மும்பையைச் சேர்ந்த 26 வயதான இளம் மருத்துவர் 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற பின் இரண்டு முறை தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2019-ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது வரை உலகை அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகள் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்புமருந்துகளைக் கண்டுபிடித்து அவற்றை மக்களுக்கு செலுத்தி வருகின்றன. அந்த வகையில் தடுப்பூசிகளின் செயல்பாடுகள் குறித்தும், புதிது புதிதாக உருமாறும் கொரோனா வைரஸ் வேரியன்ட்கள் குறித்தும் உலக அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. COVID-19 patient/ Representation Image
Also Read: Covid Questions: 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அடுத்து பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டுமா?
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த 26 வயதான இளம் பெண் மருத்துவர் ஒருவருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் ஸ்ருஷ்டி ஹலாரி, மும்பையின் முலுன்ட் பகுதியில் உள்ள வீர் சாவர்க்கர் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான பிரிவில் பணியில் இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 17-ம் தேதியன்று முதன்முதலில் இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பெரிய அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்தது.
அதன்பின் கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டின் முதல் டோஸை இந்த ஆண்டு மார்ச் 8 -ம் தேதியும், இரண்டாவது டோஸை ஏப்ரல் 29-ம் தேதியும் போட்டுக்கொண்டார். அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இருப்பினும், தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு மாதம் கழித்து மே 29-ம் தேதி மருத்துவர் ஹலாரி இரண்டாவது முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இந்த முறை லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அதன் பின் மீண்டும் ஜூலை 11-ம் தேதி இவருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இந்த முறை அவரின் குடும்பத்தில் உள்ள நான்கு பேரும் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து மருத்துவர் ஹலாரி கூறுகையில், ``மூன்றாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும் நான் அதிகம் கஷ்டப்பட்டேன். நானும் என் குடும்பமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். ரெம்டெசிவிர் மருந்து தேவைப்பட்டது. ஸ்ருஷ்டி ஹலாரி
மேலும் என் சகோதரருக்கும் தாய்க்கும் நீரிழிவு நோய் உள்ளது. என் தந்தைக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு பிரச்னைகள் உள்ளன. என் சகோதரருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தது, எனவே அவருக்கு இரண்டு நாள்கள் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது'' என்றார்.
இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், ``கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் நோய்த்தாக்கம் ஏற்படாது என்பதில்லை. இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்படலாம்.
ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொண்டால் நோயின் தாக்கம் குறைவாகவோ, மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய அவசியம் இல்லாத வகையிலோ இருக்கும். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் கொரோனா பாதிப்பு ஏற்படும்போது, அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்காது.
இரண்டு டோஸ்கள் செலுத்திக் கொண்ட பின்னும் கொரோனா பாசிட்டிவ் ஆனவர்கள் இருக்கிறார்கள். எல்லா வயதினருக்கும், இணை நோயாளிகளுக்கும் நோய்த்தொற்று ஏற்படக்கூடும். ஆனால் தடுப்பூசி அதன் விளைவைக் குறைத்து நோயாளி விரைவாக குணமடைய உதவுகிறது'' என்று தெரிவித்துள்ளனர். Covid-19 Vaccine
Also Read: Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்?
மேலும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட ஆய்வில், இந்தியா முழுவதிலும் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் தடுப்பூசிகளில் குறைந்தபட்சம் ஒரு டோஸ் போடப்பட்டவர்களின் 677 கொரோனா பாசிட்டிவ் மாதிரிகளில், 67 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும், மூன்று பேர் மட்டுமே இறந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
http://dlvr.it/S4fc1t
Thursday, 29 July 2021
Home »
» 13 மாதங்களில் 3 முறை கொரோனா; தடுப்பூசிக்குப் பிறகும் தொற்றுக்கு உள்ளான மருத்துவர்; என்ன நடந்தது?