பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகுவில் வசித்து வருகிறார். அவரது வீடான பிரதீக்ஷா இருக்கும் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து 2017-ஆம் ஆண்டு இச்சாலையை 45 அடியில் இருந்து 60 அடியாக விரிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இச்சாலை விரிவாக்க பணிகளுக்கு நடிகர் அமிதாப்பச்சன் வீடு உட்பட சில வீடுகளின் தடுப்பு சுவர்கள் இடையூறாக இருந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு சாலை விரிவாக்க பணிகளுக்கு குறிப்பிட்ட அளவு நிலம் கொடுக்கும்படி கேட்டு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு வீட்டு உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இத்திட்டம் கிடப்பில் இருந்தது. ஆனால் 2019-ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் வீட்டுத் தடுப்புச் சுவர் தவிர்த்து பிற வீடுகளின் தடுப்புச் சுவரை இடித்து சாலையை மாநகராட்சி நிர்வாகம் விரிவுபடுத்தத் தொடங்கியது. Amithabh bachchan
சாலை விரிவாக்க பணி முடிவுக்கு வர இருக்கிறது. ஆனால் அமிதாப் பச்சன் வீட்டு தடுப்பு சுவர் மட்டும் இடிக்கப்படாமல் அந்த இடத்தில் மட்டும் சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. சமீபத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் துலிப் மிராண்டா இது குறித்து உள்ளூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பிரச்னையைக் கிளப்பினார். திட்டமிட்டு அமிதாப் பச்சன் வீட்டு தடுப்புச் சுவரை மட்டும் இடிக்காமல் இருப்பதாக தெரிவித்த கவுன்சிலர், "இதனால் சாலை விரிவாக்க பணி முடியாமல் இருப்பதாக தெரிவித்தார். அமிதாப் பச்சன் வீட்டுக்கு அருகில் உள்ள வீடுகளில் தேவைப்படும் நிலத்தை எடுத்துக்கொண்ட பிறகு இதில் மட்டும் ஏன் நிலத்தை எடுக்காமல் இருக்கிறீர்கள் " என்று கேட்ட கவுன்சிலர் "இதில் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையெனில் லோக் ஆயுக்தாவில் புகார் செய்வேன் " என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் கவுன்சிலர் மிரண்டாவிற்கு கடிதம் எழுதியிருக்கிறது.
அக்கடிதத்தில், 'பிரதிக்ஷா இல்லத்தில் எடுக்க வேண்டிய நிலத்தை சர்வே அதிகாரிகள் அளந்து எல்லையை குறித்துக் கொடுத்தவுடன் நிலம் கையகப்படுத்தப்படும். 2019-ஆம் ஆண்டே சர்வே நடத்த விண்ணப்பித்து அதற்கு பணமும் செலுத்திவிட்டோம். 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாநகராட்சியும், சர்வே துறையும் இணைந்து அளந்து இடிக்க வேண்டிய பகுதியைக் கோடிட்டு காட்டியது. ஆனால் வரைபடத்தில் சில குளறுபடிகள் இருப்பதாக சர்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது' என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்து சர்வேயர் அறிக்கை தாக்கல் செய்துவிட்டால் உடனே அமிதாப்பச்சன் வீட்டுத் தடுப்புச் சுவரை இடித்து சாலை விரிவாக்கப் பணியை நிறைவு செய்வோம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் இது தொடர்பாக மும்பை புறநகர் மாவட்ட ஆட்சி தலைவர் மிலிந்த் போர்கருக்கு கடிதமும் எழுதியிருக்கின்றனர். அக்கடிதத்தில், 'சாலை விரிவாக்கத்திற்கு சர்வே அதிகாரிகள் விரைந்து பிரக்திக்ஷா எல்லையை அளந்து கொடுக்க உத்தரவிடவேண்டும்' என்று அதில் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் இது குறித்து அமிதாப் பச்சன் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஏற்கனவே நடிகை கங்கனா ரணாவத் இல்லத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் திடீரென இடித்து கோர்ட்டின் கண்டனத்திற்கு ஆளானார்கள். இப்போது அது போன்ற ஒரு நிலை வரக்கூடாது என்பதற்காக மாநகராட்சி அதிகாரிகள் இவ்விவகாரத்தில் நிதானமாக செயல்பட்டு வருகின்றனர்.
http://dlvr.it/S2w4Zs
Friday, 2 July 2021
Home »
» மும்பை: `சாலை விரிவாக்கம்; நடிகர் அமிதாப் பச்சன் வீட்டுச் சுவரை மாநகராட்சி இடிக்க முடிவு?!'