ஒரே பெயரில் இருக்கும் இரண்டு பேர், ஒரே துறையில் இருந்தால் குளறுபடி ஏற்படுவது வழக்கம். அது போன்ற ஒரு குளறுபடியில் மும்பை மாநகராட்சியில் பணியாற்றுவதாக கூறி ஒருவர் 24 வருடங்களாக சம்பளம் வாங்கி ஏமாற்றி இருக்கிறார். சோபன் மாருதி சபாலே என்பவர் 1989ம் ஆண்டு மும்பை மாநகராட்சியின் எப் தெற்கு வார்டில் பில்டிங் சூபர்வைசராக வேலைக்கு சேர்ந்தார்.
1993-ம் ஆண்டு அதே பெயரில் ஒருவர் பைகுலாவில் உள்ள தண்ணீர் துறையில் கார்டன் பராமரிப்பாளராக வேலைக்கு சேர்ந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் இரண்டு பேருக்கும் ஒரே பெயர், ஒரே பிறந்த தேதி, ஒரே பள்ளி சான்றிதழ் என எல்லாம் ஒன்றாக இருந்தது. இதனால் இரண்டு பேருக்கும் மாநகராட்சி நிர்வாகம் சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்தது. அதாவது 1989-ம் ஆண்டு சேர்ந்த சோபன் என்று நினைத்து 1993-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தவருக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. உண்மையில் 1993-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த சோபனுக்கு குறைவான சம்பளமே கிடைக்கவேண்டும். ஆனால் ஆள்மாறாட்டம் செய்து 1993-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த சோபன் 24 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார்.மும்பை மாநகராட்சி கட்டிடம்
2017-ம் ஆண்டுதான் மாநகராட்சி ஊழியர் ஒருவர் இரண்டு பேருக்கும் ஒரே பெயர், பிறந்த தேதி மற்றும் படித்த பள்ளி, பள்ளியில் இருந்து வெளியேறிய வருடம் போன்றவை ஒன்றாக இருந்ததை கண்டுபிடித்தார். இது குறித்து உடனே உயர் அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். உடனே இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. உடனே இரண்டு பேருக்கும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. வேலையில் சேரும் போது தாக்கல் செய்த ஆவணங்களை கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். 1989-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த சோபன் உடனே ஆவணங்களை கொண்டு வந்து தாக்கல் செய்தார். ஆனால் 1993-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த சோபன் விசாரணை நடப்பதை தெரிந்து கொண்டு சான்றிதழ்களை கொண்டு வந்து தாக்கல் செய்யவில்லை.
அதோடு கார்டன் பராமரிப்பு வேலைக்கு வருவதையும் நிறுத்திவிட்டார். இதனால் பணியில் சேரும்படி கூறி 1993-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த சோபனுக்கு மும்பை மாநகராட்சி தண்ணீர் துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த நோட்டீஸ் 1989-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த சோபனுக்கு சென்றது. உடனே அவர் நேரில் சென்று அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்த போதுதான் 1993-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த சோபன் ஆள் மாறாட்டம் செய்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. கைது
24 வருடத்தில் ரூ.43.31 லட்சம் அளவுக்கு மோசடி செய்து சம்பளமாக வாங்கியுள்ளார். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து 1993-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த சோபனை கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மும்பை மாநகராட்சி துப்புரவு துறையில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர் வேலைக்கு செல்லாமல் வேறு ஒரு ஊழியரை குறைந்த சம்பளத்திற்கு நியமித்துவிட்டு வீட்டில் இருந்து கொண்டு சம்பளம் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்கு அதிகாரிகளும் துணை போகின்றனர். துப்புரவு துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பாதிப்பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
Also Read: `மும்பை பார்ட்டிகளில் 'போதை கேக்' சப்ளை'- மனோதத்துவ டாக்டர் கைது!
http://dlvr.it/S3vSdx
Saturday, 17 July 2021
Home »
» `ஆள்மாறாட்டம் மூலம் 24 வருடமாக சம்பளம் வாங்கிய நபர்!’ - மும்பை மாநகராட்சியில் அதிர்ச்சி