கொரோனா தளர்வுகள் தொடர்பாக அரசின் அறிவிப்பை முதல்வருக்கு முன்பாகவே அறிவித்த அமைச்சரால் மகாராஷ்டிராவில் ஆளும் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சியில் குழப்பங்கள் வெடித்துள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் சில தளர்வுகள் இருக்கும் என்று சில தினங்கள் முன் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்து இருந்தார். அதன்படி, 18 மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்படுவதாக அம்மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் விஜய் வடேதிவார் நேற்று அறிவித்தார். மேலும், ''இந்த மாவட்டங்களில் பாதிப்பு விகிதம், ஆக்சிஜன் படுக்கைகளை வைத்திருப்பதற்கான நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மகாராஷ்டிரா அரசு ஐந்து நிலை அன்லாக் பிளான் (five-level unlock plan)-ஐ வைத்துள்ளது" என்றார். இதையடுத்து மக்களும் வியாபாரிகளும் சற்று நிம்மதிமூச்சு விட்டனர். ஆனால், சில மணி நேரங்களில் மாநில அரசு சார்பில், மற்றொரு அறிவிப்பு வெளியானது. அது அமைச்சர் அறிவித்த 18 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் இல்லை என்பது தான். இது தொடர்பாக அம்மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ''கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக பரிசீலித்து வருகிறோம். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக குறையவில்லை. கொரோனா சூழ்நிலையின் தீவிரத்தன்மையின் படி, பேரழிவு மேலாண்மைத் துறை இந்த ஐந்து நிலை அன்லாக் பிளான் (five-level unlock plan)-ஐ முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் அடுத்த நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும்" என்று அமைச்சர் அறிவிப்புக்கு முரணாக அறிவித்தது. முதல்வர் அலுவலக அறிவிப்புக்கு பின் தனது முந்தையை அறிவிப்பில் இருந்து பின்வாங்கி, ''கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அரசு சார்பில் கொள்கையளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டாலும், இறுதி முடிவு முதல்வரால் எடுக்கப்படும்" என்றும் கூறினார். தனது அறிவிப்பை பின்வாங்கினாலும், ஒரே அரசின் இரு வேறு அறிவிப்புகள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. மகாராஷ்டிராவில் தற்போது, காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸின் கூட்டணியாக 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அதன்படி, இந்தக் கூட்டணி ஆட்சியில் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக இருக்கும் விஜய் வடேதிவார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சமீப மாதங்களாக சிவசேனா - காங்கிரஸ் உறவில் விரிசல் விழுந்து வருகிறது. ஆளுகிறது அவர்களின் கூட்டணி அரசு என்பதை நினைக்காமல் இரு கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் மாறி மாறி விமர்சித்து வந்த நிலையில் தற்போது இந்த குளறுபடி சம்பவம் நிகழ்ந்துள்ளது விரிசலை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் நிபுணர்கள். இந்த நிலையில் இந்த விவகாரத்தை பாஜக தரப்பு கடுமையாக எடுத்துக்கொண்டு அரசியலாக்கி வருகிறது. இது தொடர்பாக பேசியுள்ள மகாராஷ்டிராவின் தற்போதையை எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்நாவிஸ், ''மாநிலத்தில் முதல்வர் என உத்தவ் தாக்கரே ஒருவர் தான் இருக்கிறார். ஆனால் அவரை விடுத்து முக்கிய முடிவுகளை அறிவிக்கக்கூடிய சூப்பர் முதல்வர்களாக ஆட்சியில் பலர் இருக்கின்றனர். 18 மாவட்டங்களில் அமைச்சர் அறிவித்த கட்டுப்பாடு நீக்கத்தால் மக்கள் குழம்பி போயுள்ளனர். இதன்மூலம், அமைச்சர்கள் பலரும் தங்களை ஒரு முதல்வராக நினைத்துக்கொண்டு முக்கிய முடிவுகளை அறிவித்து விடுவது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. எந்த அரசிலும் கொள்கை முடிவுகளை முதல்வர் மட்டுமே எடுப்பார். அப்படி அவர் எடுக்கும் முக்கிய முடிவுகளை அறிவிப்பதற்கு அமைச்சர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போதைய மகாராஷ்டிரா அரசில் மட்டுமே முதல்வர் ஒரு திட்டம் குறித்து அறிவிக்கும் முன்பே அமைச்சர்கள் அதனை அறிவித்து விடுகின்றனர். தங்களுக்கு பெயர், புகழ் கிடைக்க ஆசைப்பட்டு அமைச்சர்கள் இப்படி அரசின் முடிவுகளை முன்கூட்டியே அறிவித்து விடுகின்றனர். 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சியில் இது முதல்முறையாக நடக்கவில்லை. அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்ததே இதுபோன்ற சம்பவங்கள் வாடிக்கையாக உள்ளது. இதுபோன்ற முன்கூட்டிய அறிவிப்புகளால் மக்கள் மத்தியில் தேவையில்லாத அச்சம் ஏற்படுகிறது. மக்களின் அச்சததை குறைக்க முக்கியமான முடிவுகளை அறிவிக்கும்போது தெளிவாக அறிவிக்கவேண்டும். மாநிலத்தில், கொரோனா உயிரிழப்புகள் மூடி மறைக்கப்படுகிறது. கொரோனாவில் இறந்தவக்ரளை வேறு நோய் காரணமாக உயிரிழந்ததாக கூறி அரசு மறைத்து விடுகிறது. இதுவரை 40 சதவீத கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டுள்ளது. நகரங்களில் கொரோனா இறப்புகள் மறைக்கப்படுவது அதிகமாக உள்ளது. அதேநேரம், கிராமங்களில் கொரோனா சோதனையே நடத்தப்படுவதில்லை. அங்கு நிலைமை மிக மோசமாக இருக்கிறது" என்று பக்கம் பக்கமாக அரசை விளாசியிருக்கிறார். இந்த விவகாரம், மகாராஷ்ட்ரா அரசியலில் புதிய புயலை கிளப்பி இருக்கிறது.
http://dlvr.it/S180TW
Sunday, 6 June 2021
Home »
» ஊரடங்கு தளர்வுகளில் அரசின் முடிவுக்கு முன்பு அமைச்சர் 'அவசரம்' - இது மகாராஷ்ட்ரா குழப்பம்