சமூக வலைத்தளங்கள் மூலம் முகம் தெரியாதவர்களுடன் பழகி ஏமாறும் சம்பவங்கள் அவ்வப்போடு நடக்கின்றன. இப்படி ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த ஒருவர் கொல்கத்தாவைச் சேர்ந்த மைனர் பெண்ணிடம் நடிகர் ஷாருக்கானை நேரில் பார்க்க வைப்பதாகக்கூறி மும்பை அழைத்து வந்து பிடிபட்டுள்ளார். சுபம் ஷேக்(43) என்பவர் பேஸ்புக்கில் தனது மகனின் புகைப்படத்தை வைத்து அடிக்கடி சாட் செய்து கொண்டிருந்தார். அப்போது மேற்கு வங்க மாநிலம் பலஷிபாராவைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுடன் பேஸ்புக் மூலம் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்
இருவரும் அடிக்கடி பேஸ்புக் மூலம் சாட் செய்துள்ளனர். மைனர் பெண்ணிற்கு ஷாருக்கானை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. இதை தெரிந்துகொண்ட ஷேக் தான் மும்பையில் ஷாருக்கானை அவரது வீட்டிற்கே அழைத்துச் சென்று காட்டுவதாக அந்த மைனர் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறினார். அப்பெண்ணும் அதற்கு சம்மதித்தார். இதையடுத்து அப்பெண்ணை மும்பைக்கு அழைத்து வர திட்டமிட்டார். ஷேக்கிற்கும் மேற்கு வங்கம்தான் சொந்த ஊர் ஆகும். அதேசமயம் மைனர் பெண் முன் நாம் நேரடியாக சென்றால் பழகியது வயதானவர் என்று அப்பெண்ணிற்கு தெரிந்து தன்னுடன் வர மாட்டார் என்று கருதி அப்பெண்ணிடம் ஒரு புதிய கதையைத் தெரிவித்தார். தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால் தன்னால் வர முடியாது என்றும் எனது அப்பா உன்னை அழைத்து சென்று ஷாருக்கானை காண்பிப்பார் என்றும் ஷேக் தெரிவித்தார்.
அப்பெண்ணும் அதனை நம்பியுள்ளார். உடனே அப்பெண்ணை டியூசன் சென்டரில் இருந்து அழைத்துக்கொண்டு ஷேக் கொல்கத்தா வந்தார். அவர் அப்பெண்ணுடன் அங்கிருந்து மும்பை செல்லும் ரயிலில் ஏறினார். அப்பெண் வீட்டிற்கு வராதது குறித்து அவரது பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். கொல்கத்தா ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தபோது அப்பெண் ரயில் நிலையத்திற்குள் ஷேக்குடன் வருவது தெரிந்தது. அதோடு அவர் மும்பை செல்லும் ரயிலில் ஏறுவதைத் தெரிந்துகொண்டனர். உடனே கொல்கத்தா ரயில்வே போலீஸார் மும்பை ரயில்வே போலீஸாரைத் தொடர்புகொண்டு இது தொடர்பாக தகவல் கொடுத்தனர். உடனே கொல்கத்தாவில் இருந்து வந்த ரயிலை தாதர் ரயில் நிலையத்தில் மும்பை ரயில்வே போலீஸார் கண்காணிக்க ஆரம்பித்தனர். அப்பெண் முக்கவசம் அணிந்து ரயிலில் இருந்து இறங்கினார். அவரது முகக்கவசத்தை அகற்றி பார்த்த போது அப்பெண் அடையாளம் காணப்பட்டு அவர் மீட்கப்பட்டார். அவரை அழைத்து வந்த ஷேக் கைது செய்யப்பட்டார். மைனர் பெண் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். கொல்கத்தா போலீஸார் அப்பெண்ணை அவரது பெற்றோருடன் வந்து அழைத்து செல்ல மும்பை வந்து கொண்டிருக்கின்றனர். பெண்கள் குறிப்பாக மைனர் பெண்கள் சமூக வலைத்தளத்தில் பழகும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
http://dlvr.it/S47jvk
Wednesday, 21 July 2021
Home »
» மும்பை: பேஸ்புக்கில் மகனின் புகைப்படம்; ஷாருக்கானை சந்திக்கலாமென 17 வயது பெண்ணை அழைத்து வந்தவர் கைது