைவோர்கள், மேல் நாட்டு நிறுவனங்கள் உடன் கூட்டு சேர்ந்து இந்தியாவிலேயே சைக்கிள் உற்பத்தி செய்யும் பணியில் இறங்கினர். அதற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பை கூர்ந்து கவனித்த இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள் நேரடியாக சைக்கிள் உற்பத்தி பணியை தொடங்கினர். அதற்கு இந்தியா சுதந்திரம் பெற்றதும் மிக முக்கிய காரணமாக அமைந்தது. ஹீரோ, ஏவான், ஹெர்குலஸ், TI சைக்கிள்ஸ் ஆப் இந்தியா மாதிரியான நிறுவனங்கள் இந்தியாவில் பல ஆண்டுகளாக சைக்கிள் உற்பத்தி தொழிலை மேற்கொண்டு வருகின்றன. அதுதவிர அட்லஸ் சைக்கிள் நிறுவனம் உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளது. 1970கள் தொடங்கி 2000 வரையில் இந்திய சாலைகளில் அதிகம் றெக்கை கட்டி பறந்தது சைக்கிள்கள்தான். வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருப்பதே தனி அந்தஸ்தாக பார்க்கப்பட்டது. சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் டைனமோ அதன் முகப்பில் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள் ஒளிர்வதற்கான மின் சக்தியை உருவாக்கி கொடுத்தன. இப்படி இந்திய சாலையில் இளையோர் முதல் அனைத்து வயதினரையும் கவர்ந்திருந்த சைக்கிள் மோட்டார் வாகனங்களின் படையெடுப்பால் தனது மவுசை இழந்தது. பள்ளி செல்லும் மாணவர்கள், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துபவர்கள் மட்டுமே சைக்கிளை பயன்படுத்தும் நிலை உருவானது. அதனால் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்கள் திகைத்தன. மெல்ல தனது சந்தை வாய்ப்பை சைக்கிள் இழந்தது. இந்த நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளாக தனது மகத்துவத்தை மீண்டும் பெறத் தொடங்கியது சைக்கிள். சைக்கிள் பயணத்தை ஊக்குவித்த ஊரடங்கு! கொரோனா முதல் அலைக்கு பிறகு இந்தியாவில் சைக்கிளில் பயணம் செய்ய பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்களுக்கு தான் இப்போது அதிக டிமெண்ட் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் நண்பர்களுடன் ஓய்வு நேரங்களில் பொழுதை ஆரோக்கியத்திற்காக செலவிட வேண்டுமென ஏற்பட்டுள்ள மனமாற்றம். அதனால் இப்போது மீண்டும் இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறக்க தொடங்கியுள்ளது சைக்கிள்.
http://dlvr.it/S0yYlY
Thursday, 3 June 2021
Home »
» உலக சைக்கிள் தினம் : இந்தியாவிற்குள் சைக்கிள் பயணித்து வந்த கதை!