எம்.எல்.ஏ சீட் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் அளித்த புகாரில், மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்த புவனேஷ் குமார் (29). இவர், பாஜகவில் ஆரணி நகர தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் புவனேஷ் குமார் கடந்த 30-ஆம் தேதி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.அந்த புகாரில், " ஆரணி தொகுதியில் பாஜக சார்பில் எம்எல்ஏ சீட்டு கேட்டு, சென்னை பெரம்பூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் விஜயராமனை அணுகினேன். விஜயராமன் அப்போதைய பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்தவரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டியின் நெருங்கிய உதவியாளரான நரோத்தமனிடம் எம்.எல்.ஏ சீட் குறித்து கேட்டுள்ளார். இவர்கள் இருவரும் எம்.எல்.ஏ சீட்டு வாங்கித் தருவதாக உறுதியளித்து 1 கோடி ரூபாய் கேட்டனர். இதனை நம்பி, விஜயராமன் மற்றும் நரோத்தமன் ஆகியோரிடம் முதல் தவணையாக 50 லட்சம் ரூபாயை சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து கொடுத்தேன். மேலும் பட்டியலில் பெயர் வந்தவுடன் மீதமுள்ள 50 லட்சம் ரூபாயை தருமாறு நரோத்தமன் கூறினார். ஆனால் பாஜக வேட்பாளர் பட்டியலில் ஆரணி தொகுதி எனக்கு ஒதுக்கப்படவில்லை. இது தொடர்பாக மத்திய அமைச்சர் உதவியாளர் நரோத்தமனிடம் கேட்டபோது, திருவண்ணாமலை தொகுதியில் நிற்குமாறு தெரிவித்தார். இதனையடுத்து திருவண்ணாமலை தொகுதிக்கு எம்.எல்.ஏ சீட்டை எனது சகோதரியான வசந்திக்கு தருமாறு கேட்டேன். ஆனால் வேட்பாளர் பட்டியலில் திருவண்ணாமலை தொகுதியை என் சகோதரியான வசந்திக்கும் ஒதுக்கவில்லை. இருப்பினும் வேட்புமனுத் தாக்கல் செய்யுமாறு நரோதமன் தெரிவித்தார். அதன்படி வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு சில காரணங்களால் எனது சகோதரி வசந்தியின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து பணத்தை வாங்கிய நரோத்தமன் மற்றும் அவரது தந்தை சிட்டிபாபு, அதிமுக பிரமுகர் விஜயராமன், அவரது மகன் சிவபாலாஜி ஆகியோரிடம் பணத்தை கேட்டும் தரமறுத்துவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்த மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் சென்று முறையிட்டபோது, மத்திய அமைச்சர் செல்போன் மூலம் தொடர்புகொண்டு நரோத்தமன் மற்றும் அவரது தந்தை சிட்டி பாபுவிடம் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் மறுபடியும் பணத்தை கொடுக்க முடியாது எனக் கூறி அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக புவனேஷ் குமார் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக சட்ட ஆலோசனை பெற்று தற்போது பாண்டி பஜார் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக மத்திய அமைச்சர் உதவியாளராக இருந்த நரோத்தமன் மற்றும் அவரது தந்தை சிட்டிபாபு, அதிமுக பிரமுகர் விஜயராமன் மற்றும் அவரது மகன் சிவபாலாஜி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 294(பி) - ஆபாசமாக திட்டுதல், 406 - நம்பிக்கை மோசடி, 420 - பண மோசடி, 506(1) - கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.
http://dlvr.it/S3rdmZ
Friday, 16 July 2021
Home »
» சென்னை: எம்.எல்.ஏ சீட் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி; 4 பேர் மீது வழக்குப்பதிவு