மும்பையில் சனிக்கிழமையில் இருந்து விடாது கனமழை பெய்த மழை இன்றுதான் சற்று ஓய்ந்துள்ளது. இம்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்து மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த மழையின்போது இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை சாலையில் வெள்ளப்பெருக்கு
மேலும் தானே பார்சி மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 3 பேரை உள்ளூர் மக்கள் உயிரோடு மீட்டனர். தீயணைப்புத் துறையினர் போராடி இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்கள் உடலை மீட்டனர். அதோடு மீராரோட்டில் 9 வயது சிறுவன் திறந்த சாக்கடையில் விழுந்தான். அவன் உடல் இன்னும் மீட்கப்படவில்லை. இது தவிர தானே மற்றும் பால்கரில் 3 பேர் மழை நீரில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இதனால் மும்பை மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்தது. நவிமும்பை பேலாப்பூரில் கார் ஒன்று மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. காரில் 3 பேர் இருந்தனர். அந்த காரை மழை நீர் அருகில் உள்ள ஏரிக்கு அருகில் இழுத்துச்சென்றது. மீட்புக்குழுவினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
வசாய் ரோட்டில் 70 வயது முதியவர் மழை வெள்ளத்தில் நடு ரோட்டில் அமர்ந்து 4 மணி நேரம் போராடினார். ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் தனது வீட்டிற்குள் மழை நீர் புகுந்து விடுவதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடையை சரியாக தூர்வாருவது கிடையாது என்றும் கூறி அசோக் என்பவர் மழை நீரில் நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் செய்தார். இது குறித்து அசோக் கூறுகையில், " 2017-ம் ஆண்டில் இருந்து மழை நீர் எனது வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறது.நடுரோட்டில் அசோக்
2017-ம் ஆண்டில் வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் எனக்கு 1.50 லட்சம் செலவானது. மழை நீர் வடிய நான்கு நாள்கள் பிடித்தது" என்றார். அவரது மகள் கோமல் இது குறித்து கூறுகையில், "மழை காலத்தில் வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடுவதால் எங்களால் வாழவே முடியவில்லை. சாக்கடை நடுவே மின் கம்பம் ஒன்று இருக்கிறது. இதனால் மழை நீர் சரியாக செல்ல முடியவில்லை என்று தெரிவித்தார். அசோக் இப்போது 40க்கும் மேற்பட்ட பவர் பிளாக் கற்களை வாங்கி வந்து வீட்டில் அடுக்கி வைத்து அதன் மீது குளிர்சாதனப்பெட்டி, படுக்கை போன்ற முக்கிய பொருட்களை வைத்திருக்கிறார். 4 மணி நேரம் போராடியும் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வந்து என்னவென்று கேட்கவில்லை என்கிறார்.
இதற்கிடையே மும்பையில் மழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு ஆளும் சிவசேனா நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப் அளித்த பேட்டியில், "ஒவ்வொரு ஆண்டும் மழை நீர் விரைவாக வெளியேற சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மாநகராட்சி கூறுகிறது. ஆனால் அதனை நிறைவேற்ற தவறி விடுகிறது. சாக்கடைகளை தூர் வார பல நூறு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால் 25 சதவீத பணிகள் கூட முடியவில்லை. பணிகள் முடியவில்லையெனில் பணம் எங்கு போனது. நிச்சயம் மாநகராட்சியின் அனைத்து மட்டத்திலும் ஊழல் நடந்திருக்கவேண்டும்" என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிவசேனாவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பனிப்போர் நடந்துகொண்டிருக்கிறது. இப்போது சிவசேனா ஆட்சி செய்யும் மும்பை மாநகராட்சி மீது காங்கிரஸ் கட்சி ஊழல் புகார் தெரிவித்திருப்பது இரு கட்சிகளிடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது.
http://dlvr.it/S44CKy
Tuesday, 20 July 2021
Home »
» மும்பை : `சாக்கடையை சரியாகத் தூர்வாருங்கள்; கொட்டும் மழையில் 70 வயது முதியவர் போராட்டம்!'