கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வேம்பநாடு காயலுக்குச் சென்றால் தினமும் வள்ளத்தில் சென்று பிளாஸ்டிக் பாட்டில் போன்ற மக்காத குப்பைகளை சேகரித்து வரும் ராஜப்பனை காணலாம். வேம்பநாடு காயலிலும், காயலை ஒட்டியுள்ள கால்வாய்களிலும் ராஜப்பனின் வள்ளம் வருவதைக் கண்டால் கரையோரம் நிற்பவர்கள் காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் இருந்தால், அவரை நோக்கி வீசுவார்கள். அதை குச்சி மூலம் சேகரித்து படகில் சேர்ப்பார் ராஜப்பன். வயிற்றுப்பிழைப்பு ஒருபுறம் இருந்தாலும், வேம்பநாடு காயலை சுத்தப்படுத்தும் நோக்கில் இதை செய்து வருகிறார் ராஜப்பன்.
இரண்டு கால்களும் செயல் இழந்த நிலையில் சகோதரியின் உதவியோடு வாழ்ந்து வருகிறார் ராஜப்பன். ராஜப்பனை குறித்து பிரதமர் நரேந்திரமோடி மன் கீ பாத் நிகழ்ச்சியிலும் பேசியிருக்கிறார். வேம்பநாடு காயலை அடுத்த மஞ்சாடிகிரியில் உள்ளது ராஜப்பனின் வீடு. குமாரகம், கங்கணம் பகுதிகளில் மாலை 4 மணிக்கு தொடங்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் பணி முடித்து வீட்டுக்கு செல்லும்போது இரவு 9 மணி ஆகிவிடும்.வேம்பநாடு காயலை சுத்தப்படுத்தும் ராஜப்பன்
இந்த நிலையில் அவருக்கு `இண்டர்நேஷனல் ஷைனிங் வேல்ட் எர்த் புரடெக்ஷன்’ அவார்டை தைவான் அரசு வழங்கியுள்ளது. பாராட்டு பத்திரம், விருது மற்றும் பத்தாயிரம் அமெரிக்க டாலர் ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டது. அந்த பரிசுத்தொகையின் இந்திய மதிப்பு ரூ. 7,30,081 (ஏழு லட்சத்து முப்பதாயிரத்து எண்பத்தி ஒரு ரூபாய்) ஆகும். மேலும் ராஜப்பனின் சேவையை பற்றி அறிந்தவர்கள் அவருக்கு பணம் அனுப்புவது வழக்கம். நன்கொடைகள் பெறுவதற்காக ராஜப்பன் வங்கி கணக்கு ஆரம்பித்தார். அவரால் நடந்து வங்கிக்கு செல்ல முடியாது என்பதால் அவரது சகோதரியையும் இணைத்து ஜாயிண்ட் அக்கவுண்டாக தொடங்கியிருந்தார்.
இந்த நிலையில் தைவான் அரசு வழங்கியிருந்த விருதுக்கான தொகை வங்கிக்கணக்கில் வந்துவிட்டது என்பதை உறுதி செய்ய பேங்க் ஸ்டேட்மெண்டை எடுத்து அவர்களுக்கு அனுப்ப வேண்டும். இதற்காக அவர் வங்கிக்குச் சென்றுள்ளார். அந்த ஸ்டேட்மெண்டை பார்த்தபோது அதில் இருந்து சுமார் ஐந்து லட்சம் ரூபாயை அவரது சகோதரி எடுத்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜப்பன் இதுகுறித்து கோட்டயம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.வள்ளத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் ராஜப்பன்
இதுபற்றி பேசிய ராஜப்பன், "ஒரு கிலோ பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு 12 ரூபாய்தான் கிடைக்கும். வள்ளம் நிறைய பாட்டில்கள் சேகரித்தாலும் இரண்டு மூண்று கிலோதான் தேறும். சிறு வயது முதலே கால் நடக்கமுடியாமல் இப்படித்தான் இருக்கிறது. படகில் ஊர்ந்துதான் ஏறிச் செல்வேன். ஒரு வெள்ளப்பெருக்கில் எனது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. தண்ணீர் வடியும் வரை பாலத்துக்கு அடியில் நின்ற படகில் வசித்தேன். அப்போது எனது வீட்டுக்கு அருகில் நான் சாக்குப்பையில் சேகரித்து வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டில்களை தண்ணீர் அடித்துவிட்டு போய் விட்டது.
நல்ல ஒரு வீடு கட்டி மரணிப்பது வரை அதில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை. அதற்காகத்தான் வங்கியில் பணம் வைத்திருந்தேன். அந்த பணத்தை என் சகோதரி எடுத்துள்ளார். எனக்கு சிலர் வழங்கிய இரண்டு வள்ளத்தையும் உறவினர்கள் எடுத்துவிட்டனர். இப்போது அவர்கள் மிரட்டல் விடுக்கிறார்கள்" என்றார். இந்த புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://dlvr.it/S21zlb
Saturday, 19 June 2021
Home »
» கேரளா: மன் கி பாத் உரை; தைவான் நாட்டு விருது! - வேம்பநாடு ராஜப்பனிடம் பண மோசடி?