ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று ஒரு மாத காலம் நிறைவேற போகும் சூழலில், கொரோனா பரவல் காரணமாக அவர் கடுமையான நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
புதிய அரசுக்கு தற்போது கண்முன் இருக்கும் சாவால்களின் ஆழம் குறித்தும், மக்களின் மனநிலையை வாழ்க்கை நிலையை புரிந்து ஆட்சி நடக்கிறதா என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிகுமாரிடம் கேட்டு அறிந்தோம்...
``இந்திய ஒன்றியம், தமிழகம் - தமிழ்நாடு இந்த சொல்லாடல்களை எப்படி பார்க்கிறீர்கள்?”
``இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 'இந்திய ஒன்றியம்' என்றுதான் இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் நடைபெறுவது கூட்டரசு என சட்டம் உறுதிப்படுத்துகிறது. மத்திய அரசு தான் மையம் என நாம் புரிந்து வைத்துள்ளதால் மத்தியில் இருப்பவர்கள் அதிகாரத்தை குவித்து கொண்டாலும், நம் அதிகாரத்தை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டாலும், அது பற்றி பெரிதாக எதிர்ப்பு வராமல் போகிறது. இந்தியா மாநிலங்களின் கூட்டரசு என்கிற எண்ணம் தொடர்ந்து நம் மனதில் இருக்கவேண்டும். அப்போதுதான் நம் மாநில உரிமைகள் பறிக்கப்படும்போது, நாம் எதிர்த்து குரல்கொடுக்க முடியும். அதற்கான மொழியையும் உருவாக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதனால் ஒன்றியம் என்பதே சரி! மேலும் தமிழகம் என்பதை விட தமிழ்நாடு என்று சொல்வதை வரவேற்கிறேன்.”நாடாளுமன்றம்
``கேரளாவின் அறநிலையத்துறை அமைச்சராக ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.. அதிகார ரீதியாக தமிழகத்தில் எம்மாதிரியான மாற்றங்கள் வர வேண்டும்?"
``காமராஜர் ஆட்சி காலத்திலேயே பரமேஸ்வரனை அறநிலையத்துறை அமைச்சராக நியமித்தனர். மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்தவர் மீன்வள துறையில் நியமிப்பதும்..., சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவரை சிறுபான்மையினர் நலத்துறையில் நியமிப்பதும் சரியான செயல்முறை அல்ல. திறமை உடைய ஒவ்வொருவருக்கும் திறமைக்கு ஏற்ற பதவி வழங்க வேண்டும். அந்த விதத்தில் கேரளா மட்டுமின்றி பல மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே திறமைக்கு ஏற்ற பதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது."கொரோனா
``தமிழ்நாடு அரசு கொரோனாவை வெல்ல உடனடியாக செய்ய வேண்டியது என்னென்ன?"
``புதிய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. குறிப்பாக ஆக்ஸிஜன் தேவையைவிட மூன்று மடங்கு அதிக கையிருப்பு வைத்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்துள்ளனர். மேலும் பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிவாரண நிதியுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். நமது மருத்துவ கட்டமைப்பு வசதியை பெரிய அளவு உயர்த்தி உள்ளனர். ஆக, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு பெரிய சாதனையை செய்துவருகிறது.
வைரஸ் பரவலை நிரந்தரமாக கட்டுப்படுத்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியது அவசியம். தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் வரை முகக்கவசம் சமூக இடைவெளியும் தான் மக்களுக்கு தடுப்பூசி என மருத்துவர்கள் கூறுகின்றனர். மீண்டும் தளர்வுகள் அறிவிக்கும் பொது மக்கள் அதிக கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கவேண்டும். கிராமங்களில் சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாஸ்க் நம் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிய நிலையில், அதற்காக மாதம் தோறும் கணிசமான தொகையை செலவிடும் நிலை உள்ளதால் அரசு மகளிர் சுய உதவி குழு மூலம் மாஸ்க் தயாரித்து வழங்கலாம். இதனால் மகளிர் சுய உதவி குழுக்களும் பயன் பெரும், இதனை நிரந்தர திட்டமாக கொண்டுவரலாம்.”
``ஏழாம் தேதிக்கு பின்னும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து?!”
நோய்த்தொற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. ஆனால் நாம் இயல்பு நிலைக்கு வர பல நாட்கள் ஆகலாம். அதுவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடித்தாலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.ஊரடங்கு - மூடப்பட்ட கன்னியாகுமரி சுற்றுலாத்தலங்கள்
``எழுவர் விடுதலை குறித்து தமிழக அரசு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளது. ஆனால், பல தரப்பினர் "முதல்வர் கையில் விடுதலை செய்யும் பொறுப்பு இருக்க... ஜனாதிபதியை வேண்டுவது ஏன்" என எதிர்க்குரல் எழுப்பி வருகிறார்களே?”
``தமிழக ஆளுநர் எழுவர் விடுதலை குறித்த கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். அது தற்போது கிடப்பில் உள்ளது. இந்நிலையில் முதல்வர், குடியரசு தலைவர் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளார். தண்டனை குறைப்பு அதிகாரம் என்பது மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. தண்டனை குறிப்பு அதிகாரம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் art 161ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆர்டிகல் 72ல் குடியரசுத் தலைவருக்கு என்ன அதிகாரம் உள்ளதோ, அதே அதிகாரம் ஆர்டிகள் 161ல் ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு முழு அதிகாரம் இருக்கும்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது தவறு. அவர் செய்த தவறை நியாயப்படுத்த முடியாது. ”
``இலங்கையில் சீனாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள துறைமுக நகரத்துக்கான அனுமதி மற்றும் இந்திய மத்திய அரசு மௌனம் குறித்த உங்கள் கருத்து?”
``இதனால் சீனாவின் ஆதிக்கம் இங்கு அதிகமாக உள்ளது என உணர முடிகிறது. வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதி யுத்த மற்றும் வணீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. சீனா, வளைகுடா பகுதி வாயிலாக தான் எரிபொருட்களை கொண்டு செல்கிறது. இந்நிலையில் தனது கடல் பாதையில் சிக்கல் வராமல் இருக்க சீனா இலங்கையைப் பயன்படுத்திக்கொண்டு தன் இருப்பை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. துறைமுக நகரத்தில் தன் இருப்பை நிலைநாட்டுவதனை வணிக ரீதியாக மட்டும் இன்றி இராணுவ ரீதியாகவும் சீனா பயன்படுத்திக்கொள்ள கூடும். தொடர்ச்சியாக சீனாவின் அணு நீர்மூழ்கி கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் தென்படவும் பின்னர் செய்தி வெளியானதும் மறைவதுமாக இருந்து வருகிறது. இவை அனைத்தும் இந்தியாவின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.”
http://dlvr.it/S1CrQS
Monday, 7 June 2021
Home »
» `தமிழகம் - தமிழ்நாடு - இந்திய ஒன்றியம்..' - வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் சொல்வதென்ன?