கேரள மாநிலம் கொல்லம் குண்டற, கோயில் முக்கு பகுதியில் ஒரு வீட்டில் கிணறு வெட்டும் பணி நடந்தது. நூறு அடி ஆழம் வரை கிணறு வெட்டப்பட்டது. கிணற்றின் அடிப்பகுதியில் கிடந்த சேற்றை அகற்றி தண்ணீர் ஊற்றெடுக்கிறதா என்பதையும் பார்க்க நேற்று தொழிலாளர்கள் சென்றுள்ளனர். முதலில் இரண்டு தொழிலாளர்கள் கிணற்றில் இறங்கியுள்ளனர். கிணற்றின் ஆழத்தில் இறங்கிய அவர்களுக்கு மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனே அவர்கள் அதுபற்றி கிணற்றின் மேல் பகுதியில் நின்றுகொண்டிருந்த தொழிலாளர்களுக்கு சிக்னல் கொடுத்துள்ளனர். அவர்களைக் காப்பாற்ற மேலும் இரண்டு தொழிலாளர்கள் கிணற்றில் இறங்கியுள்ளனர். ஆனால் அவர்களும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறலுக்கு ஆளானார்கள். இதையடுத்து கிணற்றில் நான்கு பேர் சிக்கியுள்ளது குறித்து காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது. குண்டற தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கிணற்றில் இறங்கி நான்குபேரையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.ஆக்ஸிஜன் சிலிண்டருடன் மீட்புப்பணியில் தீயணைப்பு வீரர்
மீட்புப்பணிக்காக கிணற்றில் இறங்கிய தீயணைப்பு வீரர் ஒருவர் ஆக்ஸிஜன் கிடைக்காமல் உடல் தளர்ந்து மயக்க நிலைக்குச் சென்றார். உடனே அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாசம் பொருத்திய தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சில மணி நேர போராட்டத்திற்குப் பிறகு நான்கு தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர்.
அதில் இரண்டு தொழிலாளர்களுக்கு மட்டுமே சுவாசம் இருந்தது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது நான்கு தொழிலாளர்களும் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் கூறுகையில், "கிணறு வெட்டும் தொழிலாளிகளான ராஜன்(35), சோமராஜன்(54), சிவபிரசாத் (24), மனோஜ்(32) ஆகியோர் கிணற்றில் இறங்கியபோது ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறந்துள்ளனர்.மரணமடைந்த கிணறு வெட்டும் தொழிலாளர்கள்
கிணற்றுக்குள் ஆக்ஸிஜன் இல்லாததால் தீயணைப்பு வீரர் ஒருவர் மயக்க நிலைக்குச் சென்றுவிட்டார். அவர் இப்போது நலமாக உள்ளார். கிணற்றுக்குள் விஷ வாயு இருக்கலாம் எனக் கருதுகிறோம். எனவே கிணற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கிணற்றைச் சுற்றி முள் வேலி அமைத்துள்ளோம்" என்றனர். வறுமை காரணமாக தினக்கூலி அடிப்படையில் கிணறு வெட்டச் சென்ற தொழிலாளர்கள் மரணமடைந்த சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/S3r43f
Friday, 16 July 2021
Home »
» ஆக்ஸிஜன் கிடைக்காமல் நான்கு தொழிலாளர்கள் மரணம்; 100 அடி ஆழத்தில் கிணறு வெட்ட இறங்கியபோது பரிதாபம்!