மும்பையில் சனிக்கிழமை இரவிலிருந்து ஞயிற்றுக்கிழமை அதிகாலை வரை கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் 6 மணி நேரத்தில் 156 மிமீ அளவுக்கு மழை கொட்டித்தீர்த்தது. சாந்தாகுரூசில் அதிகபட்சமாக 200 மிமீ அளவுக்கு மழை பெய்தது. இதனால் சுன்னாப்பட்டி, சயான், தாதர், அந்தேரி, மலாடு, போரிவலி, காந்திவலி, ஹிந்த்மாதா, செம்பூர், குர்லா போன்ற பகுதியில் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு மும்பையின் உயிர்நாடியாகக் கருதப்படும் புறநகர் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. தாதர், பரேல், மாட்டுங்க, சயான் , குர்லா மற்றும் மாட்டுங்கா பகுதியில் உள்ள ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் நிரம்பியது.ரயில் நிலையத்தில் தேங்கிய தண்ணீர்
Also Read: இந்திய மாநிலங்களின் வரலாறு: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே பிரிக்கப்பட்ட மொழிவாரி மாநிலம்?!|பகுதி-3
இரவு நேரத்தில் புறப்பட வேண்டிய பல நீண்ட தூர ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. மத்திய ரயில்வே மட்டுமல்லாது மேற்கு ரயில்வேயிலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரத்தில் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பல மணி நேரம் புறநகர் ரயிலில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. போரிவலி பகுதியில் மழை நீர் கார் ஒன்றை அடித்துச் சென்றது. மும்பையில் இரண்டு இடங்களில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 15 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். செம்பூர் பாரத் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான குடிசை வீடுகள் சேதமடைந்தன. இதில் பொதுமக்கள் பல இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களே மீட்பு பணியில் ஈடுபட்டு 10 பேரின் உடல்களை மீட்டனர். பேரிடர் மேலாண்மை படையினர் 2 பேரின் உடல்களை மீட்டனர். இடிபாடுகளில் மேலும் 8 பேர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று விக்ரோலியிலும் நிலச்சரிவு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நள்ளிரவில் கனமழை பெய்ததால் மீட்புப்பணியை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. செம்பூரில் மட்டும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 12 பேர் உடல்கள் ராஜாவாடி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை தகவல் வெளியிட்டுள்ளது.
இது தவிர விக்ரோலியில் 3 பேர் மற்றும் செம்பூர் மற்றும் விக்ரோலியில் சுவர் இடிந்து 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியதால் சிறிது நேரம் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏற்கனவே மும்பையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததால் புனேயில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மும்பையில் வந்து முகாமிட்டு இருந்தனர். மும்பையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கூறி வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலையில் பெய்த கனமழையால் மத்திய ரயில்வேயில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
http://dlvr.it/S3y3ll
Sunday, 18 July 2021
Home »
» மும்பையில் இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை: நிலச்சரிவால் வீடுகள் இடிந்து 15 பேர் உயிரிழப்பு!