மகாராஷ்டிராவில் மராத்தாக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 13 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மாநில அரசு சட்டம் இயற்றியது. ஆனால் அதனை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து மராத்தாக்களுக்கு எப்படி இட ஒதுக்கீடு வழங்குவது என்று தெரியாமல் மாநில அரசு திணறி வருகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டுமானால் மத்திய அரசுதான் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். இதையடுத்து மாநில முதல்வர் உத்தவ்தாக்கரே டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் அஜித்பவார் மற்றும் முன்னாள் முதல்வர் அசோக்சவாண் ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது மராத்தா இட ஒதுக்கீடு, புயலால் ஏற்பட்ட இழப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமருடன் உத்தவ்தாக்கரே பேசினார். பிரதமருடன் சந்திப்பு
இந்த சந்திப்புக்குப் பிறகு உத்தவ்தாக்கரே நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது: "ஒரு ஆண்டுக்குப் பிறகு பிரதமரை சந்தித்துப் பேசினேன். இதில் மராத்தா இட ஒதுக்கீடு உட்பட மகாராஷ்டிரா மாநிலம் தொடர்பாக பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினோம். எங்களது கோரிக்கையை பிரதமர் கவனத்துடன் கேட்டார். அவற்றை கவனிப்பதாகத் தெரிவித்தார். மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு, ஒபிசியினருக்கு அரசியல் இட ஒதுக்கீடு, மெட்ரோ ரயிலுக்கு காஞ்சூர்மார்க்கில் கார்ஷெட் அமைப்பது, ஜி.எஸ்.டி.நிலுவைத்தொகை, புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம், மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து உட்பட பல பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார். பிரதமருடனான சந்திப்பு குறித்து நிருபர் ஒருவர் கேட்டதற்கு, "நாங்கள் அரசியல் ரீதியாக வேண்டுமானால் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக எங்களது உறவு முறிந்துவிட்டது என்று அர்த்தமாகாது. நான் ஒன்றும் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க போகவில்லையே" என்று தெரிவித்தார். இச்சந்திப்பு குறித்து துணை முதல்வர் அஜித்பவார் கூறுகையில், "பிரதமருடன் 12 அம்சங்கள் குறித்து பேசினோம். சந்திப்பு மிகவும் நன்றாக அமைந்தது. எங்களுக்காக பிரதமர் 90 நிமிடம் ஒதுக்கி எங்களது அனைத்து கோரிக்கையையும் கேட்டறிந்தார்" என்று தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான அஜித்பவார் மாநில நிதியமைச்சராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான முன்னாள் முதல்வர் அசோக்சவான் மராத்தா இட ஒதுக்கீடு கேபினட் துணை கமிட்டி தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக உத்தவ்தாக்கரே அளித்த பேட்டியில், மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என்றும் மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அதோடு பிரதமரை சந்திக்க டெல்லி புறப்படும் முன்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உத்தவ்தாக்கரேயை சந்தித்து பேசினார். மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கு உத்தவ்தாக்கரேயிக்கு கடிதமும் எழுதியிருந்தார். மற்றொரு புறம் பாஜக எம்.பி.சாம்பாஜி ராஜே மராத்தா இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி வரும் 16ம் தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளார்.
http://dlvr.it/S1KqZP
Wednesday, 9 June 2021
Home »
» "எங்களது உறவு முறிந்துவிட்டது என்று அர்த்தமாகாது"- மோடியை சந்தித்த உத்தவ் தாக்கரே பளீர்!