உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு, மார்ச் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்குக் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. கோயிலுக்கான அடித்தளக் கட்டுமானம் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் தயாராகிவிடும் என்றும், 2023-ல் கோயில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது. யோகி ஆதித்யநாத்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்பது பா.ஜ.க-வின் முக்கியமான தேர்தல் வாக்குறுதி. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதால், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற தங்களுக்கு அது பெரிதும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத். ஆனால், கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்புகள் யோகி ஆதித்யநாத் அரசுக்குப் பெரும் சேதாரத்தை ஏற்படுத்திவிட்டன. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக உ.பி மாறியிருக்கிறது. கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பதில் யோகி அரசு தோல்வியடைந்துவிட்டது என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
மருத்துவமனையில் பெட் கிடைக்காத கெரோனா நோயாளிகளின் உறவினர்கள் மிகுந்த ஆவேசத்துடன் யோகி அரசைக் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சிக்கும் வீடியோக்கள் வைரலாகின. ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டதாக எதிர்க்கட்சியினரும் சமூகச் செயற்பாட்டாளர்களும் மட்டுமல்லாமல், பா.ஜ.க-வினரே யோகி அரசைக் குற்றம்சாட்டிவருகிறார்கள். ஐந்து எம்.எல்.ஏ-க்கள் உட்பட பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் என ஏராளமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரத்தில் இருக்கும்போது, உ.பி போன்ற மாநிலத்துக்கு ஆக்சிஜனையும் உயிர்காக்கும் மருந்துகளையும் போதுமான அளவுக்குக் கொண்டுவர முடியவில்லையா என்று சொந்தக் கட்சியினர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பா.ஜ.க தலைவர்கள் திணறுகிறார்கள்.ராமர் கோயில்
யோகி அரசு மீதான மக்களின் கோபம் உள்ளாட்சித் தேர்தலில் வெளிப்பட்டுவிட்டது. வாரணாசி, பிரக்யாராஜ், அயோத்தி, மதுரா உள்ளிட்ட பா.ஜ.க-வின் செல்வாக்குமிகுந்த பகுதிகளில் ஏற்பட்ட தோல்வி பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சமாஜ்வாடி கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்றது. அப்படியென்றால், அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலால் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாக்குகள் வருமா, வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உ.பி சட்டமன்றத் தேர்தலை, அடுத்து நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கலாம். இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்கிற கட்டாயம் பா.ஜ.க-வுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, யோகி அரசு மீது மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியையும், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியையும் பா.ஜ.க தலைமை சீரியஸாகப் பார்க்கிறது. உ.பி நிலவரம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். அதையடுத்து, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும், பா.ஜ.க தலைவர்களும் உ.பி-க்கு படையெடுத்தனர். அது, உ.பி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அமித் ஷா
அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பல தரப்பினரிடம் டெல்லி மேலிடப் பிரதிநிதிகள் தொடர் ஆலோசனைகளை நடத்தினர். அப்போது, ‘பேரிடர் காலத்தில் மக்களுடன் மக்களாக நாம் இருக்க வேண்டும், மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்’ என்று அறிவுரைகளை வழங்கினர். கட்சியின் செல்வாக்குக்கு ஏற்பட்டுள்ள சேதாரங்களைச் சரிசெய்வதற்குப் பல வியூகங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் யோகி மாற்றப்படலாம், முன்னாள் அரசு அதிகாரி ஏ.கே.சர்மா முதல்வராக முன்னிறுத்தப்படலாம் என்று பரபரப்பைக் கிளப்பிய செய்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐடி பிரிவு, சமூக ஊடகங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அரசு மீது நிலவும் அதிருப்தியைத் தேர்தல் நேரத்தில் சரிசெய்வதற்கான உத்திகளும் வகுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.மோடி
உ.பி-யின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஆக்சிஜன், உயிர்காக்கும் மருந்துகள் உட்பட மருத்துவ வசதிகள் கிடைக்காமல் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மத்திய பா.ஜ.க அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜாட் இனத்தவர் பெரும்பான்மையாக இருக்கும் உ.பி-யின் மேற்குப் பகுதியில் பெரும் போராட்டத்தை விவசாயிகள் நடத்திவருகிறார்கள். ஆக மொத்தம், உ.பி-யில் யோகி அரசுக்கு எதிராகப் பெரும் கோப அலை வீசிக்கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தியையும் கோபத்தையும் வியூகங்களால் தணித்துவிட முடியும் என்ற நம்பிக்கை பா.ஜ.க தலைமைக்கு இருக்கலாம்.
Also Read: கோயில் நில விவகாரம் டு அர்ச்சகர்கள் நியமனம் வரை - அமைச்சர் சேகர்பாபுவின் நகர்வுகள் எப்படிப்பட்டவை?
உ.பி-யைப்போலவே கர்நாடகாவிலும் பா.ஜ.க-வுக்குத் தலைவலி ஆரம்பித்துள்ளது. முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எதிராக கர்நாடகா பா.ஜ.க-வுக்குள் கலகக்குரல் ஒலிக்கிறது. கர்நாடகாவில் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து, ‘எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து இறங்கும் நேரம் வந்துவிட்டது. புதிய தலைமைக்கு அவர் வழிவிட வேண்டும்’ என்கிற பிரசாரம் ஆரம்பித்து, அரசியல் வட்டாரத்தில் அது பெரும் விவாதப்பொருளாக மாறியது. எடியூரப்பா
கர்நாடகா பா.ஜ.க-வுக்குள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான செயல்பாடுகள் சமீபத்தில் தீவிரமடைந்த நிலையில், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி.யோகீஸ்வரா மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் பலர் கடந்த மே மாதம் டெல்லியில் மேலிடத்துக்குப் படையெடுத்தனர். பா.ஜ.க மேலிடத் தலைவர்களைச் சந்தித்த அவர்கள், ‘எடியூரப்பா ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்த எடியூரப்பா தவறிவிட்டார்’ என்று புகார்களை அடுக்கினர். இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், இது குறித்து பொதுவெளியில் முதன்முறையாக எடியூரப்பா கருத்து தெரிவித்தார். ‘எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். என்னால் முடிந்த அளவுக்கு எனக்கான கடமைகளை நிறைவேற்றுவதற்கு முயல்கிறேன். என் தரப்பில் எந்தக் குழப்பமும் கிடையாது. முதல்வர் பதவியில் நானே தொடர்வேன். எனக்கு மாற்றாக இங்கு யாரும் கிடையாது. கட்சித் தலைமை சொன்னால், பதவி விலகத் தயார்’ என்றார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநிலத் தேர்தல்களில் முழு கவனத்தையும் செலுத்திவிட்டு, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மத்திய பா.ஜ.க கோட்டைவிட்டுவிட்டது என்றும், அதனால்தான் இந்தியாவில் லட்சக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. ஆகவே, தனக்கு எதிரான களங்கத்தைப் போக்குவதற்கான வழிகளை ஆராய வேண்டிய நெருக்கடியில் இருக்கும் பா.ஜ.க., மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைப்பதற்கான வேலைகளிலும் களமிறங்கியிருக்கிறது.
http://dlvr.it/S1R43c
Thursday, 10 June 2021
Home »
» உ.பி-யில் அதிருப்தி அலை... கர்நாடகாவில் ‘உள்ளடி’ வேலை... ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க வியூகங்கள்!