கல்வி அறிவில் மிகைபெற்ற மாநிலமான கேரளத்தில் வரதட்சணைக் கொடுமை படு மோசமாக உள்ளது. நன்கு படித்த பெண்களாக இருந்தாலும் வரதட்சணை கொடுமைக்கு உள்ளாகி தற்கொலை வரை செல்லும் அவல நிலை உள்ளது. அதுமட்டுமல்லாது தற்கொலைக்குத் தூண்டி உயிரைக் காவு வாங்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. கடந்த சில மாதங்களில் கொல்லம் மாவட்டத்தில் மட்டும் நாட்டை அதிர்ச்சியடையச் செய்த இரண்டு சம்பவங்கள் அரங்கேறின.
கொல்லம், அஞ்சல் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணான உத்ராவை பத்தணம்திட்டா மாவட்டம் பறக்கோடு பகுதியைச் சேர்ந்த சூரஜ் 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின்போது 112 பவுன் நகை, மாருதி ஸுசுகி பெலினோ (Baleno) கார் எனப் பலமான வரதட்சணை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அந்த வரதட்சணைகள் போதாது என மாதம்தோறும் பெண் வீட்டாரிடம் இருந்து பணம் வாங்கியுள்ளார் சூரஜ். அதிலும் திருப்தி அடையாத சூரஜ், மனைவியைக் கொலை செய்துவிட்டு வேறு திருமணம் செய்யத் திட்டமிட்டார். முதலில் தனது வீட்டில் வைத்து ஒரு பாம்பை விட்டு மனைவியைக் கடிக்க வைத்தார். அதில் அவர் உயிர் தப்பிவிட்டார்.உத்ரா - சூரஜ்
Also Read: `திருமணத்தை வியாபார ஒப்பந்தமாகத் தரம் தாழ்த்தாதீர்கள்!' - இளம்பெண்ணின் மரணம் குறித்து பினராயி விஜயன்
பாம்பு கடித்து கொல்லத்தில் உள்ள தனது தாய் வீட்டில் சிகிச்சையில் இருந்த மனைவியைக் காண கருநாகப்பாம்புடன் சென்றார் சூரஜ். அங்கேயும் பாம்பைக் கடிக்க வைத்து மனைவியைக் கொலை செய்த சூரஜ், போலீஸில் வசமாகச் சிக்கி கடந்த ஓர் ஆண்டாக சிறையில் உள்ளார். அதுபோல கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி கொல்லம் நிலமேடு பகுதியில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவி விஸ்மயா, மரணம் மேலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கணவன் வீட்டு பாத்ரூமில் சடலமாகத் தொங்கிய விஸ்மயாவை மீட்டு, வீட்டிலிருந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர் . விஸ்மயாவை அவரின் கணவர் கிரண்குமார் தாக்கிய புகைப்படங்களும், அதுகுறித்து விஸ்மயா தன் உறவினர்களுக்கு அனுப்பிய வாட்ஸஅப் சாட்டிங் ஆவணங்களும் போலீஸில் சிக்கின. இதையடுத்து மோட்டார் வெஹிக்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த கிரண்குமார் கைது செய்யப்பட்டார். இதெல்லாம் உதாரணங்கள்தான். இதுபோல பல வரதட்சணை மரணங்கள் கேரளத்தில் அரங்கேறியுள்ளன.கிரண்குமார் - விஸ்மயா
Also Read: கேரளா: வரதட்சணையாகக் கொடுத்த காரின் மதிப்பு குறைவு; இறந்துகிடந்த மனைவி; நடந்தது என்ன?
கேரளத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வரதட்சணைக் கொடுமையால் கொலை மற்றும் தற்கொலைகளால் 66 பெண்கள் இறந்துள்ளனர். 10 பெண்களுக்குத் திருமணங்கள் நடந்தால் அதில் 7 பெண்கள் வரதட்சணை பிரச்னையை எதிர்கொள்கிறார்கள். 2016 முதல் கடந்த ஏப்ரல் வரை வரதட்சணைக்காகப் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாக 15,143 வழக்குகள் கேரளத்தில் பதிவாகியுள்ளதாகக் காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து கேரளத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வரதட்சணை தடுப்பு அதிகாரியை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சரும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சருமான வீணா ஜார்ஜ். இதுகுறித்து அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மாநிலத்தில் வரதட்சணை தடுப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து எல்லா மாவட்டங்களிலும் வரதட்சணை தடுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு பகுதிகளில் ஏரியா அலுவலகங்களில் மட்டுமே அதிகாரிகள் இருந்தனர்.கேரள பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
இப்போது 14 மாவட்டங்களிலும் தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மாவட்ட அலுவலர்கள் மாவட்ட வரதட்சணை தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுபோல பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இயக்குநர் வரதட்சணை தடுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வரதட்சணைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்காக இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆலோசனைக் குழு உருவாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. கல்லூரிகள் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
http://dlvr.it/S3vrfQ
Saturday, 17 July 2021
Home »
» வரதட்சணைக் கொடுமை: 5 ஆண்டுகளில் 66 பெண்கள் தற்கொலை; மாவட்டந்தோறும் அதிகாரிகளை நியமித்த கேரளா!