விரைவில் இரண்டாவது தவணையாக ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ''கொரோனாவை கட்டுப்பட்டுத்த முழு ஊரடங்கு தவிர வேறு வழியேயில்லை. எனினும் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை உணர்ந்து பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து மக்கள் ஒத்துழைத்தால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கலாம். முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் 7 ஆயிரத்தை எட்டிய பாதிப்பு தற்போது 2 ஆயிரமாக குறைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் இது முழுமையாக குறைந்துவிடும். முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களில் குறிப்பிட்ட பிரிவினருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். அதனால்தான் கொரோனா நிவாரண நிதியாக முதல்கட்டமாக நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கியுள்ளோம். கூடிய விரைவில் இரண்டாவது தவணையாக ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்கப்படும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காக்க ஏராளமான உட்கட்டமைப்பு வசதிகளை கடந்த 3 வாரக்காலத்தில் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. இதன் காரணமாக படுக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு என்கிற சூழல் இப்போது இல்லை. கொரோனாவை வென்று விரைவில் வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்'' இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
http://dlvr.it/S0qm51
Tuesday, 1 June 2021
Home »
» மக்கள் ஒத்துழைத்தால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி - முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை