மும்பையில் போலி கொரோனா தடுப்பூசி பிரச்னை பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. மக்கள் குடியிருப்பு வளாகம், கம்பெனிகளில் தனியார் மருத்துவமனைகளின் உதவியோடு கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இந்த முகாம்களை நடத்த அரசு எந்த விதிகளையும் வகுக்காத காரணத்தால் அதனைப் பயன்படுத்தி மோசடி கும்பல் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது. மேற்கு மும்பையில் உள்ள பிரபலமான ஹவுசிங் சொசைட்டியில் நடத்தப்பட்ட போலி தடுப்பூசி முகாமில் 390 பேர் ஊசி செலுத்திக்கொண்டனர். ஒவ்வொருவரும் தலா ஆயிரம் ரூபாயிக்கும் அதிகமாக கொடுத்து இந்த ஊசியை எடுத்துக்கொண்டனர். ஆனால், தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கான சான்றிதழ் கிடைக்க தாமதம் ஏற்பட்டதோடு கிடைத்த சான்றிதழில் தடுப்பூசி முகாம் நடத்தியதாகக் கூறப்படும் மருத்துவமனையின் பெயர் இடம் பெறாமல் வேறு மருத்துவமனையின் பெயர் இடம் பெற்றது. இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது.சித்தரிப்பு படம்
போலீஸார் விசாரணை நடத்தி இம்மோசடியில் தொடர்புடைய 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களுக்கு எப்படி தடுப்பூசி கிடைத்தது என்பது குறித்தும், உண்மையில் அவர்கள் செலுத்தியது தடுப்பூசியா அல்லது வேறு ஏதாவது திரவத்தை செலுத்தினார்களா என்பது குறித்து மும்பை மாநகராட்சியும், போலீஸாரும் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாநில அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மும்பை முழுக்க 9 இடங்களில் போலி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக போலீஸார் 4 வழக்குகளை பதிவுசெய்து விசாரித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி முகாம்களில் 2 ஆயிரம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். இது வரை 400 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. " காந்திவலி ஹவுசிங் சொசைட்டியில் தடுப்பூசி முகாம் நடத்தியது தொடர்பாக டாக்டர் ஒருவரை தேடி வருகிறோம். சில குற்றவாளிகளின் அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் திபன்கர் தத்தா மற்றும் குல்கர்னி ஆகியோர், "போலி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எதாவது பக்க விளைவு ஏற்பட்டுள்ளதா என்பதை மாநகராட்சி நிர்வாகம் கண்டறியவேண்டும். குற்றவாளிகள் எதைத் தடுப்பூசியாக செலுத்தினர் என்று தெரியவில்லை. அதனால் என்ன ஆனது என்றும் தெரியவில்லை என்று நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். தடுப்பூசி முகாம்கள் நடத்துவதற்கு இதுவரை வழிமுறைகள் வகுக்கப்படாது குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள் இது தொடர்பாக இதற்கு முந்தைய விசாரணையின் போதே மாநில அரசுக்கு உத்தரவிட்டு இருந்தோம். ஆனால் அந்த உத்தரவு இன்னும் அமல்படுத்தப்படவில்லை. மாநில அரசு தனியார் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கான வழிமுறைகளை வகுக்கவேண்டும். அரசு இனியும் தாமதம் செய்யக்கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறி விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மகாராஷ்டிராவில் மும்பையில் மட்டுமே இந்த மோசடி நடந்துள்ளது. இதில் 2 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது.
http://dlvr.it/S2N9Sg
Thursday, 24 June 2021
Home »
» மும்பை: ஹவுசிங் சொசைட்டியில் போலி கொரோனா தடுப்பூசி முகாம்; போலீஸ் வழக்கு பதிவு!