ஊரடங்கு காரணமாக சென்னை, கோவை, திண்டுக்கல், செங்கல்பட்டு, மதுரை, கடலூர், திருவாரூர், சேலம், விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் வீதியோரம் வசிக்கும் வீடற்ற ஆதரவற்றோருக்கு 'உதவிடத்தான் பிறந்தோம்' குழு சார்பில் தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கணவரை இழந்த பெண்கள், பழங்குடியினர், நரிக்குறவர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள், மருந்தும் வழங்கி வருகிறது இந்தக் குழு. இந்த அமைப்பை நிர்வகித்து வருபவர்களில் ஒருவரான விஜய் கூறும்போது, "நாங்களை சென்னை - பெருங்களத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறோம். தமிழகம் முழுவதும் 10 மாவட்டங்களில் எங்களுடைய அமைப்பினர் சுமார் 2,000 பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தானாக முன்வந்து எங்களுடன் இணைந்தவர்கள். வாட்ஸ் அப்தான் எங்களை இணைக்கும் பாலம். தமிழகம் முழுவதுமே எங்களால் இயன்ற உதவிகளை செய்ய முடியும்; செய்து வருகிறோம். குறிப்பாக, வேலை தேவைப்படுவோருக்கு வேலை வாங்கித் தருவதிலும் அதிக கவனம் செலுத்துகிறோம். எங்களது வாட்ஸ் அப் குழுக்களைப் பொறுத்தவரையில் ஆண்களுக்குத் தனியாகவும், பெண்களுக்குத் தனியாகவும் நிர்வகிக்கப்படுகிறது. எந்த அதிகாரபூர்வ அங்கீகாரத்துடன் இல்லாமல் இருந்த அமைப்பு என்றாலும், முழு ஒழுங்கு மனப்பான்மையுடன் சிறப்பாக செயல்பட்டு, மக்களுக்கு உதவுவதற்கு எங்கள் அமைப்பில் உள்ள தன்னார்வலர்களின் ஈடுபாடே காரணம்" என்றார். மேலும் 'உதவிடத்தான் பிறந்தோம்' குழுவினர் கீழ்க்காணும் சேவைகளையும் வழங்கி வருகின்றனர். * தந்தை இழந்து தங்கள் உயர் கல்வியை (கல்லூரி) நிதி பிரச்னையால் பாதியில் நிறுத்தி அல்லது படிக்க முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் கல்வியை தொடர உதவுகிறது. * உடல் நிலை பாதிப்பால் மருத்துவம் பார்க்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கும் ஏழை குடும்பத்திற்கு மருத்துவ செலவுக்கு உதவுகிறது. * ரத்த தேவைப்பட்டால் ரத்த தானம் கொடுத்து உதவுகிறது. * ஆதரவற்றோர் இல்லம் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு, புது உடை கொடுத்து உதவுகிறது. * அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் கோப்பைகள் வழங்குகிறது. * அசுத்தமாக இருக்கும் பள்ளி சுவர் மற்றும் பேருந்து நிலைய சுவர்களை தூய்மைப்படுத்தி விழிப்புணர்வு ஓவியம் வரைகிறது. 'உதவிடத்தான் பிறந்தோம்' குழுவினரை தொடர்புகொள்ள: 97109 72097
http://dlvr.it/S1Bb4H
Monday, 7 June 2021
Home »
» கொரோனா கால மகத்துவர்: வீடற்ற ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் 'உதவிடத்தான் பிறந்தோம்' குழு