மும்பையில் கடந்த சில நாட்களாக நடந்த அரசியல் நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலாசாஹேப் தோரட் சரத்பவாரை சந்தித்து பேசினார். டெல்லியில் முதல்வர் உத்தவ்தாக்கரே கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முதலில் கூட்டணி தலைவர்களுடன் மோடியை சந்தித்த உத்தவ்தாக்கரே பின்னர் அவர்களை அனுப்பிவிட்டு தனியாகவும் சந்தித்துப் பேசினார். இது அரசியலில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மகாராஷ்டிராவில் அரசியல் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தற்போது சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில், "நாட்டிற்கும், பாஜகவிற்கும் பிரதமர் நரேந்திரமோடி பெரிய தலைவர். பாஜக தங்களது வெற்றிக்கு நரேந்திரமோடிதான் காரணம் என்று 7 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறது. எனவே பாஜகவிற்கு அவர் பெரிய தலைவர். பிரதமர் தேர்தலில் பிரசாரம் செய்யக்கூடாது. அவ்வாறு பிரசாரம் செய்தால் அது நிர்வாகத்தை பாதிக்கும். பிரதமர் நாட்டிற்கு உரிமையானவர். அவர் எந்த வித கட்சிக்கும் உரிமையானவர் கிடையாது" என்று தெரிவித்தார். பாஜக தலைவர்கள் சிவசேனாவுடன் உறவு புதுப்பிக்கப்படும் என்று கூறுவது குறித்து கேட்டதற்கு, புலியுடன் யாரும் நட்பு வைத்துக்கொள்ள முடியாது. யார் நண்பர்களாக இருக்கவேண்டும் என்று புலிகள்தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார். சரத்பவார்
மற்றொரு புறம் சரத்பவார் சிவசேனாவை புகழ்ந்து வருகிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழா மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சரத்பவார், "சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகாவிகாஷ் அகாடி அரசு தனது 5 ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் என்று தெரிவித்தார். அதோடு எதிர்வரும் மக்களவைத்தேர்தல் மற்றும் சட்டமன்றத்தேர்தலிலும் இக்கூட்டணி சேர்ந்தே போட்டியிடும் என்றும் தெரிவித்த சரத்பவார் சிவசேனாவை வெகுவாக பாராட்டி பேசினார். நம்பிக்கை வைக்ககூடிய ஒரு கட்சி சிவசேனா என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அரசு எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று அனைவருக்கும் சந்தேகம் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் சிவசேனா நம்பிக்கையுள்ள கட்சியாகும். எனவே அரசு தனது முழு ஆயுளை பூர்த்தி செய்வதோடு மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் சிறப்பாக வெற்றி பெரும். மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே இந்திரா காந்திக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதை சுட்டிக்காட்டி சிவசேனா நம்பிக்கையுள்ள கட்சி" என்று புகழ்ந்து பேசினார். ஒரு புறம் சிவசேனா பிரதமர் நரேந்திரமோடியை புகழ்கிறது. மற்றொரு புறம் சரத்பவார் சிவசேனாவை புகழ்ந்து கொண்டிருக்கிறார். இதனால் வரும் நாட்களில் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு சிவசேனா தங்களுக்கு முதலமைச்சர் பதவியை இரண்டரை ஆண்டுகள் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனால் பாஜக அதற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து சரத்பவார் உத்தவ்தாக்கரேயின் முதல்வர் ஆசையை தெரிந்துகொண்டு அவரை இழுத்து வந்து காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஷ் அகாடி என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சியமைத்துள்ளன. இந்த ஆட்சியை கவிழ்க்க பாஜக பல முறை முயன்று தோற்றுப்போனது.
http://dlvr.it/S1TKpJ
Friday, 11 June 2021
Home »
» 'நாட்டிற்கும், பாஜகவிற்கும் பெரிய தலைவர் பிரதமர் மோடி' - சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத்!